இன்று கல்முனை மண்ணில் உருவெடுத்துள்ள இனரீதியான பிரதேச செயலக கோரிக்கையானது இலங்கை வாழ் முழு முஸ்லிம் சமூகத்திற்கும் எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகும்.
இதனை ஒட்டு மொத்த சமூகமும் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையில் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல், சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கம் மற்றும் இளைஞர் அமைப்புகள், பொது அமைப்புகள், மீனவர் சங்கம், விவசாயிகள் சங்கம், உட்பட சகலரும் கட்சி, பிரதேச வேறுபாடுகள் மறந்து ஒன்றுபடுமாறு சாய்ந்தமருது மாளிகைக்காடு யூத் லீடர்ஸ் போரம் அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள விஷேட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமூகத்தின் இதயமாக கருதப்படும் கல்முனை மண்ணின் இருப்பு சிதைந்து போக ஒரு போதும் அனுமதிக்க முடியாது. ஒவ்வொரு சமூகமும் இனரீதியாக பிரிந்து செல்ல முற்பட்டால் இந்த நாடு அழிவினையே சந்திக்கும்.
அதேபோன்று இது கல்முனை வாழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினை மாத்திரமல்ல, இதனை ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினையாகவே பார்க்க வேண்டியுள்ளது.
எனவே கல்முனை மண்ணின் இருப்பை பாதுகாக்க அனைவரும் ஒன்றினையுமாறு சாய்ந்தமருது மாளிகைக்காடு யூத் லீடர்ஸ் போரம் முழு சாய்ந்தமருது மக்களையும் வேண்டிக்கொள்கிறது.