ஒரு அச்சமான சூழ்நிலையில் ஒரு மாதம் நோன்புநோற்று, சில அப்பாவிகள் இன்னும் சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று புனித நோன்புப் பெருநாளை நிறைவேற்றுவதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்தமைக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு முதற்கண் நன்றியைத் தெரிவிக்கிறேன்.
கடந்த 4/21 சம்பவத்திற்குப் பிறகு இந்நாட்டில் வாழுகின்ற ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் பயங்கரவாதிகளாகப் பார்க்கப்படுகின்ற ஒரு துர்ப்பாக்கியகரமான நிலமை ஏற்பட்டுள்ளதை நாமனைவரும் அறிவோம். முஸ்லிம் சமூகத்தை பல் திசைகளிலும் இருந்து திட்டமிட்ட அடிப்படையில் அரசியல், பொருளாதார, சமய, கல்வி மற்றும் சமூக விடயங்களிலும் பலவீனப்படுத்தி ஓரங்கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை கடந்த சில நாட்களாகக் கண்கூடாக கண்டுகொண்டிருக்கிறோம்.
குறிப்பாக, இலங்கையின் அரசியல் அதிகாரத்தை தீர்மானிக்கின்ற சக்திகள் நாம் என்று பெருமிதப்பட்ட எமது முஸ்லிம் அரசியல்வாதிகள், தமது சமூகத்தைப் பாதுகாக்க எதுவுமே செய்யமுடியாத கையாலாகாதவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம்களை இனவாதிகள் என்று கைநீட்டும் உண்மையான இனவாதிகளின் எல்லைமீறிய காட்டுத்தர்பாருக்கு முன்னால் அரச இயந்திரமே செயலற்றுப்போயிருப்பது இந்நாட்டின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
நாட்டின் பொதுவான சட்டதிட்டங்களும் கூட முஸ்லிம்களுக்கு மாத்திரமானதா என்ற கவலையைத் தரும் விதமான காட்சிகள் அரங்கேறுகின்றன.
இத்தகையதொரு நிலையிலே தான், கடந்த 2019.06.03 ஆம் திகதி எம்மைப் பரவசப்படுத்திய சம்பவம் நடந்தேறியது. பொதுவாக முஸ்லிம் அரசியல்வாதிகள் பதவிகளுக்காகவே அரசியல் செய்பவர்கள் என்று எமது மக்களாலேயே குற்றஞ்சாட்டப்படுபவர்கள். அதற்குக் காரணம் அவர்கள் கடந்துவந்த அரசியல் பயணம் அப்படித்தான் இருந்தது. எனினும், அவற்றையெல்லாம் பொய்ப்பித்து யாருமே குறிப்பாக இந்நாட்டு முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதிகள் கடுகளவும் எதிர்பார்த்திராத விதமாக அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் தாம் சார்ந்த கட்சி, பிரதேசம் என்ற வேறுபாடுகளையெல்லாம் களைந்து ஓரணியாகி, தாம் வைத்திருந்த சகல வகையான அமைச்சுப் பதவிகளையும் இராஜினாமாச் செய்தார்கள்.
சிலர் கடந்த 2019.06.03 ஆம் திகதியை முஸ்லிம்களின் இன்னுமொரு கறுப்பு நாளாக வர்ணித்தாலும், என்னைப் பொறுத்தளவில் நான் அதனை ஒரு பொன்னான நாளாகவே கருதுகிறேன். எந்தவகையிலும் ஒன்றுபடமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட எமது அரசியல்வாதிகள் ஒற்றுமையாகியதைக் கண்டு ஒட்டுமொத்த இனவாதிகளும் அதிர்ந்துபோயுள்ளனர். அந்த சம்பவத்தின் பின்னர் வெளியிடப்படும் இனவாதிகளின் கருத்துகள் அதனை சான்றுப்படுத்துகிறது. அத்துரலிய ரத்தின தேரரின் உண்ணாவிரதத்தை ஆதரித்து மக்களை உசுப்பேற்றியவர்களே இன்று அதனைத் தவறான அணுகுமுறை என்று விமர்சிக்கும் அளவிற்கு இனவாதிகள் மத்தியிலேயே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது எமது அரசியல்வாதிகளின் ஒற்றுமை.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒற்றுமையானது பெரும்பான்மை அரசியல்வாதிகளையே திக்குமுக்காடச் செய்து, இலங்கையின் அரசியல் இயந்திரத்தையே அதிரவைத்துள்ளது.
அரசியல் பதவிகளை வைத்துக்கொண்டு கையாலாகாதவர்களாக இருந்த எமது அரசில்வாதிகள் தமது அமைச்சுப் பதவிகளைக் களைந்து ஏற்படுத்திய ஒற்றுமையானது எதிரிகளுக்கு பரபரப்பையும் அச்சத்தையும் கொடுத்திருப்பதை அவர்களது அறிக்கைகள் பறைசாற்றுகின்றன. அவர்கள் இன்று வியந்துபோயுள்ளனர். அவர்கள் இதனை சற்றும் எதிர்பார்த்திராததால் அவர்களின் பல மறைமுக சதிகள் செயலற்றுப் போயுள்ளன.
கடந்த 4/21 சம்பவத்திற்குப் பிறகு கேள்விக்குறியாகிப் போய்க்கொண்டிருந்த இந்நாட்டு முஸ்லிம்களை நோக்கிய பார்வையில் ஒரு மாற்றத்தை எமது அரசியல்வாதிகளின் ஒற்றுமை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றம் நிரந்தரமானதாகவும் பெறுமதியானதாகவும் நீடித்து நிலைப்பது எமது அரசியல்வாதிகளின் அடுத்த கட்ட நகர்வுகளிலேயே தங்கியுள்ளது. இன்றைய சூழ்நிலையில் அமைச்சுகளில்லாமல் சுதந்திரமாக அதேவேளை சமூகத்தின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு பொறுப்புடன் செயற்படவேண்டிய தார்மீகப் பொறுப்பைச் சுமந்தவர்களாக எமது அரசியல்வாதிகள் உள்ளனர்.
இன்று ஏற்பட்டுள்ள இந்த பெறுமதியான ஒற்றுமையை சிதைத்து சின்னாபின்னமாக்கிவிடாமல் பேணிப்பாதுகாப்பதற்கு எமது அனைத்து அரசியல்வாதிகளும் இன்றைய சங்கையான ஈதுல் பித்ர் நாளில் இன்னும் திடமாக உறுதிபூண வேண்டும். அது தான் எமது மக்கள் இந்நாட்டில் நிம்மதியாக வாழ்வதற்கு வழிசமைக்கும்.
உங்களின் எண்ணம் தூய்மையாக இருந்தால், இன்ஷாஅல்லாஹ் நிச்சயமாக இந்த அரசியல் அதிகாரங்களும் அரச இயந்திரமும் உங்களின் காலில் மண்டியிடும். ஒற்றுமையே எமது பலம்!