இந்தியாவில் ஜனநாயகம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. ஆனால் இலங்கையில் ஜனநாயகம் பேரளவிலேயே இருக்கின்றது. இந்தியாவில் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாகவோ நிதி அமைச்சராகவோ வர முடியும். ஆனால் இலங்கையில் அது ஒரு கனவாகவே இருக்கும் எனவே தான் ஜனநாயகம் பேரளவிலேயே இருக்கின்றது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னணியின் அபிவிருத்தி குழு கூட்டம் தலவாக்கலை விருந்தகத்தில் 01.06.2019 அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவில் ஒரு கருத்தையும், இலங்கையில் ஒரு கருத்தையும் சொல்லக் கூடியவர். அதனை கடந்த கால ஜனாதிபதியின் செயற்பாடுகள் எங்களுக்கு உணர்த்திருக்கின்றது. எனவே ஜனாதிபதி தேர்தல் டிசம்பர் 7ம் திகதி நடைபெறுமா என்பது கேள்விக்குரியது.
மலையக மக்கள் முன்னணி தொடர்பாக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் நிலவி வந்தாலும் எந்தவிதமான உட்பூசல்களும், பிரச்சினைகளும் இல்லை. இன்று நடைபெற்ற கூட்டத்தில் அணைவரும் கலந்து கொண்டார்கள். கலந்து கொள்ளாத அரவிந்தகுமார் தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலியா சென்றுள்ளார். செயலாளர் நாயகம் சுகவீனமுற்ற நிலையில் இருக்கின்றார். ஏனைய முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருக்கின்றார்கள்.
அனைத்து கட்சிகளிலும் பிரச்சினைகள் வருவது சகஜம். அதனை அவ்வப்போது கட்சிக்குள் பேசி தீர்த்துக் கொள்ள முடியும் என்பது எனது கருத்தாகும்.
பாராளுமன்ற உறுப்பினர் வணக்கத்துக்குரிய ரத்தன தேரரின் உணவு தவிர்ப்பு போராட்டம் ஜனநயாக ரிதியான போராட்டமாக நான் பார்க்கின்றேன். ஆனால் இது சரியா பிழையா என்ற விவாதத்திற்கு அப்பால் சென்று உணவு தவிர்ப்பு போராட்டம் மூலம் அனைத்து அரசியல் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுகின்றது.
ஆளுநர்களை பதவியிலிருந்து நீக்குவது ஜனாதிபதியின் பொறுப்பு ஏனெனில் ஆளுநரை ஜனாதிபதியே நியமிக்கின்றார். எனவே எல்லா பிரச்சினைகளுக்கும் உணவு தவிர்ப்பு போராட்டத்தை கையில் எடுப்பது என்பது தேவையற்ற பிரச்சினையை உருவாக்கும் என நான் நினைக்கின்றேன். எனவே பேச்சுவார்த்தை மூலம் இதனை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே எனது கருத்தாகும் என்றார்.