ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-
இந்தியாவின் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வழங்கிய நேர்காணல்
கேள்வி: ஏப்ரல் 21 இலங்கைக்கு மிகவும் கறுப்பானதொரு நாள். இந்த நிலைமையிலிருந்து நாடு தற்போது மீண்டு வந்துகொண்டிருக்கின்றது. அதன்பின்னர் பல விடயங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வந்தன. இந்நிலையில் முஸ்லிம்கள் மீதான பார்வை எப்படியிருக்கிறது?
பதில்: உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடந்த படுபாதக செயல்களை முஸ்லிம் சமூகம் வன்மையாக கண்டிக்கிறது. அத்துடன் சம்பந்தப்பட்ட சூத்திரதாரிகள் தங்களுக்கு மத்தியிலிருந்து இவற்றை செய்துவிட்டார்கள் என்ற அந்த ஆவேசம் அவர்கள் எங்கள் சமூகத்தவர்கள் இல்லையென்ற அளவுக்கு பேசவைத்திருக்கிறது. அதேநேரம் புலன்விசாரணை முயற்சிகளுக்கு நாங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம். முஸ்லிம் சமூகம் நிறைய நெருக்கடிகளுக்கு மத்தியில், பலவிதமான நெருக்குவாரங்களுக்கு முகம்கொடுத்துவரும் நிலையிலும் பாதுகாப்பு தரப்புக்கு பூரண ஒத்துழைப்பை நல்கினோம்.
இவ்வாறு பல்வேறு ஒத்துழைப்புகளை வழங்கிவந்தாலும், முஸ்லிம் சமூகத்தை சந்தேக கண்கொண்டு பார்ப்பதும் அவர்களுக்கெதிரான வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதும் அவ்வப்போது நடந்துகொண்டுதான் வருகின்றன. இதற்கிடையில் மறுபறத்திலிருந்து இவற்றை தூண்டிவிடும் தீவிரவாத சக்திகள் அவர்களுக்கான களத்தை அமைத்துக்கொண்டு, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் பழிவாங்க வேண்டும் என்ற தோரணையில் பலவிதமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் பக்கவிளைவுகள் பாரதூரமாக அமைந்துவிடும் என்பதற்காக, முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, பாராளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் இருக்கின்ற உறுப்பினர்களாகிய நாங்கள் சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். இது தேசிய நலன் சார்ந்த விடயமாகும். எங்களுடைய தேசத்தின் நலன் சிறியதொரு கும்பலின் முயற்சியினால் முழுமையாக காவுகொள்ளப்பட முடியாது.
கேள்வி: நீங்கள் உள்ளிட்ட முஸ்லிம் அமைச்சர்கள் எல்லோரும் பதவிகளிலிருந்து விலகியிருக்கிறீர்கள். பதவிகளில் இருந்துகொண்டு உண்மைக்காக போராடுவது சரியாக இருந்திருக்குமே?
பதில்: முன்னர் நாங்கள் பதவிகளில் இருந்துகொண்டுதான் போராடி வந்தோம். ஆனால், அரசாங்கமும் பாதுகாப்பு அதிகாரிகளும் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படுகின்ற, வேண்டுமென்று சோடிக்கப்பட்டு முஸ்லிம்களை வலிந்து வன்முறைக்குள் தள்ளிவிடுகின்ற நடவடிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை. மதவாத சக்திகள் வெறுப்பூட்டத்தக்க பேச்சுகளை பேசி, மக்களை வன்முறையின் பால் தூண்டிக்கொண்டிருக்கின்ற சூழலில், அதற்கு தகுந்த பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் ஆட்சியாளர்களும் பாதுகாப்பு தரப்பினரும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
பயங்கரவாத தாக்குதலில் சம்பந்தப்பட்ட எல்லோரையும் கைதுசெய்வதில் எந்தளவு மும்முரம் காட்டினார்களோ, அதேபோன்று நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதிகளையும் கைதுசெய்யவேண்டும். அவர்கள் செய்த ஈனச்செயலும், செய்வதற்கு எத்தனிக்கின்ற ஈனச் செயல்களும் இதுவரை காலமும் செய்த படுபாதக செயல்களும் மூடிமறைக்கப்பட முடியாது. எனவே, இவற்றை வேறுபடுத்திப் பார்க்காமல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.
அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கும்நிலையில் களத்தில் இறங்கிய இந்தக் கும்பலை அரச படைகள் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். அப்படியில்லாமல் அவர்கள் செய்கின்ற அக்கிரமங்களை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் சூழல் மிகவும் ஆபத்தானது. இந்த நாட்டில் சட்டமும், ஆட்சியும் கேள்விக்குட்படுத்தப்படுகின்ற விடயமாக மாறிவருகிறது. அது மாத்திரமின்றி, சர்வதேச ரீதியாக எமது நாட்டுக்கு இருக்கின்ற நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் விடயமாகவும் மாறிவிடும்.
நாங்கள் தொடர்ந்து பதவிகளில் இருந்திருந்தால், இயல்பு வாழ்க்கைக்கு மீண்டுவரும் சந்தர்ப்பத்தில் சுமூக நிலையை குலைக்கின்ற இந்த முயற்சிகளை அங்கீகரிப்பது போலாகிவிடும். அதனால்தான் நாங்கள் எல்லோரும் கூட்டாக முடிவெடுத்து, எங்களது அரச பதவிகள் அனைத்தையும் இராஜினாமா செய்திருக்கிறோம்.
கேள்வி: தாக்குதலில் ஈடுபட்ட அடிப்படைவாத குழுவுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டும், அதுதொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென கூறப்படுகிறது. அதனால் இவ்வளவு பெரிய தாக்குதலுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது. இந்த குற்றச்சாட்டை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: தீவிரவாத குழுக்கள் என்று இரண்டு குழுக்களை அடையாளப்படுத்தி, அவற்றுக்கொரு பெயர் நாமம்சூட்டி அவர்களை தடை செய்வதாகவும் இப்பொழுது வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்களின் பெயர்கள் முஸ்லிம் மத்தியில் பிரசித்தம் பெற்றிருக்கவில்லை. அப்படியொரு குழு இருந்ததாகக் கூட எங்களுக்குத் தெரியாது. ஆனால், அதில் சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்கள்தான் ஓரளவுக்காவது பரவலாக பேசப்பட்ட பெயர்களாக இருந்தன. அதில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் தலைமறைவாக இருப்பதாக பொலிஸார் கூறிவந்தனர். அவர்களை கைதுசெய்வதற்கான பிடியாணைகள் கூட நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்தன.
பொலிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவர்களை பலத்த கண்காணிப்புக்கு உட்படுத்தியிருந்தார்கள் என்றெல்லாம் கதைகள் வந்தன. அவர்களை கைதுசெய்ய வேண்டும் என்று நாங்களே அழுத்தம் கொடுத்து வந்தோம். இந்த சூழலில்தான் யாரும் எதிர்பாராத நிலையில், இந்தக் கும்பல் இவ்வளவு ஒழுங்குபடுத்தப்பட்ட மிலேச்சத்தனமான மிகப்பெரிய தாக்குதலை நடத்தியிருக்கிறது. அதன்பின் சம்பந்தப்பட்ட எல்லோரையும் நாங்கள் கைது செய்துவிட்டோம். இனிமேலும் இந்தக் கும்பல் நாசகார நடவடிக்கைகளில் இறங்குவதற்கு சாத்தியமில்லை என்று பாதுகாப்பு படையினர் தெளிவாக கூறவருகின்றனர்.
எங்களைப் பொறுத்தமட்டில், பயங்கரவாதத்துக்கு ஒரு சமயம் ஒருமுகமோ இருக்க முடியாது. எல்லாம் ஒரே பார்வையில் பார்க்கப்பட வேண்டிய விடயம். இந்த பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கு இன்னொரு பயங்கரவாதம் தீர்வாக வந்துவிட மாட்டாது. இதைத்தான் நாங்கள் வலியுறுத்துகின்றோம்.
கேள்வி: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேசும்போது, இலங்கை இப்போது மதரீதியாக பிளவுபட்டிருக்கின்றது. இந்நிலையில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழவேண்டும். அப்படியான ஒற்றுமையாக இல்லைவிட்டால் இஸ்லாமிய மதத்திலிருந்து ஒரு பிரபாகரன்வரக்கூடும். அதற்கு வாய்ப்பளித்து விடாதீர்கள் என்று கூறியிருந்தார். இலங்கையில் அவ்வளவு ஒடுக்குமுறை நடந்திருக்கிறதா?
