சூடு வெந்த புலவில் கெளரவ காதர் மஸ்தான் ஆதங்கம்.
கடந்த காலங்களில் மீள்குடியேற்ற அமைச்சானதுபொறுப்புடன் செயலாற்றியிருந்தால் இன்று மீள்குடியேற்றம் பற்றி பேசவேண்டிய எந்தத் தேவையும் எழுந்திருக்காது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு மீள் குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் குறிப்பிட்டார்.
வவுனியா சூடுவெந்தபுலவு வளர்பிறை விளையாட்டு கழகத்திற்கு சுமார் இருபது இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த இரவு நேர மின்னொளி தொகுதியோன்றை கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் தமது
நிதி ஒதுக்கீட்டிலிருந்து நிர்மாணித்ததுடன் வளர்பிறை
விளையாட்டு கழகத்தின் முதல்நாள் போட்டி நிகழ்ச்சிகளை மின்னொளியினை இயக்கி,நாணய சுழற்சி செய்து ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே இவ்விடயங்களை அவர் குறிப்பிட்டார்.
அவர் தனதுரையில் மேலும் குறிப்பிட்டதாவது
யுத்தத்தின் பின்னரான காலப் பகுதியில் இலங்கையில் அதிகம் உச்சரிக்கப்படும் சொல்லாக இந்த 'மீள்குடியேற்றம்" மாறியிருக்கிறது.
யுத்தம் முடிந்து பத்தாண்டுகள் எம்மைக் கடந்திருக்கின்ற நிலையில் புனரமைப்பு மற்றும் மீள்குடியேற்றம் ஆகிய விஷயங்களில் அசமந்தமான,அக்கறையற்ற போக்கு காணப்படுகின்ற அவலத்தை நாம் காண்கிறோம்.
நான் இந்த மீள்குடியேற்ற அமைச்சு பொறுப்பை வகித்திருந்த குறுகிய காலத்தில் பல மில்லியன் ரூபாய்களை இந்த மீள்குடியேற்ற பணிகளுக்காக செலவளித்திருக்கிறேன்.
எமது மக்களின் அவலங்களை கண்ணால் கண்டு அவைகளுக்கு நல்லதொரு தீர்வினை வகுத்து செயற்பட முனைந்தபோது தான் இங்கே அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டு எல்லாமே தலைகீழாய் மாறியிருக்கின்றன.
மீள்குடியேற்ற அமைச்சு ஒரு கருத்திட்ட அமைச்சாகும். அது நிலையான அமைச்சல்ல.
குறித்த மீள்குடியேற்ற பணிகள் நிறைவடைந்ததுடன் அதன் பணிகள் முற்றுப்பெற்று விடும் என்பதை யாவரும் அறிவீர்கள்.
மக்களுடைய வாழ்வாதாரங்களை மேம்படுத்தி அவர்களுடைய சுயதொழில்களை ஊக்குவிக்கும் போது எமது மக்களின் பொருளாதாரம் அபிவிருத்தி அடையும்.அந்த நிலையை அடைவதற்கு நாம் தீர்க்கமான நடவடிக்கைகளை எமது அமைச்சினூடாக மேற்கொண்டோம்.
தேர்தல் காலங்களில் மாற்றுக் கட்சி கூடாரங்களிலிருந்து எம்மீது பல்வேறு வகையான கட்டுக்கதைகள் பரவ விடப்பட்டன.
இன,மத,மொழி, அரசியல் பேதங்களுக்கு அப்பால் நின்று மனிதநேயமிக்க மகத்தான பணிகளை நாம் ஆற்றுகின்ற போது காழ்ப்புணர்ச்சியுடன் சிலர் அலறித் திரிந்தனர்.
எது எவ்வாறிருந்த போதும் எமது அபிவிருத்தி பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதில் நாம் உறுதியாக இருக்கிறோம் என்பதை இங்கு தெளிவாக கூறி வைக்க விரும்புகிறேன்.
அரசியலுக்காக சமூகத்தின் கட்டமைப்பில் மாற்றங்களை உண்டுபண்ணி தமது நோக்கங்களை அடைய முற்படுவோர் தமது கீழான செயல்களை கைவிட்டு நாகரீகமான அரசியலை செய்ய முன்வருமாறு அவர்களுக்கு நாம்அழைப்பு விடுக்கின்றோம்.
இனவாதங்களை கையிலேந்தி துவேஷக் கருத்துக்களை பரப்புகின்றவர்களையிட்டு நாங்கள் அலட்டிக் கொள்ளப் போவதில்லை என்பதையும் இங்கே நினைவூட்ட விரும்புகிறேன்.
தேவையுடைய மக்களுக்கு சேவைகள் சென்றடைய வேண்டும் என்பதில் நாம் என்றும் தெளிவாக இருக்கின்றோம் எனவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பள்ளிபரிபாலன சபையினர்
உளுக்குளம் பொலிஸ் அத்தியட்சகர் திரு. பீ.எல்.பீ.சந்திரசேகர,மற்றும் பகுதி கிராம சேவகர் எஸ்.ஜெயபாலன் விளையாட்டு கழக உறுப்பினர்கள்,ஊர்மக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.