நீங்கள் தேசிய ஒருமைப்பாடு மற்றும் சமூக மேம்பாட்டுக்கும் பொறுப்பான அமைச்சராக இருக்கிறீர்கள்.
உங்களின் நாளாந்த உரைகளும் அறிக்கைகளும் இன நல்லுறவை வார்த்தைகளில் வலியுறுத்துகின்றன. நல்ல விடயம். பாராட்டுகிறோம்.
எமது நாடு பல்லின சமூகங்கள் தொன்றுதொட்டு வாழ்ந்து வருகின்ற ஒரு நாடு. அண்மைக்காலமாக இங்கு நடைபெற்று வருகின்ற சம்பவங்கள் இந்நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை இல்லாமற்செய்து, முரண்பாட்டை விதைப்பதாகவே தோன்றுகின்றது.
அண்மையில் உங்களால் அறிவிப்புச்செய்யப்பட்ட அரபு மொழிப்பாவனையைத் தடுக்கும் சுற்றுநிருபமானது அதற்கு இன்னும் தீனி போடுவதாகவே உள்ளது.
பொதுவாக, பல மொழிகளில் ஒருவர் தேர்ச்சிபெற்றிருந்தால் அதனைப் பெருமையாகப் பார்க்கப்படுகிறது. மொழித்தேர்ச்சியானது வெறுமனே ஏட்டில் இல்லாமல் பயன்பாட்டில்உள்ள போது தான் மென்மேலும் விருத்தியாகும் என்பது பொதுவான உண்மை என்பது ஒருபுறமிருக்க,
ஒவ்வொரு மதமும் அதற்கென்ற மொழியிலேயே உள்ளது. அவை மத செயற்பாடுகளில் மாத்திரமே பல மதத்தவர்களால் பயன்படுத்தப்படுகையில், இஸ்லாம் மதத்தின் அரபு மொழி முஸ்லிம்களின் பேசுமொழியாகவும் இருப்பது சிறப்பம்சமாகும்.
எமது நாட்டு முஸ்லிம்கள் தாம் சார்ந்த பிரதேசங்களுக்கேற்றவாறு சிங்களத்தையும், தமிழையும் தமது தாய்மொழியாக கொண்டுள்ளனர். எனினும், மத விடயமாகின்ற போது அரபுமொழிப் பிரயோகம் தவிர்க்கப்பட முடியாததாகும். அரபுமொழி, இஸ்லாம், முஸ்லிம்ஆகிய மூன்றும் ஒன்றுடனொன்று பின்னிப்பிணைந்ததாகும்.
இந்நிலையில் அரபு மொழிப் பிரயோகத்தை தடுக்கும் வகையிலான உங்களின் சுற்றுநிருபம் முஸ்லிம்களாகிய எங்களை வேதனைப்படுத்தியுள்ளது. இது உங்களின் முடிவல்ல என்று சொல்லிப்போக முடியாது. ஏனெனில், தாம் சார்ந்த அமைச்சின் விடயதானங்களுக்கு குறித்த அமைச்சரே பொறுப்புதாரியாவார்.
நிற்க, இலங்கையின் தேசிய மொழிகளைத் தவிர்ந்த ஏனைய மொழிகளின் பயன்பாட்டைத் தடைசெய்வதானால், பிரெஞ்சு, யப்பான், சீன, ஹிந்தி போன்ற மொழிகளைக் கற்பிப்பதனையும் தடைசெய்ய வேண்டுமல்லவா?
அரபுநாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காக செல்பவர்களுக்கு அரபு கற்பிக்கப்படுவதனையும் நிறுத்த வேண்டுமல்லவா?
தேசிய மொழிகள் தவிர்ந்த ஏனைய மொழிகள் அனைத்தும் தடை என்று சொல்லிவிட்டு, இந்நாட்டு குடிமக்களாகிய முஸ்லிம்களின் மத மொழியான அரபுமொழியை மாத்திரம் பின்தொடர்வது எந்த வகையில் நியாயமாகும்?
முஸ்லிம்களுக்கெதிராக திட்டமிட்டு இனவாதிகளால் நெருக்குவாரங்கள் பிரயோகிக்கப்பட்டு வரும் நிலையில், உங்களாலும் இந்த விடயம் முன்னெடுக்கப்பட்டதானது உங்கள் மீது முஸ்லிம்கள் கொண்டுள்ள நன்மதிப்பில் கரும்புள்ளியை உண்டாக்கியுள்ளது.
அமைச்சர் அவர்களே! இவ்வாறான நெருக்குவாரங்களுக்கிடையில் இன நல்லுறவும், தேசிய ஒருமைப்பாடும், சமூக மேம்பாடும் எவ்வாறு உருவாகும்?
-வைத்திய கலாநிதி என்.ஆரிப்-