பதில்: என்னைப் பொறுத்தமட்டில் இந்த கும்பலில் யாருமே பிரபாகரனாக அடையாளம் காணப்படவில்லை. பிரபாகரனுக்கு தனியானதொரு ஆதரவுத்தளம் இருந்தது. அரசியல் நோக்கங்கள் இருந்தன. அவருக்கென்று ஒரு விடுதலைப் போராட்டம் என்றொன்று வடிகவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தக் கும்பலுக்கு அப்படி எதுவுமே கிடையாது. முஸ்லிம் சமூகத்தில் அவர்களுக்கு கிஞ்சித்தும் ஆதரவும் கிடையாது. அப்படியானதொரு கும்பல் பிரபாகரனின் அந்தஸ்துக்கு வந்துவிடுவார்கள் என்ற அதீதமான அச்சப்போக்கு அபத்தமானது என்பது எனது நிலைப்பாடு.
கேள்வி: ஜனாதிபதியை பொருத்தவரைக்கும் அவருடைய ஆளுமை என்பது இங்கே கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. அவர் ஜனாதிபதியின் கடமையிலிருந்து தவறிவிட்டார். அவருடைய கடமையை அவர் சரிவரச் செய்யவில்லை. அதனால்தான் இதுபோன்றதொரு சம்பவம் நிகழ்ந்திருக்கின்றது என்ற கருத்துகள் முன்வைக்கப்படுகிறதே?
பதில்: என்னைப் பொருத்தமட்டில், எல்லா விடயங்களும் நெகிழ்வுப்போக்கோடு கையாளப்பட்டு துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்திருக்கிறது. இதில் யார்மீது குற்றம்சுமத்துவது என்பதை விட்டுவிட்டு, எங்கு தவறு நடந்தது என்பதைப் பார்த்து இனிமேலும் அவ்வாறான தவறுகள் நடக்காமல் இருப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.
ஒரு தலைவரை மாத்திரம் அல்லது புலனாய்வுத் துறையில் இருக்கிற ஒருசிலர் மாத்திரம் அல்லது பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவரை மாத்திரம் அல்லது முஸ்லிம் சமய தலைமைகளில் நாங்கள் கவனயீனமாக இருந்துவிட்டோம் என்றெல்லாம் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு குற்றம்சொல்வது என்பதெல்லாம் அடிப்படையில்லாத அபத்தமான அணுகுமுறை. அதனால் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு வந்துவிட மாட்டாது.
நாட்டு நலன்கருதி எந்த தீவிரவாதமாக இருந்தாலும் அதை நாங்கள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அதற்காக உளப்பூர்வமான நடவடிக்கையில் இறங்க வேண்டும். இதைத் தவிர்த்து அளுக்காள் குற்றம்சொல்வதால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.
கேள்வி: இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு அரசியல் குழப்பங்கள்தான் காரணம் என்று ஒருபுறம் சொல்லப்பட்டாலும், இந்த அரசியல் குழப்பங்களிலிருந்து தீர்வை எட்டுவதற்கு அல்லது அரசியல் குழப்பங்களை மறைப்பதற்கும் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் பயன்படுத்தப்பட்டது என்ற கருத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: இதைவிடவும் ஒரு வங்குரோத்தான ஒரு கருத்து இருக்கமுடியாது. இந்த குண்டை வைத்தவர்கள் எந்த அரசியல் நோக்கமும் இல்லாதவர்கள் என்றுதான் நாங்கள் நம்புகிறோம். ஏனென்றால், முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இந்த குண்டுத்தாக்குதல் மிலேச்சத்தனமாக செய்யப்பட்டிருக்கிறது. அதுவும் கிறிஸ்தவ சமூகத்தை இலக்குவைத்து முஸ்லிம்கள் செய்திருக்கின்றார்கள் என்ற விடயம் எந்த காரணம் கொண்டும் நியாயப்படுத்த முடியாதது.
இந்தப் பின்னணியில் முஸ்லிம்கள் மிகத் தெளிவாக இந்த கும்பலுக்கு சம்பந்தமில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இலங்கையை பொருத்தமட்டில் இதை அரசியல் ரீதியாக பாவித்துக் கொள்வதற்கு நிறைய சக்திகள் இப்பொழுது முண்டியடித்துக் கொண்டு முயற்சிசெய்கின்றன.
