கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்களின் பெருநாள் வாழ்த்து..!


அஸ்லம் எஸ்.மௌலானா-
மழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று ஆன்மீக ரீதியில் பக்குவப்பட்டுள்ள முஸ்லிம்கள் தேசத்தினதும் சமூகத்தினதும் நலன்களை முன்னிறுத்தி, சகவாழ்வுக்காக அர்ப்பணிப்பு செய்ய திடசங்கற்பம் பூணுவோம் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;
தக்வா எனும் இறையச்சத்தை ஏற்படுத்தி, மனிதனைப் புனிதப்படுத்துகின்ற நோன்பின் ஊடாக நாம் கற்றுக் கொண்டுள்ள அனைத்து நற்பண்புகளையும் வாழ்வொழுங்குகளையும் நாம் முழுமையாக கடைப்பிடிப்பதன் மூலமே அந்த நோன்பின் உண்மையான இலக்கை எம்மால் அடைந்து கொள்ள முடியும்.

குறிப்பாக ஏழை, எளியவர்களின் பசியையும் கஷ்டங்களையும் உணர்ந்துள்ள நாம் அவர்களின் வாழ்வாதாரத்திற்காக எப்போதும் நேசக்கரம் நீட்டுபவர்களாகவும் வீண் செலவுகளை தவிர்த்து, சமூகத்தின் கல்வி, கலாசார வளர்ச்சிக்கும் பயனுள்ள விடயங்களுக்கும் வாரி வழங்குபவர்களாகவும் கெட்ட நடத்தைகளை முற்றாக தவிர்ந்து, நற்செயல்களில் ஈடுபடுபவர்களாகவும் துன்ப, துயரங்களின்போது பொறுமை, சகிப்புத்தன்மையை கடைப்பிடிப்பவர்களாகவும் எந்தவொரு மனிதரிடமும் விரோதம், குரோதம், பகைமை பாராட்டாமல் அனைவருடனும் நல்லெண்ணத்தை வெளிக்காட்டுபவர்களாகவும் நாம் மாற வேண்டும்.

மேலும், சர்வதேச பயங்கரவாத சக்திகளினால் எமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலைத் தொடர்ந்து ஏற்பட்ட இன்றைய அசாதாரண சூழ்நிலையினால் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் ஏனைய சமூகத்தினரால் சந்தேகக் கண்கொண்டு நோக்கப்படுகின்ற துர்ப்பாக்கியமும் அதன் விளைவாக முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு, பள்ளிவாசல்களும் பொருளாதார வளங்களும் தாக்கியழிக்கப்படுகின்ற மோசமான சூழலும் பாதுகாப்பு தரப்பினரின் நெருக்குவாரங்களும் எமது நிம்மதியை சீர்குலைத்திருப்பதானது மிகக் கவலைக்குரிய விடயமாகும்.

பேரின அடக்குமுறைக்கு மத்தியிலேயே நாம் இந்த பெருநாளை கொண்டாடுகின்றோம். மட்டுமன்றி எமது முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால இருப்பு தொடர்பில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளதுடன் இந்த இலங்கைத் திருநாட்டில் நாம் பல்லாண்டு காலமாக பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வருகின்ற சமய, கலாசார, சமூக, பொருளாதார உரிமைகள் கேள்விக்குறியாக மாறுகின்ற அபாயமும் தோன்றியுள்ளது.
இதனால் வரலாற்றில் என்றுமில்லாதவாறு பெரும் அச்சம், பீதியுடன் புனித ரமழான் நோன்பு காலத்தைக் கடந்து, பெருநாள் தினத்தை அடைந்திருக்கின்ற நாம் இனிவரும் காலங்களை பொறுமை, சகிப்புத்தன்மையுடன் எமது சமூகக் கட்டமைப்பை பற்றிப்பிடித்தவர்களாக பிற சமூகங்களுடன் ஐக்கியமாகவும் அவர்களுக்கு முன்மாதிரியான ஒரு சமூகமாக வாழ்வொழுங்குகளை பேணி நடப்பதற்கும் சமூக, தேச விரோத செயற்பாடுகளுக்கு எந்த வகையிலும் இடமளிக்காமலும் விழிப்புடன் செயற்படுவோம்.
அத்துடன் உலகின் பல பாகங்களிலும் குறிப்பாக பலஸ்தீன், சிரியா, ஈராக் உள்ளிட்ட அரபு நாடுகளில் நசுக்கப்பட்டும், கொன்றொழிக்கப்பட்டும் வருகின்ற எமது முஸ்லிம் சகோதரர்களின் விடிவுக்காக இப்புனிதத் திருநாளில் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்.
மேலும், ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்ற அனைத்து முஸ்லிம்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். ஈத்முபாரக்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -