இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர் ரத்னதேரர் உரையாற்றியதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் ஆற்றிய உரையின் போதே இவ்வாறு கேள்விஎழுப்பினார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
எனக்கு முன்னர் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர் அல்-குர்ஆனில் ஏனைய மதத்தினரை அழிக்குமாறு கூறியுள்ளதாகவும் அல் குர்ஆனில் இல்லாத வசனங்களை உள்ளதாக கூறி உரையாற்றினார். அரபு மொழியில் உள்ள அல்குர்ஆனை இவர்களுக்கு விளங்கப்படுத்தியது யார் என்பதை நாங்கள் முதலில் அறிய வேண்டும்.இதுதான் இஸ்லாம் இதுதான் முஸ்லிம்கள்என்பதை இவர்களுக்கு விளங்கப்படுத்தியது யார் என்பதையும் அறிய வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டவர் சஹ்றான் என்பதை இங்குள்ள பலர் மறந்துவிட்டனர்.ரிசாட் பதியுதின், ஹிஸ்புல்லாஹ் போன்றவர்களே அந்த தாக்குதலை மேற்கொண்டது போன்றே இன்று இவர்களின் பிரச்சாரமும் நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. நான் மீண்டும் கூறுகிறேன் இந்த தாக்குதலை மேற்கொண்டது தீவிரவாதி சஹ்றான். ஆனால் ரிசாட் பதியுதீன் ஹிஸ்புல்லாஹ் பெயரை கூறி நீங்கள் அடுத்த தேர்தலுக்கு வாக்கு சேகரிக்கிறீர்கள்.
தாக்குதல் மேற்கொண்டவர் உங்களுக்கு முக்கியமில்லை. தாக்குதலால் பாதிக்கப்பட்ட நாட்டை கட்டியெளுப்புவதில் அக்கறையுமில்லை. உங்களின் தேவையெல்லாம் இனவாதத்தை தூண்டி அடுத்த தேர்தலுக்கு வாக்கு சேகரிப்பதே.
ரிசாத் பதியுதீன், ஹிஸ்புல்லாஹ் பெயரால் நீங்கள் வளர்த்த இனவாதத்தின் விளைவை குருநாகளிலும் மினுவான்கொடையிலும் கண்டோம்.
வீதியில் கடலை விற்கும் முஸ்தபா உங்களுக்கு என்ன செய்தார்? வீதி அருகில் தேநீர் கடை வைத்திருக்கும் ஹாஜியார் உங்களுக்கு என்ன செய்தார் ?இருபது வருடங்கள் கஷ்டபட்டு உழைத்ததை இருபது நிமிடங்களில் அழித்தீர்கள்.முஸ்தபாவும் ஹாஜியாரும் சஹ்ரானுடன் இணைந்து தாக்குதல் மேற்கொண்டார்களா?
இப்போது எமது நாட்டில் உண்ணாவிரதம் மேற்கொண்டால் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றிவிடலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.அதிலும் உண்ணாவிரதத்தை காவி உடை அணிந்தவர்கள் மேற்கொண்டால் அதற்கு இன்னும் பலம் அதிகம். நீதிமன்றங்களையும் பாராளுமன்றத்தையும் விட இப்போது இந்த உண்ணாவிரதங்கள் பலமாக உருவெடுக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் வியாலேந்திரனின் செயற்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளன.இந்த வியாலேந்திரன் என்பவர் யார்? கடந்த 52 நாட்கள் அரசியல் குழப்பத்தில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கியவர்
தமிழ் மக்கள் கஷ்டப்படும்போது இவர் அவ்வாறான உண்ணாவிரதங்களை மேற்கொள்ளவில்லை இப்போது தான் எந்த கட்சி என தெரியாமல் உள்ளபோதே இந்த உண்ணாவிரதங்களை மேற்கொள்கிறார்.இவர் தமிழ்கூட்டமைப்பா? மைத்ரியின் கட்சியா?மஹிந்தவின் கட்சியா? என்று தெரியாமல் இருக்கும்போதே தமிழ்மக்களின் வாக்குகளை பெற இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்
இப்போது சவூதி அரேபியாவில் இருந்து வரும் நிதி மூலம் நாம் தீவிரவாத செயற்பாடுகளை முன்னெடுப்பதாக கூறுகிறார்கள் ஆனால் சவூதி அரேபியா நிதி ஒதுக்கீட்டின் மூலம் கட்டப்படும் பாலங்கள் பற்றியோ வைத்தியசாலை கட்டிடங்கள் பற்றியோ இவர்கள் ஒன்றும் கூறுவதில்லை
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின் எமது நாடு பாரிய சவால்களை எதிர்கொண்டது இனவாதம் தூண்டப்பட்டு பாரிய அழிவொன்றை நோக்கி எமது நாடு பயணிக்கிறது.
ஆனால் இந்த பிரட்சினைகளுக்கெல்லாம் நாம் தீர்வை கண்டோமா என கேட்டால் இல்லை என்றே பதில் கிடைக்கும். நாம் தீர்வை தேடினோம். எங்கு தேடினோம். முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடையில் தீர்வை தேடினோம். முஸ்லிம் வியாபாரிகள் விற்கும் உள்ளாடைகளில் தீர்வை தேடினோம். முஸ்லிம் ஹோட்டல்களில் தீர்வை தேடினோம். இறுதியாக சிங்கள பெண்களின் கருப்பைக்குள் தீர்வை தேடினோம்.
இவ்வாறு தேடுபவர்களின் நோக்கம் தீர்வா? என்பதை இந்த உயரிய சபையில் இருக்கும் நாம் அனைவரும் ஒருகனம் சிந்திக்க வேண்டும்.இவர்கள் ஊடகங்களில் காட்டும் இந்த படங்களை ஒருபுறம் தள்ளிவிட்டு உங்கள் மனசாட்சியை தொட்டு ஒருகனம் சிந்தியுங்கள். இதற்கான தீர்வு உங்களுக்கு கிடைக்கும் அதைவிட்டு ஆடைகளிலும் உள்ளாடைகளிலும் தேடினால் எமக்கு தீர்வு கிடைக்காது.