அதன் ஒரு அங்கம்தான், முழு முஸ்லிம் சமூகத்தையும் பலிக்கடாக்களாக்கி அதனுடைய பழியை அவர்கள் மீது சுமத்தி, நாட்டில் குழப்பநிலையை தொடங்கி வைப்பதற்கான இந்த செயற்பாடுகளாகும். இதில் சில பௌத்த பிக்குமார் சாகும்வரை உண்ணாவிரதம் என்ற போர்வையில் தொடங்கிய போராட்டத்தில் சிறையிலிருந்து விடுதலையான ஒரு பௌத்த பிக்கு நேரடியாக தலையிட்டார். களத்துக்குச் சென்ற அவர், அடுத்த நாளைக்குள் மூன்று முஸ்லிம் அரசியல்வாதிகளும் கைதுசெய்யப்படாவிட்டால் நாட்டில் பாரிய ரகளை எற்படும் என்று பகிரங்கமாக அறிவித்தார்.
இவ்வாறான வெறுப்பூட்டத்தக்க பேச்சுகளை பேசுகின்றபோது அவர்களை மெத்தனப் போக்கோடு கையாள முடியாது. அவர்களை கைதுசெய்வதற்கு அரசு தயக்கம் காட்டுவது என்பது, இந்த நாட்டிலே சகல இனங்களும் சமத்துவமாக வாழ்வதற்கான சூழலுக்கு பாதகமான விடயமாகும். சர்வதேச ரீதியாக இந்த நாட்டில் கேலிக்குரிய சட்டத்தின் ஆட்சி நடப்பதாக பார்க்கப்படும் ஒரு சூழல் உருவாகிவிடும். இதை தவிர்ப்பதுதான் எங்களுடைய நோக்கமே தவிர, வேறு எதுவுமில்லை.
கேள்வி: இந்தியாவைப் பொறுத்தவரை, சீனாவின் தலையீடு இருக்கக்கூடாது என்பதற்காக தனது அண்டை நாடுகளுடனான உறவை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இலங்கையில் தற்போது எந்த நாட்டின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இந்தியாவை விட சீனாவை இலங்கை நம்புகின்றதா?
பதில்: இலங்கையைப் பொறுத்தமட்டில் சீன உதவிகள் வெறும் முதலீடுகளாகும். இன்று உலக பொருளாதார வல்லரசு போட்டி என்று வருகின்றபோது, மேற்குலகத்துக்கு மிகப்பெரிய சவாலாக வளர்ந்துவருவது சீனாவின் அதி தீவிரமான பொருளாதார வளர்ச்சியாகும். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலும் பொருளாதார விவகாரங்களில் ஆரோக்கியமான தொடர்பாடல் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு இந்திய அரசினுடையது.
ஆனால், இந்து சமுத்திரத்தில் ஆதிக்க வல்லமை என்று வருகின்றபோது இந்தியா, சீனாவுக்கு இடையில் அல்லது மேற்குலகம் சீனாவுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத விடயம். அதற்கு மத்தியில் இலங்கை ஒரு ஆடுகளமாக மாறியிருக்கிறது. இந்த விடயத்தை நாங்கள் கவனமாகவும் சமச்சீராகவும் கையாள வேண்டும்.
அதேநேரம் இந்தியாவின் பாதுகாப்புக்கு குந்தகமாக எங்களது கடற்படை தளங்கள், துறைமுகங்கள் அமைந்துவிடுவதை இந்தியா அங்கீகரிக்கப் போவதில்லை. அந்த புரிந்துணர்வோடுதான் எந்த விடயத்திலும் நாங்கள் அக்கறை காட்ட வேண்டும். ஏதாவதொரு விடயத்தில் அதீதமான முதலீடுகளை மாத்திரம் இலக்குவைத்து செய்யப் போனால் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை நாங்கள் அனுபவித்துதான் ஆகவேண்டும்.
இந்த விடயத்தில் அனுபவம்வாய்ந்த, அறிவுள்ள இராணுவ பகுப்பாய்வாளர்கள் நீண்டகாலமாக பேசி வருகின்றார்கள். இதைப்பற்றி ஒரு அலட்சியப் போக்கோடு இலங்கை அரசு நடப்பது அதற்கே பாதகமாக விடயமாக போய்விடும். சீனாவாக இருந்தாலும் சரி, அமெரிக்காவாக இருந்தாலும் சரி ஏட்டிக்குப் போட்டியான வல்லரசு போட்டியை இந்து சமுத்திரத்தில் செய்ய தலைப்படுகிறார்கள். இதில் இந்தியாவை புறக்கணித்துவிட்டு பக்கச் சார்பாக இலங்கை நடந்துகொள்ள முடியாது.
