18வது திருத்தச் சட்டத்தில் காணப்பட்ட மன்னர் ஆட்சி மற்றும் சர்வாதிகார தோற்றத்தின் காரணமாக புதிதாக 19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை நிறைவேற்றினாலும், அதனூடாக ஒரு அரசியல் தலைமையின் கீழ் பயணிக்க முடியாத நிலை தோன்றி இருப்பதனால் நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் நல்லாட்சி அரசின் கொள்கைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போனதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் 40 வருட பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு இன்று (23) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றபோது அதில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இன்றைய காலகட்டத்தில் நாட்டு மக்களின் எண்ணங்களை புரிந்துகொள்ளும் மக்கள்நேய ஆட்சியே நாட்டுக்கு தேவையாக இருப்பதாகவும் அரசியல் தலைமைகள் நாட்டை நேசிப்பவர்களாக இருக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.
நாட்டின் அபிவிருத்திக்கு வலுவான சக்தியாக கருதப்படும் சுமார் 16 இலட்சம் அரச ஊழியர்கள் ஊழல் மற்றும் மோசடிகளை தவிர்த்து தங்களது கடமைகளை சரிவர ஆற்றுவார்களேயானால் பொதுமக்களின் தேவைகளை துரிதமாக தீர்த்து வைப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.
ஜப்பான் நாட்டின் பிரதான சங்கநாயக்கர் வண.பானகல உபதிஸ்ஸ தேரர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சரான திருமதி. பேரியல் அஸ்ரப், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 40 வருட பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை- (BMICH – 2019.06.23)
எமது நாட்டின் வீடமைப்பு அபிவிருத்தி புரட்சி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தாபிக்கப்பட்டதன் பின்னரே இடம்பெற்றதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு 40 வருடங்கள் பூர்த்தியாவதையிட்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்திலேயே பாரிய சேவைகள் செய்யப்பட்டதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் இந்த நாட்டு மக்களின் பிரச்சினைகளை நன்றாக விளங்கியிருந்தார். அதன்மூலம் தான் இந்த வீட்டுத்திட்டம் உருவானது. கம் உதாவ நிகழ்ச்சித்திட்டம் இந்த நாட்டின் வீடமைப்புத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. நான் பாராளுமன்ற உறுப்பினராக இல்லாத காலத்திலும் அந்த நிகழ்வுகளுக்கு சென்றிருக்கின்றேன். பிரேமதாச அவர்கள் ஜனாதிபதியாக இருந்தபோது நான் எதிர்கட்சி உறுப்பினராக இருந்தேன். ஜனாதிபதி பிரேமதாச அரசாங்க கட்சி உறுப்பினர்களை பார்க்கிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் தொடர்புகளை வைத்திருந்தார். தலைவர் என்ற வகையில் பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடுகளை அவர் பார்க்கவில்லை. அது அரசியல்வாதிகளிடம் இருக்க வேண்டிய முக்கியமான பண்பாகும். எமது நாட்டில் பிரதேச சபை முதல் பாரளுமன்றம் வரையில் உள்ள பிரதிநிதிகளை பொதுமக்கள் சந்திக்க செல்லுகின்றபோது அவர்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்றே கேட்கிறார்கள். தனக்கு வாக்களிக்கவில்லை என்பதால் இந்த வேலையை செய்து தர முடியாதென்று முகத்திற்கே கூறுகின்றவர்களும் இருக்கின்றார்கள். இது அரசியல்வாதிகளிடம் இருக்கக்கூடாத பண்பாகும்.
