கிழக்கு மாகாணக்கல்வித்திணைக்களம் நடாத்தும் தரம் 5புலமைப்பரிசில்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்க்கான முன்னோடி மாதிரிப்பரீட்சை நாளை(15) சனிக்கிழமை காலை நடைபெறுமென கிழக்கு மாகாணக்கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்தார்.
கிழக்கிலுள்ள 17கல்வி வலயங்களிலுள்ள பாடசாலைகளில் தரம் 5புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் சகல மாணவர்களுக்குமாக இப்பரீட்சை நடாத்தப்படுகின்றது.
காலை 8.30மணிமுதல் 9.15 மணி வரை முதலாம் பாகமும் அரை மணிநேரம் இடைவேளை. பின்னர் 9.45மணி முதல் 11.00மணிவரை இரண்டாம் பாகமும் நடாத்தப்பட சகல எற்பாடுகளும் பூர்த்தியடைந்திருப்பதாக அவர் மேலும் சொன்னார்.
பொதுப்பரீட்சை எப்படி நடாத்தப்படவேண்டுமோ அதேபோன்று இப்பரீட்சையை நடாத்துவதன் ஊடாக மாணவர்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி நடைபெறவிருக்கும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயார்படுத்த முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு வலயத்திலும் குறித்த பாடசாலைகளை இணைத்து பத்து அல்லது அதற்கு மேற்பட்ட பரீட்சை நிலையங்களை வசதிக்கேற்ப உருவாக்கி அந்தந்த பாடசாலை அதிபர்களை மேற்பார்வையாளர்களாகச் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.