கொழும்பில் துறைமுக நகரம் எனப்படும், கடலை நிரப்பி மேற்கொள்ளும் பாரிய திட்டத்தை சீன அரசாங்கத்தின் நிறுவனமொன்று செய்தவருகிறது. அதேபோல் ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மானத்தின் முதலீட்டு கடனை திருப்பிச் செலுத்தமுடியாத நிலையில், அதை முதலீடாக மாற்றி சீன நிறுவனம் ஒன்றுக்கு ஒரு பகுதி சொந்தமாக வழங்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் இந்தியாவைப் பொறுத்தமட்டில் அவ்வளவு திருப்திகரமான விடயங்களாக ஆகியிருக்கவில்லை.
கேள்வி: இந்த விடயங்கள் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதை பார்க்கின்றீர்களா அல்லது ஆதிக்கமாகப் பார்க்கின்றீர்களா?
பதில்: நான் அரசாங்கத்தில் இருந்துகொண்டு, இந்த விவகாரங்களில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தபோது எங்களால் இயன்றவரை இதிலுள்ள பாரதூரங்களை சுட்டிக்காட்டியிருக்கிறேன். இதற்கு முன்னைய அரசாங்கம் எடுத்த கடன்கள், சீன அரசாங்கத்திலிருந்து மீளமுடியாமல் அந்த கடன் சுமைக்கு பரிகாரமாகத்தான் அந்த கடனை முதலீடாக மாற்றுகின்ற நடவடிக்கைக்கு நாங்கள் இறங்கநேரிட்டது.
அதை சமன் செய்வதற்காக விமானத் தளத்தை இந்தியா முழுமையாக முதலீடு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று ஒரு சமப்படுத்தல் செயற்பாட்டை செய்வதற்கு நாங்கள் தடைப்பட்டோம். அதற்கு பிரதியீடாக திருகோணமலை துறைமுகத்தை ஜப்பானும் இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து முதலீடு செய்து அபிவிருத்தி செய்வதற்கு நாங்கள் இடம் கொடுப்போம் என்று உபாய ரீதியான கருத்தை நாங்கள் புதுடெல்லியுடன் பகிர்ந்துகொண்டோம்.
ஆனால், ஏதோ ஒன்று நடந்துவிட்டது என்பதற்காக இந்தியாவை சமாளிப்பதற்கு செய்கின்ற விடயமாக இந்தியா பார்த்ததா அல்லது இலங்கை அரசாங்கம் தங்களை பாராமுகமாக நடத்திவிட்டது என்று அவர்கள் கருதினார்களா என்று ஒருசிலர் பேசலாம்.
ஆனால், பிரதமர் மோடி பதவிக்கு வந்து இப்போதுது மூன்று அல்லது நான்காவது தடவையாக இலங்கைக்கு வந்திருக்கிறார். இலங்கை என்பது தன்னுடைய பாதுகாப்பு செயற்திட்டத்திலும் தனது சுபீட்சத்துக்கும் அவசியமான நட்பு நாடாக இந்தியா கருதுகிறது என்று கோடிட்டுக் காட்டுவதற்காகத்தான் அடிக்கடி இந்த விஜயங்கள் நடக்கின்றன.
இதற்கு முன்னர் ஒரு இந்திய பிரதமர் இலங்கைக்கு நட்புரீதியான நல்லெண்ண விஜயங்களை இவ்வளவு தூரம் செய்யவில்லை. இது அண்மைக்காலத்தில் கூடுதலாக நடந்திருக்கிறது. எனவே, எவ்வளவுதான் கருத்து முரண்பாடுகள் சில கசப்புணர்வுகள் அவ்வப்போது ஏற்பட்டாலும் அவையெல்லாம் சரி செய்யப்படலாம் என்பதில் நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம்.
கேள்வி: இந்தியாவில் பாரதிய ஜனாதா கட்சி ஆட்சிக்கு வந்தபின்னர் இலங்கை தமிழர்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்களா, இல்லையா?
பதில்: மோடி வந்து போகிறார் என்பதற்காக தமிழர்களின் பிரச்சினைகள் எதுவும் சரியாக தீர்ந்தபாடில்லை. அவர்களுடைய பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு என்பது அரசியல் சாசனத்தில் சில மாற்றங்கள் வேண்டும் என்ற முயற்சி இன்னும் கைகூடவில்லை. அதேநேரம் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது நடந்த சில விடயங்களை பூரணமாக விசாரணைக்கு உட்படுத்தி அதில் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற போராட்டமும் இன்னும் முற்றுப்பெறவில்லை.