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச கட்சி பேதங்களின்றி செயற்பட்டவர். பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து பிரதிநிதிகளுக்கும் ஒன்றுபோல் சேவை செய்தார். நான் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்துபோதும் ஆளுங்கட்சி உறுப்பினரைப் போன்று அவரிடம் உதவிகளை பெற்றிருக்கின்றேன். அவர் அதிகாலை 4.00 மணியிலிருந்து பொதுமக்களை சந்திப்பதற்கு தயாராக இருப்பார். சில பிரச்சினைகளின்போது நான் அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் பொலன்னறுவையிலிருந்து அவருக்கு தொலைபேசியில் உரையாடி உள்ளேன். இந்த நாட்டின் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் அவர் இந்த நாட்டின் வீடமைப்பு அபிவிருத்தி திட்டத்தை மேற்கொண்டார். ஏழை மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென்ற கொள்கை அவரிடம் இருந்தது. இன்று அமைச்சர் சஜித் பிரேமதாச அந்த நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுத்து செல்கின்றார். தனது தந்தை முன்னெடுத்த சிறந்த நிகழ்ச்சித்திட்டத்தை சரியாக விளங்கி அதற்கு தலைமைத்துவத்தை வழங்கிவருவதை நான் மதிக்கின்றேன். நான் அமைச்சர் சஜித் பிரேமதாசவை மதிப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. அவற்றை வேறு சில அமைச்சர்களிடம் காணமுடியாது. அதுதான் தனது பணியிலுள்ள அவரது அர்ப்பணிப்பு. அடுத்தது ஊழல், மோசடி இல்லாத அமைச்சராக இருப்பது. இந்த இரண்டு காரணங்களினால்தான் நான் அமைச்சர் சஜித் பிரேமதாசவை மதிக்கின்றேன். சிலர் அது தொடர்பில் என்மீது குற்றஞ் சாட்டுவதும் உண்டு. அவரை உயர்த்தி பேசுவதாக குறிப்பிடுவதுமுண்டு. நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டால் நான் அனைவரையும் உயர்த்தியே பேசுவேன். நான் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு இரவு 10.00 மணிக்கு பின்னர் வெளியே செல்ல வேண்டாம் என்றும். இரவு 10.00 ஆகும்போது வேலைகளை முடித்துக்கொள்ளுமாறும் கூறியிருக்கின்றேன். என்றாலும் அவர் 24 மணிநேரமும் ஓயாது வேலை செய்கின்றார். அது அரசியல்வாதி ஒருவரிடம் இருக்க வேண்டிய முக்கிய பண்பாகும்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு 40 வருடங்களாகின்ற இச்சந்தர்ப்பத்தில் அன்றும் இன்றும் சேவை செய்கின்றவர்கள், ஓய்வு பெற்றவர்களை நாம் இந்த இடத்தில் நினைவுகூர வேண்டும். இந்த நாட்டில் அரச சேவையில் 16 இலட்சம் பேர் உள்ளனர். அந்த 16 இலட்சம் பேரும் தங்களது சேவைகளை உரிய முறையில் ஊழல், மோசடி இன்றி நிறைவேற்றுவார்களேயாயின் நாட்டில் பிரச்சினைகள் இருக்காது. பெரும்பாலான குற்றச்சாட்டுக்கள், முறைப்பாடுகள் அரசியல்வாதிகளை நோக்கியே வருகின்றன. ஊடகங்கள் அரசியல்வாதிகளையே தாக்குகின்றனர். என்றாலும் நாட்டின் அரச சேவையில் உள்ள நூற்றுக்கு பத்து வீதமானோர் ஊழல் நிறைந்தவர்களாக உள்ளனர். 50 வீதத்திற்கும் அதிகமானவர்கள் மிகவும் நேர்மையாக தமது சேவைகளை செய்கின்றனர். மக்களுடன் அன்பாக நடந்துகொள்வதும் அவர்களது பிரச்சினைகளை விளங்கி உரிய முறையில் அவற்றை நிறைவேற்றுவதும் அரசியல்வாதிகளிடம் மட்டும் இருக்க வேண்டிய பண்பல்ல. அது அரசாங்க ஊழியர்களிடமும் இருக்க வேண்டிய பண்பாகும். அரசியல்வாதிகளிடமும் அரசாங்க அதிகாரிகளிடமும் வருபவர்கள் அப்பாவி ஏழை மக்களே. வசதி படைத்தவர்கள் அரசியல்வாதிகளையோ அரசாங்க அதிகாரிகளையோ நாடிச் செல்வதில்லை.
