கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இதனைக் கூறியுள்ளார். வீடுகளைக் கூலிக்கு எடுத்துக் கொண்டு டிரார் என்ற பள்ளிவாயலை அமைப்பதற்கு முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹலீம் அனுமதி வழங்கியுள்ளார்.
நபியவர்களும் இந்த பள்ளிவாயலுக்கு அனுமதி வழங்கவில்லை. அனுராதபுர மடாடுகவில் ஒரு பள்ளிவாயலை அப்பிரதேச மக்கள் உடைத்துத்தள்ளனர்.
இப்படியான பள்ளிவாயல்களைத்தான் டிரார் பள்ளிவாயல் என அழைக்கப்படுகின்றது. இவ்வகையான டிரார் பள்ளிவாயல்களை உடைத்து தகர்த்துவிட்டு அவ்விடத்தில் குப்பைகளைப் போடுமாறு நபியர்கள் கூறியுள்ளார். இவ்வாறு போதனை வழங்கப்பட்டுள்ள நிலையில்தான் இவற்றுக்கு அனுமதி வழங்கியுள்ளார்கள் எனவும் பொதுபல சேனா ஞானசார தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
“இன்னும் தீங்கிழைக்கவும், குஃப்ருக்கு உதவி செய்யவும், முஃமின்களிடையே பிளவு உண்டுபண்ணவும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள்: “நாங்கள் நல்லதையே யன்றி விரும்பவில்லை” என்று சத்தியம் செய்வார்கள் – ஆனால், அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான்”.
(ஸூரா தௌபா :107 ஆவது வசனம்)
அபு ஆமிர் அர்ராஹிப் என்பவர் குபா பள்ளிவாயலுக்கு அருகில் ஒரு பள்ளிவாயலை அமைத்தார். இவர் உஹது யுத்தத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்தவராகவும் கருதப்படுகின்றார். இந்த பள்ளிவாயலை திறப்பதற்கு நபியவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு ரஜப் மாதத்தில் தபூக் போர் முடிந்து வரும் போது, மேற்படி அல்குர்ஆன் வசனம் இறங்கியது.
இதன்பின்னர் நபியவர்கள் அந்தப் பள்ளியை உடைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்கள். ஆனால், அதில் குப்பைகளைப் போடுமாறு எங்கும் கூறவில்லையென்பது நோக்கத்தக்கது. இந்த வரலாற்றுச் சம்பவத்தையே ஞானசார தேரர் இந்த மடாடுகம பள்ளி உடைப்பு தொடர்பில் விளக்கமாக கூற பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.