கல்முனை தமிழ் உப பிரதேச செயலக தரமுயர்வு விடயம் தொடர்பாக கல்முனை மாநகர முதல்வர் அலுவலகத்தில் இன்று (20) பிற்பகல் இடம்பெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தை எவ்வித தீர்க்கமான முடிவுகளும் எட்டப்படாத நிலையில் முடிவுற்றது. ஆனால் தமிழ் தரப்பு உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் முஸ்லிம்களின் சாத்வீக சத்தியாக்கிரக போராட்டம் என்பன தொடர்ந்தும் இடம் பெறுகின்றது.
பாரளுமன்ற உறுப்பினர்களான அதுரலிய ரத்ன தேரர், வியாழந்திரன் உட்பட்ட குழுவினருக்கும் கல்முனை மாநகர சபை முதல்வர் ஏ.எம்.ரக்கீப் உள்ளிட்ட அனைத்து பள்ளிவாசல் சம்மேளன தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையிலான குழுவினருக்குமிடையிலான கல்முனை மாநகர சபையில் இன்று (20) பிற்பகல் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, எவ்வித தீர்க்கமான முடிவுகளும் எட்டப்படாத நிலையில் நிலத்தொடர்பற்ற இனத்துவ ரீதியில் பிரதேச செயலகம் தர முயர்த்தப்படுவதிலுள்ள இடர்பாடுகள் மற்றும் காலாகாலமாக கல்முனை மாநகர பிரதேசத்தில் ஒற்றுமையாக வாழ்ந்த தமிழ் முஸ்லிம் தரப்பினரிடையே இன விரிசலை ஏற்படுத்தும் சதி வலையில் தமிழர்கள் ஈடுபட்டு வருவதுடன், தங்களது அரசியலுக்காக இரு சமூக மக்களையும் பிரிக்க சில தீய சக்திகள் முனைவதாகவும் முஸ்லிம்கள் தரப்பில் எடுத்துக் கூறப்பட்டது.
இங்கு அத்துரலிய ரத்ன தேரருக்கு விடயம் எடுத்து முன்வைக்கப்பட்டதுடன், இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அம்பாறை அரசாங்க அதிபர், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எல்லை நிர்ணயம் தொடர்பாகவும் தெளிவான முடிவை எட்டுவதற்கான முயற்சியை மேற்கொள்வதற்கு சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்ட நிலையில் சுமார் 2 மணித்தியாலங்கள் நடைபெற்ற இப் பேச்சுவார்த்தை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.