அந்த வகையில் வீடமைப்பு அதிகார சபையின் 40 வருட சேவையை ஏழை மக்களுக்கான ஒரு நிறுவனம் என்ற வகையில் நாம் பாராட்டுகின்றோம். இத்தகையதோர் நிறுவனத்தின் நீண்டகால சேவையை பாராட்டுவது முக்கியமானதாகும். எனவே நான் குறிப்பாக இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு எனது ஆசிகளை தெரிவிக்கின்றேன். இந்த நாட்டின் வீடமைப்புப்பற்றி பேசுகின்றபோது ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்கள் நினைவுக்கு வருகின்றார். இந்த நாட்டின் அரச தலைவர்களில் சுதந்திரத்திற்குப் பின்னர் டி.எஸ்.சேனாநாயக்க முதல் ஒவ்வொரு தலைவர்களிடமும் சில விசேட பண்புகள் இருந்தன. இந்த நாட்டின் இரண்டு அரச தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1959ஆம் ஆண்டு எஸ்.டப்ளியு.ஆர்.டி.பண்டாரநாயக்க அந்த அரசாங்கத்தில் இருந்தவர்களாலேயே கொலை செய்யப்பட்டார். ரணசிங்க பிரேமதாச அவரிடமிருந்த மனிதாபிமானத்தின் காரணமாக பிரபாகரன் போன்றவர்களைக்கூட நம்பினார். நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்காக முன்னெடுத்த நிகழ்ச்சித்திட்டங்களில் கைகோர்த்து செயற்படுவர் என்று எண்ணினார். என்றாலும் பிரபாகரன் போன்ற கொடூர பயங்கரவாதிகளிடம் இருந்த மனிதாபிமானமற்ற தன்மையினால் சிறந்த தலைவரான ரணசிங்க பிரேமதாசவும் கொலை செய்யப்பட்டார். இவை அனைத்திலிருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த நாட்டில் சில அரசியல்வாதிகள் கொலை செய்யப்பட்டார்கள். இன்னும் சிலர் கொல்லாமல் கொல்லப்பட்டுள்ளனர். இந்த இரண்டும் இந்த நாட்டில் உள்ளன. இந்த இரண்டைப்பற்றியும் நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். சாதாரண ஏழை மக்களுக்கு உதவி செய்யும்போது, சாதாரண மனிதர்களிலிருந்து ஒருவர் தலை நிமிர்ந்து நிற்கின்றபோது அவரை கொலை செய்வது அல்லது கொல்லாமல் கொல்வதுதான் நடைபெறுகின்றது. கொலை செய்வதை பார்க்கிலும் கொல்லாமல் கொன்றுவிடுவது பாரதூரமானது. இதுபோன்றதொரு தினத்தில் குறிப்பாக நான் இதனைக் குறிப்பிடுவது நாடு என்ற வகையில் எமக்கு இருக்கின்ற சவால்களை விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதினாலாகும்.
வீடமைப்பு அதிகார சபையின் 40 வருட நிறைவு விழாவை கொண்டாடுவதைப்போன்று எமது அரசாங்கத்திற்கும் நான்கரை வருடங்களுக்கும் மேல் ஆகின்றன. இன்னும் நான்கு, ஐந்து மாதங்களே தேர்தலுக்கு உள்ளது. இந்த காலப் பகுதியில் நாம் செய்த விடயங்கள், தவற விட்ட இடங்களை தேடிப்பார்க்க வேண்டும்.
மீளாய்வு செய்து பார்க்க வேண்டிய நேரம் வந்துள்ளது. நாம் இதுபற்றி பேச வேண்டும். நான்கரை வருட காலப் பகுதியில் அரசாங்கம் நாட்டில் மோசமடைந்திருக்கின்றதென்றால் அவ்வாறு மோசமடைவதற்கு முக்கிய காரணம் அரசியல் அமைப்பின் 19வது திருத்தமாகும். 19வது திருத்தம் கொண்டுவரப்படவில்லையானால் இந்த அரசாங்கம் சிறந்த அரசாங்கமாக இருந்திருக்கும். நானும் பிரதமரும் இரண்டு பக்கங்களில் இழுபட்டுச் செல்வதாக நாட்டு மக்களிடம் குற்றச்சாட்டுள்ளது. இந்த நிலை ஏற்படக் காரணம் 19வது திருத்தமாகும். 18வது திருத்தம் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் அரசியலமைப்பாகும். அது முழுமையாக எதேச்சதிகார முறையாகும்.
