உலமா கட்சியினால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியிடம் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் முஸ்லிம்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் தொடர்பிலான 16 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பெசில் ராஜபக்ஷவிடம் உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் நேற்று (26) கையளித்தார்.
இங்கு கட்சியின் இணைச்செயலாளர் சி. எம்.வை. இஸ்ஸதீன், உதவி செயலாளர் பொறியியலாளர் இஸ்ஸதீன் உட்பட பல பொது ஜன பெரமுனவின் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இந்த கோரிக்கைகள் அடங்கிய மகஜர் பின்வருமாறு,
1.அரசியல் சாசனத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களின் மத, கலாசார உரிமைகள் பாதுகாக்கப்படும் விடயத்தில் அரசு நீதியாக செயற்படும் உத்தரவாதம் தரப்பட வேண்டும்.
2.நாட்டில் எந்தவொரு இன, மத மக்களுக்கெதிராக யாரும் குறிப்பாக மத தலைவர்கள், அரசியல்வாதிகள் வெறுப்பூட்டும் பேச்சை பேசினால் அவர்கள் யாராக இருப்பினும் கைது செய்யப்பட வேண்டும்.
3.அளுத்கம கலவரம் முதல் மினுவாங்கொடை வரை நடை பெற்ற கலவரத்தின் சூத்திரதாரிகள் விசேட ஆணைக்குழுவின் மூலம் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
4.முஸ்லிம் நாடுகளுக்கான தூதுவர்களாக முஸ்லிம்கள் நியமிக்கப்பட வேண்டும்.
5.பௌத்த மக்கள் வாக்காளர்களாக இல்லாத பிரதேசத்தில் சிலை வைப்பது, முஸ்லிம்கள் வாக்காளர்களாக இல்லாத பகுதியில் பள்ளி கட்டுவது போன்றவை தடை செய்யப்பட வேண்டும். அவ்வாறு ஏதும் இருந்தால் அவற்றை நீக்கும் தைரியம் உள்ளதாக அரசு இருக்க வேண்டும்.
6.வடக்கையும் கிழக்கையும் இணைக்காத நிலையில் தமிழர்களும் முஸ்லிம்களும் திருப்தி கொள்ளும் வகையிலான அரசியல் தீர்வு அவசியம்.
7.மாகாண சபை முறை கலைக்கப்பட்டு மாவட்ட சபைகள் அமைக்கப்படுவதை உலமா கட்சி வரவேற்கிறது. மாவட்ட சபைக்கு ஒரு முதல் அமைச்சர் 4 அமைச்சர்கள் என நியமிக்கப்படலாம்.
8.முஸ்லிம் பெண்களுக்கான கௌரவத்தை அரசு பாதுகாக்க வேண்டும். முகம் மறைத்தல் தவிர்ந்த எத்தகைய ஆடையையும் அணியும் சுதந்திரம் அவர்களுக்கு வழங்க வேண்டும்.
9.நாட்டில் அனைத்து வகை தீவிரவாதமும் ஒழிக்கப்பட வேண்டும்.
10.இனங்களுக்கிடையிலும் மதங்களுக்குமிடையில் சௌஜன்யத்தை ஏற்படுத்தும் வகையில் அனைத்து சமயத்தலைவர்களையும் உள்ளடக்கிய ஜனாதிபதி அல்லது பிரதமர் தலைமையிலான ஆலோசனை சபை அமைக்கப்பட வேண்டும். இதன் உறுப்பினர்கள் சகல சமயத்திலிருந்தும் சமமான எண்ணிக்கை கொண்டிருக்க வேண்டும்.
11.யுத்த காலத்தில் வடக்கு கிழக்கில் முஸ்லிம்கள் இழந்த காணிகள் திரும்ப வழங்கப்பட வேண்டும்.
12.நாட்டில் இரண்டு உப ஜனாதிபதிகள் இருக்க வேண்டும். ஒருவர் முஸ்லிம் இன்னொருவர் தமிழர். இவர்களும் ஜனாதிபதி தேர்தலின் போது அந்தந்த இனத்தவரால் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்கள் முன்னாள் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்க கூடாது. ஆகக்குறைந்தது பட்டதாரியாக இருக்க வேண்டும்.
13. 1992ம் ஆண்டு வழங்கப்பட்ட மௌலவி ஆசிரிய நியமனம் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் 2010ல் வழங்கப்பட்டபின் இன்னமும் வழங்கப்படவில்லை. அந்நியமனம் வழங்கப்பட வேண்டும் என்பதுடன் அதற்கான போட்டிப்பரீட்சை சமயம் சார்ந்ததாகவும் சமயம் சார்ந்த மொழியிலும் இருக்க வேண்டும். இதனை கண்கானிக்கும் அதிகாரம் உலமா கட்சிக்கு வழங்க வேண்டும்.
14.அரபு மதுரசாக்கள் அனைத்தும் ஒரே பாடத்திட்டத்தை கொண்டதாகவும் அவற்றில் கற்று வெளியேறிய பின் அரசாங்கத்தினால் விசேட பொதுப்பரீட்சை நடத்தப்பட்டு மௌலவி தராதர பத்திரம் வழங்கப்பட வேண்டும். மதுரசாவில் சேர்க்கப்படும் மாணவர்கள் குறைந்தது ஆண்டு 9 வரை பொது பாடசாலையில் கல்வி கற்றவராக இருக்க வேண்டும். மதுரசாக்களின் கல்வி ஆண்டு 5 வருடத்துக்கு மேற்பட கூடாது. மதுரசா முடித்தோருக்கு மௌலவி பட்டம் வழங்காமல் உயர் கல்வி டிப்ளோமா பத்திரம் வழங்கப்பட்டு பின்னர் முஸ்லிம் சமய கலாசார அமைச்சினால் பொது பரீட்சை வழங்கப்பட்டு மௌலவி சான்றிதழ் வழங்க வேண்டும். இதனை பெற்றவர்களையே அரசு பள்ளிவாயல்களின் இமாம்களாக நியமிப்பதுடன் அவர்களுக்கான சம்பளத்தை அரசு வழங்க வேண்டும்.
15.அனைத்து இன பெண்களுக்கு மட்டுமான பல்கலைக்கழகம் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
16.கல்முனை பிரதேச செயலக பிரச்சினையை தீர்க்கும் வகையில் கல்முனை பிரதேச செயலகத்தை இரண்டாக பிரித்து கல்முனை ஸாஹிரா கல்லூரி முதல் தாளவெட்டுவான் வரை கல்முனை பிரதேச செயலகம் என்றும் 99 வீதம் தமிழ் மக்கள் வாழும் பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பை இணைத்து பாண்டிருப்பு பிரதேச செயலகம் என்றும் வழங்கி இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.