அத்தோடு எந்தவொரு குற்றமுமின்றி வைத்தியர் ஷாபி தல்கஸ்பிடி பிரதேசத்தில் போட்டியிட்ட பிரதேச சபை வேட்பாளர் அசாத் நஸீர் போன்றவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் இவர்களை விரைவாக விடுதலை செய்ய வேண்டும் இல்லாவிட்டால் ஆர்ப்பாடம் செய்யவும் தயாராகவுள்ளேன் என முன்னால் வடமேல் மாகாணசபை உறுப்பினர் நஸீர் தெரிவித்துள்ளார்.
அன்மையில் சியம்பலாகஸ்கொடுவ பகுதியில் வீதிகள் தாரிட்டு செப்பனிடும் வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் நடைபெற்ற கூட்டமொன்றின் போதோ அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் குளியாப்பிடிய பிரதேசசபை உபதவிசாளர் இர்பான் பிரதேசசபை உறுப்பினர் சபீர் அவர்களும் கலந்து கொண்டனர்.
அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்.
வைத்தியர் ஷாபி போன்றவர்களை கைது செய்து போலியான குற்றச்சாட்டுகள் மூலம் முஸ்லிம் வைத்தியர்கள் மீதான நம்பிக்கையை இல்லாது செய்யும் ஒரு சதியாகவே நான் இதனை பார்க்கின்றேன்.
முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் மீது கைவைத்த அவர்கள் இன்று வைத்தியத்துறையிலும் கை வைத்திருக்கிறார்கள் இது குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வைத்தியசாலைக்கு செல்கின்ற தாய்மார்களுக்கு மிகப்பெரிய சவாலாக திகழ்கின்றது.
வைத்தியர் ஷாபி அசாத் நசீர் போன்றவர்களை சந்திப்பதற்காக நான் சிறைச்சாலைக்கு சென்றிருந்தேன் எந்த ஒரு குற்றமுமின்றி கைது செய்யப்பட்டு இருக்கின்ற அவர்களை விசாரணைக்கு உட்படுத்தாமல் அவசரகாலச் சட்டம் மூலம் தடுத்து வைத்திருப்பது மிகவும் கவலைக்குரிய ஒரு விடயமாகும்.
எமது தல்கஸ்பிடிய வேட்பாளர் ஆசாத் நஸீர் என்பவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் புகைப்படத்தை தொலைபேசியில் வைத்திருந்தார் என்பதற்காக கைது செய்யப்பட்டு இருக்கிறார் ஒரு அமைச்சரின் புகைப்படம் இருந்ததற்காக கைது செய்யப்படுகிறார் என்றால் இந்த நாட்டில் எங்கே ஜனநாயகம் இருக்கின்றது என்று கேட்டுக்க விரும்புகின்றோம்.
அதே போன்று சாதாரண விடயங்களுக்காக கைது செய்யப்பட்ட பலரை சிறைச்சாலையில் சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது குடும்பங்களை இழந்து எந்த ஒரு குற்றமும் செய்யாத இவர்கள் சிறைச்சாலையில் வாடி கண்ணீர் விட்டு கொண்டு இருப்பதை நான் அவதானித்தேன்.
இன்று நாம் செய்கின்ற சாதாரண தவறுகளை கூட பெரிதாக சித்தரிக்கப்பட்டு ஊடகங்கள் மூலமாக பெரிது படுத்தப் படுகின்றதை நாம் இன்று அவதானித்துக் கொண்டிருக்கின்றோம் நமது பிரச்சினைகளையும் நமது செய்திகளையும் வெளிப்படுத்துவதற்காக எந்த ஊடகங்களும் முன்வருவதில்லை.
முஸ்லிம்களுக்கு எதிரான போலியான பிரச்சாரங்களை செய்வதில் ஊடகங்கள் முன் நின்று செயற்படுகின்றமை இன்று மிகப்பெரிய கவலைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவே இந்த காலத்தைப் பொறுத்த வரையில் நாம் சிந்தித்து செயல்பட வேண்டிய ஒரு காலமாக காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.