இஸ்லாமியர்களுக்கு எதிராக ஏற்பட்டுள்ள இனவாத செயற்பாடுகள் நீங்கி ஐக்கிய இலங்கை திருநாட்டில் மூவின மக்களும் சகோதரத்துவத்துடனும் சௌஜன்யத்துடனும் வாழ்வதற்கு இப்புனித பெருநாள் தினத்தில் பிரார்த்திக்கின்றேன் என்று கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.அப்துல் மனாப் தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இனவாத, மதவாத கோசங்கள் மேலெழுந்துள்ள இக்கால கட்டத்தில் முஸ்லிம்கள் மிகப் பொறுமையுடன் செயற்பட்டு மூவினங்களையும் அரவணைத்துச்செல்கின்ற ஒற்றுமையான ஆட்சி மலர பிரார்த்திக்க வேண்டும்.
அண்மைய இலங்கையின் அசம்பாவிதங்கள் காரணமாக நேடியாகவும் மறைமுகமாகவும் தங்களது உயிர் உடமைகளை இழந்து தவிக்கும் முஸ்லிம் சமூகம் மற்றும் கிறிஸ்தவ சமூகத்திற்கும் சாந்தியும் சமாதானமும் ஏற்பட இப்புனித நாளில் பிரார்த்திக்கின்றேன். அத்தோடு சிறையில் வாடுகின்ற அப்பாவி முஸ்லிம் சகோதர சகோதரிகளின் விடுதலைக்காகவும் பிரார்த்திக்கின்றேன்.
முக்கியமாக இந்த இக்கட்டான சூழ்நிலையில் முஸ்லிம் சமூகம் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள் அமைதியாகவும் பொறுமையோடும் ஆன்மீகத்தின்பால் அதிக நாட்டம் கொண்டவர்களாக மாறவேண்டும். அதனுாடாக எமது சமூகத்தின் ஈடேற்றத்திற்காக இறைவனை பிரார்த்திப்பது கொண்டு முஸ்லிம் சமூகத்தின் காவலர்களாக மாற வேண்டும்.
எமது நாட்டில் உருவாக்கப்படுகின்ற சமாதானத்திற்கும், ஐக்கியத்திற்கும் முஸ்லிம்களாகிய எமது பங்கு பிரதானமானதாக இருக்க வேண்டும். எம்மிடையே காணப்படும் இன, மத, வேற்றுமைகளைக் களைந்து பயன் தரும் வகையில் சமூக வாழ்வில் நம்மை இணைத்துக் கொண்டு செயலாற்ற மூவின மக்களும் தயாராக வேண்டும் என்றார்.