பயங்கரவாதம் உலகில் எங்குமே வெற்றிபெற்றதில்லை என்றும் அடிப்படைவாத பயங்கரவாதத்தின் மிலேச்சத்தனமான நோக்கங்களுக்கு இலங்கையரிடையே பிரிவினையை ஏற்படுத்துவதற்கு இடமளிக்க கூடாதென்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
இன்று (08) முற்பகல் கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டு கிழக்கு மாகாண அரச அதிகாரிகள் மற்றும் மாகாணத்தின் முஸ்லிம் இளைஞர் யுவதிகளை சந்தித்தபோதே ஜனாதிபதி அவர்கள் இதனை குறிப்பிட்டார்.
ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் இலங்கையின் பிரச்சினை மட்டுமல்ல அது சர்வதேசத்துடன் தொடர்புடைய பயங்கரவாதச் செயலாகுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இந்த சர்வதேச பயங்கரவாத குழுவுக்கு எதிராக செயற்பட உலகின் பலம்வாய்ந்த நாடுகள் முன்வந்திருக்கும் நிலையில் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களை இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கும் நடவடிக்கைகளை எமது பாதுகாப்பு தரப்பினர் தற்போது மிக வெற்றிகரமான முறையில் முன்னெடுத்திருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும் நாட்டின் தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கம் பாதிக்கப்படும் வகையிலான நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்டு பயங்கரவாதத்திற்கு எந்த வகையிலும் துணைபோக வேண்டாம் என அனைவரிடமும் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி அவர்கள். நாட்டில் தேசிய ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் பலப்படுத்துவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.
கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி குண்டு வெடிப்பு இடம்பெற்ற கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்திற்கு இன்று (08) முற்பகல் சென்ற ஜனாதிபதி அவர்கள் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் கிழக்கு மாகாண அரச அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள் அரச அதிகாரிகள், பாதுகாப்புத் துறை முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட இச்சந்திப்பில் பாதுகாப்புத் துறைகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் தெளிவான மறுசீரமைப்பு நிகழ்ச்சிதிட்டத்துடன்இ நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகள் தற்போது திட்டமிட்ட வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும்இ அந்த நிகழ்ச்சித்திட்டதின் ஊடாக அனைத்து பிரஜைகளும் அச்சமும், சந்தேகமுமின்றி சுதந்திரமான சமூகத்தில் வாழும் உரிமை உறுதிப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை பாதுகாப்புத் தரப்பினர் வெற்றிகரமாக முன்னெடுத்துவரும் நிலையில் இந்த சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கெண்டுவந்து மக்கள் மத்தியில் அச்சத்தையும்இ சந்தேகத்தையும் போக்கி நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு அரச அதிகாரிகள் முன்வர வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்களைத் தொடர்ந்து உயிரைப் பணயம் வைத்து தாய் நாட்டுக்காக தமது பொறுப்புக்களை நிறைவேற்றி வரும் பாதுகாப்புத் துறையினருக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி அவர்கள் நன்றி தெரிவித்ததுடன்இ முஸ்லிம் சமூகத்துடன் நெருங்கி செயற்பட்டு எவ்வித குற்றச்சாட்டும் முன்வைக்கப்படாத வகையில் பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்டு வரும் மனிதாபிமான நடவடிக்கைகளைப் பாராட்டினார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கருத்து தெரிவிக்கையில்இ பாதுகாப்புத் துறையினர் முஸ்லிம் மக்களுடன் சுமூகமாக செயற்பட்டு வருவதாகவும் மக்களின் பாதுகாப்பையும் தேசிய பாதுகாப்பையும் நிலைநாட்டுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் பாதுகாப்புத் துறையினரின் நடவடிக்கைகள் தொடர்பாக முஸ்லிம் மக்கள் எவ்வித முறைப்பாடுகளையும் முன்வைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதி அவர்களின் சாய்ந்தமருது வருகையை முன்னிட்டு சாய்ந்தமருது ஜூம்மா பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனீபாவினால் ஜனாதிபதி அவர்களுக்கு சிறப்பு நினைவுப் பரிசொன்று வழங்கிவைக்கப்பட்டது.
அதன் பின்னர் ஜனாதிபதி அப்பிரதேச முஸ்லிம் இளைஞர், யுவதிகளுடன் சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி , கொடிய பயங்கரவாதத்திற்கு இலங்கையில் இடமளிக்கப்பட மாட்டாதென்றும் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதைப் போன்றே எந்தவொரு இனப்பிரிவினருக்கும் அசௌகரியம் ஏற்படாத வகையில் அரச தலைவர் என்ற வகையில் தான் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
அடிப்படைவாத பயங்கரவாதத்திற்கு இடமளிக்காமல் அதை எதிர்த்து, தாய் நாட்டுக்காக கடமைகளை ஆற்றுமாறு அங்கு கூடியிருந்த இளைஞர், யுவதிகளிடம் தெரிவித்த ஜனாதிபதி முஸ்லிம் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை இஸ்லாமிய மதத் தலைவர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
ஹிஸ்புல்லா அவர்களின் தலைமையில் மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்ட கல்வி நிலையம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி கல்வி அமைச்சினதும் உயர்கல்வி அமைச்சினதும் சட்டதிட்டங்களுக்கு அமைவாக தனியார் பல்கலைக்கழகமாக அதனை முன்னெடுத்து செல்வதற்கு எதிர்பார்ப்பதாகவும், இதன்போது அக்கல்வி நிறுவனத்தில் முன்னெடுக்கப்படும் பாடநெறிகள் தொடர்பாக தெளிவான தீர்வுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியானதொரு பிரதேச சபையை பெற்றுக்கொள்ளல் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி , அவ் விடயத்துடன் சம்பந்தப்பட்ட சகல பிரிவினருடனும் கலந்துரையாடுவதாக தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் பின்னர் கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்தில் குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடத்தையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.
அமைச்சர் தயா கமகே, பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் உள்ளிட்ட மாகாண மக்கள் பிரதிநிதிகளும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கஇ பதிற் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளும் கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் பிரதானிகளும் அரச அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.