18வது திருத்தத்தை நீக்குவதற்காகத்தான் நாம் அரசாங்கத்தை அமைத்தோம். 18வது திருத்தத்தில் அரசியலமைப்பு ஏகாதிபத்தியதன்மையை கொண்டதாகும். அது பொருத்தமற்றதாகும். 19வது திருத்தத்தின் மூலம் இந்த நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலைமை ஒன்று உருவானது. 19வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியும் பிரதமரும் இரண்டு பக்கங்களுக்கு இழுபடும் நிலைமை உருவானது. இதனால் நாட்டுக்கும் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கும் பாரிய நட்டம் ஏற்பட்டது. இந்த நாட்டை சிறந்ததோர் நாடாக கட்டியெழுப்ப வேண்டுமானால் குறிப்பாக பெரும்பாலான அரசியல் ஆய்வாளர்கள் ஊடகங்களில் தெரிவிப்பதைப்போன்று இதற்கு முற்றிலும் மாறுபட்டு சிந்திக்க வேண்டும். 18வது திருத்தத்தையும் 19வது திருத்தத்தையும் அரசியலமைப்பிலிருந்து இரத்துச் செய்தால்தான் நாட்டுக்கு நல்லதாகும்.
நாடு அராஜகமான நிலையில் உள்ளதென மக்கள் கூறுவதற்கு 19வது திருத்தமே காரணமாகும். 19வது திருத்தம் இல்லாதிருந்தால் இந்த நான்கரை வருடங்களும் மிகச் சிறப்பாக இருந்திருக்கும்.
எனவே நாம் விட்ட தவறுகளை நாம் எற்றுக்கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தில் 225 உறுப்பினர்களில் 215 பேர் 19வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். 19வது திருத்தத்தை தயாரித்த அரசியலமைப்பு நிபுணர்கள் அதன்மூலம் இத்தகையதொரு அழிவு நாட்டுக்கு ஏற்படுமென்று எண்ணவில்லை. எனவே எதிர்காலத்தில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரசியலமைப்பு சார்ந்த பிரச்சினையே உள்ளதன்றி ஆட்கள் பற்றிய பிரச்சினையல்ல. அரசியலமைப்பில் 18 மற்றும் 19வது திருத்தங்களை நீக்குவதன் மூலம் நாட்டில் மக்கள் விரும்புகின்ற சிறந்த ஆட்சியொன்றை முன்னெடுக்க முடியும். அதன்மூலம் நல்ல பெறுபேறுகள் கிடைக்கும் ஜனநாயகமும் சுதந்திரமும் அமைதியும் இருக்கும் ஊடகச் சுதந்திரம் இருக்கும். வினைத்திறனாக சேவைகளை மேற்கொள்ள முடியும். எனவே நான் இன்றைய தினம் உங்களிடம் இதனைத் தெரிவிப்பது நீங்கள் அனைவரும் நாட்டை நேசிக்கின்றவர்கள் என்றவகையில் நாட்டின் எதிர்காலத்திற்காக எமது பொறுப்புக்களையும் கடமைகளையும் அதேபோன்று எமக்கு முன்னால் உள்ள சவால்களையும் நாம் விளங்கி நாட்டை கட்டியெழுப்புவதற்கு உலகில் சிறந்ததோர் தேசமாக இந்த நாட்டை மாற்றுவதற்கு எமக்கு முன்னால் உள்ள இந்த தடையை நீக்க வேண்டியது அவசியம் என்பதனாலேயாகும்.
எனவே நான் மீண்டும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் அவரது பணிக்குழாமினருக்கும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பணிகளுக்கு அனுசரணை வழங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துகொள்கின்றேன். உங்களது பணிகளை சிறப்பாக தொடருவதற்கு எனது நல்லாசிகளை தெரிவித்து விடைபெறுகின்றேன்.