நாட்டில் ஏற்பட்டிருக்கும் இறுக்கமான இந்த நேரத்திலாவது "முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு" பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என உலமா கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது பற்றி அக்கட்சி தெரிவித்துள்ளதாவது,
முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு எனும் போது ஒவ்வொரு கட்சியும் தம் கட்சியை கலைத்துவிட்டு கூட்டமைப்பாக செயற்படுவது என்பதல்ல. மாறாக முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் செயலாளர்களும் ஒன்றிணைந்து கூட்டமைப்பாக செயற்பட வேண்டும் என்பதையே இங்கு சொல்கிறோம்.
இந்த கூட்டமைப்பிற்கு தனியான தலைவர் ஒன்றில்லாது கூட்டமைப்பில் இணையும் அனைத்து முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் சம அதிகாரம் கொண்ட தலைமைத்துவ சபையை கொண்டிருக்கும். கூட்டமைப்பின் செயலாளராக இணைந்துள்ள கட்சிகளின் தலைவர்களின் ஆலோசனையின் படி கட்சிகளின் செயலாளர்களில் ஒருவர் அல்லது வேறொருவர் நியமிக்கப்படுவார். அவரது பதவிக்காலம் ஒரு வருடமாகவே இருக்கும். மீண்டும் அவரே செயலாளராக செயற்பட வேண்டுமாயின் தலைமைத்துவ சபையின் ஏகோபித்த முடிவு பெறப்பட வேண்டும்.
மேற்படி முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் சிக்கலான பிரச்சினைகளின் போது அரசியல் உயர் மட்டங்களை சந்தித்து தம் கருத்துக்களையும் வேண்டுகோள்களையும் முன் வைக்கும். அவற்றை எழுத்து மூலமும் சமர்ப்பிக்க முடியும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் கூட்டமைப்பின் கடிதத்தலைப்பில் முன் வைக்கும்.
மேற்படி கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் தனியாக இயங்கும் அதேவேளை மேற்படி கருத்துக்களை உள்வாங்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றின் ஊடாக கூட்டிணைந்து செயற்படும். அக்கட்சிகள் தமது சொந்தப்பெயரில் வெளியிடும் கருத்துக்களுக்கு கூட்டமைப்பு பொறுப்பாக முடியாது. ஆனால் கூட்டமைப்பின் முடிவுக்கு அதில் உள்ள அனைத்து கட்சிகளும் கட்டுப்பட வேண்டும்.
இத்தகைய அடிப்படைகளின் அடிப்படையில் முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பை (Muslim Parties Allience) உருவாக்க களத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் கட்சிகளுக்கும் உலமா கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
- முபாறக் அப்துல் மஜீத் மதனி
உலமா கட்சி