அப்படியானால் முன்னாள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கே.டபிள்யு தேவநாயகத்தின் பணிப்புரையும், முன்னாள் பொது நிருவாக உள்நாட்டு அமைச்சர் யூ. பி. விஜயகோனின் ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானமும் பின்னர் 1993 இல் அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானமும் சட்ட விரோதமானவையா?
இவ்வாறு கிழக்குத் தமிழர் கூட்டமைப்புத் தலைவரும் அம்பாறை மாவட்ட தமிழர் மகாசங்க முக்கியஸ்தரும் ஆய்வாளருமான செங்கதிரோன் தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் தெரிவித்தார்.
'கல்முனை உப பிரதேச செயலகம் கடந்த 1989.04.12 ஆம் திகதி ஆயுதமுனையில் சட்டவிரோதமாக உருவாக்கப்பட்டது' என்று தேசிய காங்கிரஸின் முன்னாள் பிரதி கொள்கை பரப்புச் செயலாளர் அஹமட் புர்க்கான் தெரிவித்ததாக 19.06.2019 வீரகேசரி பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது.
அதனை மறுதலித்த த.கோபாலகிருஸ்ணன் மேலும் கூறுகையில்:
12.04.1989 இல் உருவான கல்முனை வடக்கு (தமிழ்) உப பிரதேச செயலகம் என்பது முன்னாள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் காலஞ்சென்ற கே. டபிள்யூ தேநாயகம் அவர்கள் அப்போதைய அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு வழங்கிய பணிப்புரையின் படியும் பின்னர் 1989 பெப்ரவரி பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் பின்னர் இது விடயமாக முன்னாள் பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் யூ. பி. விஜயகோனின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத் தீர்மானத்தின்படியுமே உருவாக்கப்பட்டது. பின்னர் 1993 இல் அமைச்சரவைத் தீர்மானத்தின்படி நாடளாவிய ரீதியில் இருபத்தியெட்டு உபபிரதேச செயலகங்கள் தரமுயர்த்தப்பெற்ற போது கல்முனைத் தமிழ்ப் பிரிவும் அதில் ஒன்றாக அமைந்தது.
ஆனால் ஏனைய இருபத்தியேழு உபபிரதேச செயலகங்களும் தரமுயர்த்தப் பெற்றபோது கல்முனை மட்டும் புறக்கணிக்கப்பட்டது. இதுவே நடந்த உண்மையாகும். இப்படியிருக்கும்போது முப்பது வருடங்களும் கழிந்த பின்னர் இப்பிரதேச செயலகத்தின் உருவாக்கம் சட்டவிரோதமானது எனக் கூறுவது 'மதியீனம்' ஆகும்.
அப்படியானால் முன்னாள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கே.டபிள்யு தேவநாயகத்தின் பணிப்புரையும், முன்னாள் பொது நிருவாக உள்நாட்டு அமைச்சர் யூ. பி. விஜயகோனின் ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானமும் பின்னர் 1993 இல் அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானமும் சட்ட விரோதமானவையா?
தேசிய காங்கிரஸின் முன்னாள் பிரதி கொள்கை பரப்புச் செயலாளர் அவர்கள் பொய்யான முரண்பாடான தீய நோக்கங்கள் கொண்ட இ;வ்வாறான அறிவிப்புக்களைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.