கல்முனை தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நள்ளிரவில் ரயர் எரித்தவர்களை தேடி இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இன்று (19) காலை நற்பிட்டிமுனை சந்தி கிட்டங்கி வீதி உள்ளடங்களாக பொதுக்கட்டடங்கள் தனியார் கல்வி நிலையங்கள் கடைகளில் குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நள்ளிரவு வேளை நற்பிட்டிமுனை கிட்டங்கி வீதிகளில் திடிரென வந்த குழு ஒன்று ரயர்கள் மரக்கட்டைகளை வீதியின் குறுக்காக இட்டு தீயிட்டு தப்பி சென்றனர்.
இதனால் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததுடன் அவசர அழைப்பின் பிரகாரம் அவ்விடத்திற்கு வந்த கல்முனை பொலிஸார் தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.
இச்செயற்பாட்டை மேற்கொண்டவர்கள் பொதுப்போக்குவரத்தை குழப்பும் நோக்குடன் செயற்பட்டுள்ளதுடன் பொலிசாரின் வருகையை அடுத்து அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றனர்.
இந்நிலையில் தப்பியவர்களை தேடி இராணுவம் பொலிஸார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு தேடி வருகின்றனர்.
மேலும் சம்பவம் நடைபெற்ற இடம் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள இடத்திலிருந்து 1 கிலோமீற்றர் தூரத்தில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் குறித்த உண்ணாவிரதப்போராட்டத்திற்கு ஆதரவாக கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டள்ளது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கல்முனையில் மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுவரும் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை 20 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் கடையடைப்பு செய்து ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கிழக்கு மாகாண மாணவர் பேரவை எனும் அமைப்பால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.