அமைச்சர் ரிஷாத் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி ஆகியோர் பதவியில் இருந்து விலக்கப்பட வேண்டும் என்கிற அழுத்தம் எவ்வித நியாயமான காரணங்களும் இல்லாத அடிப்படையற்ற கோரிக்கையாகும் எனக் குறிப்பிட்டுள்ள கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், இதற்கு எமது முஸ்லிம் சமூகம் தலைசாய்க்குமாயின் எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் அரசியலானது சூன்யமாக மாறுகின்ற துர்ப்பாக்கிய நிலை ஏற்படலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;
"ஜாதிக ஹெல உறுமயவின் ஸ்தாபகரான அத்துரெலிய ரத்ன தேரர், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றபோதிலும் கடந்த 52 நாள் ஆட்சிக் கவிழ்ப்பின்போது மஹிந்த தரப்புக்கு ஆதரவு வழங்கியதுடன் நல்லாட்சிக்கெதிரான கருத்துக்களை விதைத்துக் கொண்டு வந்த சூழ்நிலையில், தற்போது அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், ஆளுநர் ஆசாத் சாலி ஆகியோர் பதவியில் இருந்து விலக வேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும் என்று கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார்.
ஆனால் என்ன குற்றத்திற்காக எந்த அடிப்படையில் இக்கோரிக்கை வலியுறுத்தப்படுகிறது என்பதில் எந்த விதமான தெளிவுமில்லாமல் இருக்கிறது.
ஒருவர் மீது ஏதாவது ஒரு விடயம் குறித்து குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால், அது தொடர்பில் விசாரணை செய்து, தீர்ப்பளிக்கின்ற அதிகாரம் நீதிமன்றங்களுக்கும் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்ற ஆணைக்குழுக்களுக்குமே உள்ளது. தனி நபர்களுக்கோ அல்லது இயக்கங்களுக்கோ அந்த அதிகாரம் கிடையாது.
பிக்குமார்களோ அல்லது இனவாத அமைப்புகளோ முன்னின்று இவ்வாறு சிறுபான்மைச் சமூகத்தினரின் தலைமைகளை அரசியல் அதிகாரங்களில் இருந்து அகற்றுவதற்கு முயற்சித்தால், அது மீண்டும் இந்நாட்டில் மலையக தமிழ் சமூகத்தினரின் அரசியல் உரிமையை பறித்தது போன்ற ஒரு நிலையை முஸ்லிம் சமூகத்தின் மீது திணிப்பதற்கான ஓர் உபாயமாக பார்க்கப்பட வேண்டியுள்ளது.
கடந்த காலங்களில் தமிழ் சமூகத்தின் மீதும் இவ்வாறான நெருக்குவாரங்கள் திணிக்கப்பட்டதன் விளைவாக சுமார் முப்பது வருடங்கள் நாட்டில் யுத்தம் மூண்டிருந்தமை இத்தருணத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டியதொரு விடயமாகும்.
இலங்கை பௌத்த சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடாக இருந்தாலும் ஏனைய சிறுபான்மைச் சமூகத்தினருக்கும் பொதுவான தாய் நாடாகும். இந்நாட்டில் வாழ்கின்ற அனைத்து குடிமக்களுக்கும் அனைத்து உரிமையும் உண்டு என்பது அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்ட விடயமாகும்.
ஆனால் நடந்து முடிந்த ஒரு சர்வதேச பயங்கரவாத செயற்பாட்டுடன் ஒரு சில முஸ்லிம் நபர்கள் சம்மந்தப்பட்டு விட்டார்கள் என்பதற்காக, அதை சாட்டாக வைத்து முழு முஸ்லிம் சமூகத்தின் மீதும் பேரினவாதத்தின் விகாரமான முகத்தை வெளிக்காட்டுவதில் எந்த நியாயமும் இல்லை.
அப்படியொரு விடயமாகவே மேற்படி மூன்று முஸ்லிம் அரசியல் தலைமைகள் மீது முன்வைக்கப்படும் அபத்தமான குற்றச்சாட்டும் அவர்களை பதவிகளில் இருந்து விரட்டுவதற்கான பேரின சதியுமாகும் என்பதை தெட்டத்தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.
