- பைஸர் முஸ்தபா கடை உரிமையாளர்களிடம் உறுதி-
ஐ. ஏ. காதிர் கான்-மினுவாங்கொடை நகரத்தில், கடந்த 13 ஆம் திகதியன்று இரவு, பேரினவாதிகளின் தாக்குதல்களுக்குள்ளான மற்றும் தீக்கிரையான 33 கடைகளையும், முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, கடந்த சனியன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
கம்பஹா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்கவும் இதன்போது சமூகமளித்திருந்தார்.
இதன்போது மினுவாங்கொடை நகர சபைத் தலைவர் நீல் ஜயசேகர (பொதுஜன பெரமுன), நகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட கடை உரிமையாளர்களுடன், இக்கடைத் தொகுதியை மீளக் கட்டியெழுப்புவது தொடர்பிலான மிக நீண்ட நேர கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.
தாக்குதல்களுக்குள்ளான மற்றும் தீக்கிரையாகியுள்ள 33 கடைகளையும், மிக அவசரமாக குறுகிய காலத்திற்குள், முற்று முழுதாகக் கட்டி எழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, தாம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாகவும், பைஸர் முஸ்தபா எம்.பி. இதன்போது கடை உரிமையாளர்களிடம் வாக்குறுதி அளித்தார். அத்துடன், மினுவாங்கொடை நகர சபையும் எவ்விதப் பக்க சார்புகளுமின்றி இது தொடர்பில் அக்கறை எடுத்துச் செயற்படுமாறும், அவர் நகர சபைத் தலைவர் நீல் ஜயசேகர உள்ளிட்ட நகர சபை உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான பைஸர் முஸ்தபா, பிரசன்ன ரணதுங்க, நகர சபைத் தலைவர் மற்றும் பாதிக்கப்பட்ட 33 கடை உரிமையாளர்களுக்கு மத்தியில், இறுதியில் ஒருமித்த சிறந்த இணக்கப்பாடொன்றுக்கு வர முடிந்ததாகத் தெரிய வருகிறது.