இந்திய மத்திய அரசில் எவர் ஆட்சிக்கு வந்தாலும், சிங்கள பேரின சக்திகளுக்கு எதிரான தீர்வை அவர்கள் தரப்போவதில்லை என்ற விடயம் இன்று தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகின்றது. நரேந்திர மோடி அல்லது வி.ஜே.பி. ஆட்சி வந்துவிட்டது என்பது தமிழர்களுக்கு பெரிய சாதகமான ஒரு சூழலை ஏற்படுத்தி விட்டது என்று யாரும் அறுதியிட்டு கட்டியம் கூறமுடியாது.
இந்தியா மத்திய அரசாங்கத்தில் யார் வந்தாலும் இலங்கை விவகாரங்களில் உள்நாட்டிலிருந்து உருவெடுக்கக்கூடிய ஒரு தீர்வு அதை இயலச் செய்வதற்கான நல்லெண்ண ஒத்துழைப்பை இந்தியா வழங்க முடியுமே தவிர, பலவந்தமாக எதையும் செய்ய இயலவில்லை. கடந்த காலங்களில் பலவந்தமாக செய்யமுற்பட்டு இருந்த பிரச்சினையில் இன்னும் சில விபரீதங்கள் ஏற்பட்டு விட்டன. எனவேதான், இந்தியா பக்குவமாகவும், சாணக்கியமாகவும் தூரநோக்கோடும் இதற்கான அழுத்தங்களை தேவைக்கேற்றவாறு செய்து கொண்டு வருகின்றது. அதுதான் சரியான அணுகுமுறை கூட.
கேள்வி: தனி ஈழம் மாத்திரமே தீர்வு என்று இலங்கையிலிருக்கும் தமிழர்கள் இன்றும் நம்புகிறார்களா?
பதில்: அரசியலுக்காக எதையும் பேசலாம். ஒவ்வொருவருடைய அரசியல் நோக்கங்களும் பலவாறாக இருக்கலாம். அதற்காக அதுதான் தீர்வு என்பதல்ல. தாங்கள் நினைத்தது மாத்திரம்தான் தீர்வு என்று பிடிவாதமாக இருப்பதும் ஒரு சாணக்கியமான அரசியல் அணுகுமுறையாக இருக்கமாட்டாது. கோரிக்கைகள் எதுவாகவும் இருக்கலாம். ஆனால், தீர்வு சகல தரப்பினரின் ஒரு அங்கீகாரத்தோடு குறைந்தபட்ச ஒப்புதலோடு அடைய முடியும்.
எனவே அதை அடைவதற்கான ஒரு உளப்பூர்வமான முயற்சி செய்யப்பட்டாக வேண்டும். அதை ஆரம்ப கட்டத்தில் உளப்பூர்வமாக செய்யப்படுகின்றபோது இடைநடுவில் தீவிரவாதிகள் அதை அப்படியே தடுத்து விடுகிறார்கள். இதுதான் இந்த நாட்டில் மாறி மாறி நடந்து வருகிறது.
கேள்வி: தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்திருக்கின்றீர்கள். இந்த சந்திப்பு எவ்வாறு நிகழ்ந்தது? எப்படி இருந்தது?
பதில்: மறைந்த கலைஞர் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு வந்த நிலையில், அண்மையில் பாராளுமன்ற தேர்தலில் பெரு வெற்றியீட்டிய நண்பர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து கூறவேண்டும் என்ற ஒரு நல்லெண்ண சந்திப்பாகத்தான் அது இருந்தது. அந்த சந்திப்பின்போது தற்போதைய இலங்கையின் களநலைவர பற்றி அவருடன் பகிர்ந்துகொண்டேன். அதேநேரம் இந்திய மாநில மட்டத்தில் தமிழகத்தில் நடக்கின்ற சில விடயங்கள் சம்பந்தமாகவும் நாங்கள் கருத்துகளை பரிமாறிக் கொண்டோம். மொத்தத்தில் ஒரு சிறிய குறுகிய சந்திப்பாக இருந்தாலும் ஆக்கபூர்வமான சில விடயங்களை கலந்துரையாட முடிந்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
(நன்றி: வீரகேசரி 17.06.2019)