கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விவகாரம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் வியாழனன்று மாலை கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்ன தேரர் முன்னிலையில் தமிழ், முஸ்லிம் தரப்பினரிடையே முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட தமிழ், முஸ்லிம் இருதரப்பு முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.
சுமார் இரு மணித்தியாலங்கள் பலத்த வாக்குவாதங்களுக்கு மத்தியில் நீடித்த இப்பேச்சுவார்த்தையின்போது கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்காக அங்கு காணப்படுகின்ற எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு அமைச்சு மட்டத்தில் எல்லைக் கமிஷன் ஒன்றை உடனடியாக அமைப்பதற்கு அரசாங்கத்தை வலியுறுத்துவது என இணக்கம் காணப்பட்டுள்ளது.