மாகாணம் என்பது கல்முனையை போன்ற சிறு பிரதேசம் அல்ல. அது ஒரு பெரு நிலப்பரப்பு. அப்படியிருந்தும் தலைவர் அஷ்ரப் முழு கிழக்கு மாகாணத்தையும் எமக்கு தரவேண்டும் என கேட்கவில்லை. கிழக்கில் முஸ்லிம்களும் தமிழர்களும் வாழ்வதால் முஸ்லிம் பிரதேசங்களை மட்டும் பிரித்து நிலத்தொடர்பற்ற சபையை கோரினார். அதைக்கூட ஏற்காத தமிழ் தீவிரவாதிகள் இப்போது கல்முனைக்கு அதனை உதாரணம் காட்டுவது வேடிக்கையானது. அஷ்ரப் கேட்ட மாகாண சபைக்கும் நிலத்தொடர்பற்றது என்பதால் சாத்தியமற்றது என இனவாத தமிழ், சிங்களவரால் சொல்லப்பட்டது.
அது மட்டுமல்லாது அஷ்ரப் தமிழர் பிரதேசங்களை நிலத்தொடர்பற்ற மாகாண கோரிக்கைக்குள் உட்புகுத்தவில்லை. ஆனால் கல்முனை உப தமிழ் செயலகத்துள் கல்முனை முஸ்லிம்களின் நிலங்களையும் வர்த்தக நிலையங்களையும் கள்ளத்தனமாக ஆயுத முணையில் உட்புகுத்தியுள்ளதை ஏன் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
மேற்படி கல்முனை நகரத்தை விட்டு விட்டு 99 வீதம் தமிழர் உள்ள பாண்டிருப்பு பிரதேச செயலகம் பெறுவதை முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை.
அதற்குள்ளும் ஒரு வீதம் முஸ்லிம்கள் வாழ்வது போல் கல்முனை நகரில் தமிழர்களும் வாழ்வர்.
நாம் தமிழ் மக்களின் வாழ்விடங்களை கேட்கவில்லை. எமது நிலங்களையும் ஆக்கிரமித்துக்கொண்டுள்ள செயலைத்தான் எதிர்க்கிறோம்.
அக்கரைப்பற்றுக்கு மாநகர சபை பெற்ற போது தமிழர் அதிகம் உள்ள ஆலையடி வேம்பு வேறாக பிரிக்கப்பட்டதும் அக்கரைப்பற்று முஸ்லிம்களின் கடைகள் அதற்குள் உள்வாங்கப்படவில்லை என்பது யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு காலத்தில் பயங்கரவாதியாக இருந்த சுரேஷ் பிரேமசந்திரனுக்கு தெரியாது.
உண்ணாவிரதம் இருப்போரை எதிர்த்து சத்தியகிரகம் இருந்தது அசிங்கம் என உண்ணாவிரதமும் வேண்டாம் சத்தியக்கிரகமும் வேண்டாம் என துப்பாக்கி ஏந்தி தோல்வியடைந்து சிங்களத்திடம் சரணடைந்த சுரேஷ் சொல்வதுதான் அசிங்கம்.
கல்முனை வடக்கு செயலகம் என்பது நிலத்தொடர்பற்ற முறையில் உள்ளது என சொல்லும் போது, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் நிலத்தொடர்பற்ற முறையில் இருப்பது முறையா என சிலர் கிறுக்குத்தனமாக கேட்கின்றார் சுரேஷ் பிரேமசந்திரன்.
கல்வி என்பது பொது நிர்வாக அமைச்சின் கீழ் உள்ளது அல்ல.
நாட்டில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளும் நிலத்தொடர்பற்ற முறையில் கல்வி அமைச்சின் தமிழ் பிரிவின் கீழ்த்தான் உள்ளன. அதன் படி வட மாகாண சபையை கலைத்து விட்டு நிலத்தொடர்பற்ற முறையில் மேல் மாகாண சபையுடன் வட மாகாண பிரதேசங்களை இணைப்போம் என சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா?
கல்வி என்பது பொது மக்கள் நிர்வாகம் அல்ல. அது பாடசாலைகளை மட்டுமே மையமாக கொண்டது.
பிரதேச செயலகம் என்பது பொது மக்களின் அன்றாட பிரச்சினைகளை பார்க்கும் மக்களுக்கான நிர்வாகம். அது நிலத்தொடர்பிலேயே அமைய வேண்டும்.
ஆகவே மீண்டும் நாம் சொல்கிறோம். கல்முனை பிரச்சினையை ஒரே நாளில் தீர்க்க முடியும். இது தமிழ் மக்களின் எமது நிலபுலன்களை விட்டுக்கொடுப்பதிலேயே உள்ளது.
கல்முனை பஸார் மற்றும் அது வரையிலான தெற்குப்பகுதி பிரதான வீதி என்பன தனி ஜீ எஸ் பிரிவாக ஆக்கப்பட்டு அதனை கல்முனை முஸ்லிம் செயலகத்துடன் இணைக்க நாம் ஒப்புதல் அளிக்கின்றோம் என தமிழர் தரப்பு கூறுமாயின் தமிழ் செயலகத்தை தரம் உயர்த்த தடை இருக்காது.