சம்மாந்துறைசமுர்த்தி வைபவத்தில் அமைச்சர்தயாகமகே உறுதி!
காரைதீவு நிருபர் சகா-முஸ்லிம் அமைச்சர்கள் இராஜினாமாச் செய்திருந்தாலும் அவர்கள் முன்னெடுத்துவந்த அத்தனை பணிகளும் தடையின்றித் தொடரும். அதற்கு நான் பூரண உத்தரவாதமளிக்கிறேன். இவ்வாறு சமுகவலுவூட்டல் ஆரம்பக்கைத்தொழில் அமைச்சர் தயாகமகே சம்மாந்துறையில் நடைபெற்ற சமுர்த்திவைபவமொன்றில் பேசுகையில் குறிப்பிட்டார்.
சம்மாந்துறைப்பிரதேசத்திற்குட்பட்ட 1713 சமுர்த்தியாளர்களுக்கு உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேசசெயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா தலைமையில் நேற்று சம்மாந்துறை அல்முனீர் வித்தியாலயத்தில் நடைபெற்றது. நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஜ.எம்.மன்சூர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
அங்கு அமைச்சர் தயாகமகே மேலும் உரையாற்றுகையில்:
அம்பாறையில் பிறந்த நான் எனது மூன்றரை வயதில் எனது தந்தையை இழந்தேன். எனினும் முயற்சியுடன் 70ருபா காசுடன் ஒரு தொழிலை ஆரம்பித்தேன்.
இன்று 45நிறுவனங்களை வைத்து 50ஆயிரம் தொழிலாளர்களுடன் பாரிய வர்த்தகத்தொழிலை நடாத்திவருகிறேன். ஒரு சாதாரண சிறுவனாகவிருந்து இப்படி முன்னேறி கோடீஸ்வரனாகலாம் என்றால் உங்களால் ஏன் முடியாது?
சம்மாந்துறைமக்களை நான் என்றுமே மறக்கமாட்டேன். ஒருவருக்கு 3விருப்புவாக்குகள். அந்த விருப்புவாக்குகள் மூன்றையும் எனக்களித்த சுமார் 3000பேர் சம்மாந்துறையில் உள்ளனர். நானொரு முஸ்லிமோ தமிழரோ அல்ல. எனினும் என்னில் நம்பிக்கைவைத்து வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பினீர்கள். எனவே சம்மாந்துறைக்கு என்னாலான உதவிகளை சேவைகளை செய்துகொண்டிருப்பேன்.
நாட்டில்மிகமோசமான பாதுகாப்புநிலை இருந்தது. இலங்கை முஸ்லிம்களின் உதவியுடன் இன்று அது ஓரளவு தணிந்து விரும்பிய இடத்திற்கு செல்லக்கூடியதாயுள்ளது.
நான்கூட இங்கு எவ்வித பாதுகாப்புமின்றியே வந்தேன். என்னை நேசிக்கின்ற மக்கள் கூட்டத்தின்மேலுள்ள பாதுகாப்பைவிட எனக்கு பாதுகாப்புத்தேவையா? அவர்களே எனது பாதுகாப்பு.
இலங்கைத்திருநாட்டில் புதிதாக 6லட்சம் பேரை சமுர்த்திதிட்டத்திற்குள் உள்வாங்குகின்ற வேலைத்திட்டத்தின்கீழ் தினமும் நாடெங்கும் செல்லவேண்டியநிலை. வேலைப்பழு அதிகம்தான். எனினும் அத்தனை பகுதிகளுக்கும் செல்லவேண்டும் என்பதால் நான் நேரடியாகவே செல்கிறேன்.
சமுர்த்திப்பயனாளிகள் தொடர்ந்து இத்திட்டத்திற்குள் இருக்கக்கூடாது. அப்படியெனின் நீங்கள் சோம்பேறியாக மாறிவிடுவீர்கள். பிறப்புக்கும் பணம் இறப்பிற்கும் பணம். படிப்பிற்கும் பணம்என்றால் அதற்காகவே நீங்கள் சோம்பேறிகளாகிவிடுவீர்கள். அதைத்தவிர்க்கவேண்டும்.
நீங்கள் சொந்தக்காலில் நிற்கவேண்டும். தொடர்ந்து சமுர்த்தி உதவிபெறும் பட்டியிலில் இடம்பெறுவதைத் தவிர்ந்துகொள்ளவேண்டும்.
நாம் உங்களை தொடர்ந்து இத்திட்டத்தில்வைத்துக்கொண்டிருக்கமாட்டோம் . உங்களை தொழிலுக்காக வலுவூட்டி சொந்தக்காலில் நிற்கச்செய்வதே நோக்கம்.
இதுவைர சமுர்த்திமுத்திரை பெறாத உரித்தானவர்கள் இருந்தால் நீங்கள் விண்ணப்பிக்கலாம். பிரதேசசெயலகத்திலோ அல்லது எம்பிக்களிடமோ இணைப்பாளர்களிடமோ அறிவித்து அதனைப்பெறலாம்.
எதிர்வரும் 3ஆண்டிற்குள் 5ஆயிரம் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளோம். மக்கள் ஒத்துழைப்புத்தரவேண்டும். என்றார். இறுதியில் அனைவருக்கும் சமுர்த்தி உரிமப்பத்திரம் வழங்கப்பட்டது.