இன்று ரிஷாத் பதியுதீன், ஹிஸ்புல்லாஹ், ஆசாத் சாலி போன்றோர் மீது முன்வைக்கப்படுகின்ற போலியான குற்றச்சாட்டுகள் நாளை எமது தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டோர் மீதும் கொண்டு வரப்பட்டு, மேலும் நெருக்கடி நிலை தோற்றுவிக்கப்படலாம்.
ஆகையினால் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பிரதேசங்களில் அத்துரெலிய ரத்ன தேரர் போன்ற இனவாதிகளுக்கு எதிரான கண்டனங்களை பதிவு செய்வதுடன் இது விடயத்தில் சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்க்க விரும்புகின்றோம்.
தமது தாய் நாட்டில் சுதந்திரமாக வாழ்கின்ற உரிமை முஸ்லிம்களுக்கு மறுக்கப்படுமாயின், அவர்களது அரசியல், சமய, பொருளாதார உரிமைகளை பறிக்கின்ற இனவாத செயற்பாடுகள் தொடருமாயின் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் நிமித்தம் தங்கியிருக்கின்ற இலங்கையின் பெரும்பான்மையினத்தவர்களை அங்கிருந்து வெளியேற்றுகின்ற சூழ்நிலை தோன்றலாம்.
அத்துடன் எமது நாட்டுக்கு மிகவும் இலாபகரமாக கிடைத்து வருகின்ற அரபு, முஸ்லிம் நாடுகளின் நிதி மற்றும் பொருளாதார உதவிகள் கூட தடைப்படுகின்ற ஆபத்து ஏற்படலாம்.
தவிரவும், இன்று உலகம் ஒரு குடும்பமாக சுருங்கி தொடர்பாடல் அதிகரித்திருக்கின்ற நிலையில் மனித உரிமைகள், சட்ட நீதி நலன்கள் உலகளவில் வளர்ச்சியடைந்திருக்கின்ற வேளையில் குற்றமற்ற ஒருவரை வீண்பழி சுமத்தி, ஒட்டு மொத்த சமூகத்தையும் இம்சைப்படுத்துவதானது பாரிய விளைவை கொண்டு வந்து சேர்க்கும். அத்துடன் பயங்கரவாதத்துடன் எவ்வித தொடர்புமற்ற அப்பாவி பொது மக்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவதானது பெரும் அநீதியும் மனித உரிமை மீறலுமாகும். இவ்வாறான அடக்குமுறை செயற்பாடுகளினால் சர்வதேச அரங்கிலிருந்து இலங்கை தனிமைப்படுத்தப்படலாம் என்பதை சம்மந்தப்பட்டோர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அதேவேளை பிரதான முஸ்லிம் கட்சிகள் இரண்டும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்து வருகின்ற நிலையில், இக்கட்சிகளின் ஆதரவில்லாமல் இந்த அரசாங்கம் இருப்புக் கொள்ள முடியாததொரு நிலை காணப்படுவதனால் ஆட்சியை நிலைகுலையச் செய்வதற்கானதொரு சூட்சுமம் இந்த பேரினவாத செயற்பாடுகளின் பின்னணியில் இருப்பதையும் எம்மால் உணர முடிகிறது.
அவ்வாறு அரசாங்கம் பதவி கவிழ்ந்தால் மஹிந்த தலைமையிலான அரசாங்கம் உருவாவதற்கான வாய்ப்பிருக்கிறது. இன்று எதிர்க்கட்சிகளுக்கு சாதகமான ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்ற சூழலில் அதைப்பலப்படுத்துவதற்கான நகர்வுகளையே ரத்ன தேரரும் முன்னெடுத்து வருகின்றார்.
இதனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் புரிந்து கொண்டு, முஸ்லிம்களையும் அவர்களது அரசியல் தலைமைகளையும் பாதுகாப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
அதேவேளை கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்து, மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு முஸ்லிம் சமூகம் ஒட்டுமொத்தமாக அணி திரண்டு ஆதரவு வழங்கியதை ஜனாதிபதி அவர்கள் ஒருபோதும் மறந்து விடக்கூடாது" என்று முதல்வர் றகீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.