பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் நால்வர் உட்பட ஐவரை மோதித் தள்ளிய முச்சக்கர வண்டிச் சாரதியை தேடி பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் கொட்டடி - ஒஸ்மானியக் கல்லூரி வீதியில் இன்று(6) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றது.
இதன் போது யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் வேகமாக சென்ற முச்சக்கர வண்டி வீதியில் சென்ற மாணவர்கள் இருவர் மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவர்கள் இருவர் உட்பட ஐவரை மோதியதுடன் அதன் சாரதி அவ்விடத்தில் இருந்து வாகனத்தை கைவிட்டுத் தப்பிச் சென்றார்.
இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவர்கள் இருவர் உள்பட மூவர் வீதியின் அருகில் இருந்த வடிகானுக்குள் தூக்கி வீசப்பட்டனர்.இவ்வாறு காயமடைந்த ஐவரும் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் முச்சக்கரவண்டி சம்பவ இடத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் நடந்து வந்துகொண்டிருந்த மாணவர்கள் மீது மோதியதாகவும் இதில் காயமடைந்த மாணவர்கள் வலியால் அலறிய போதிலும் குறித்த முச்சக்கரவண்டிச் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரைக் கைதுசெய்வதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.