கண்டியில் இன்று (03) பாதுகாப்பை பலப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பதில் பொலிஸ் மா அதிபர் சீ. டி. விக்கிரம ரத்னவைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பில் இன்று (03) அதிகாலை மெட்ரோ நியூஸ் இணையத்துக்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கருத்துத் தெரிவிக்கையில், கண்டி நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் இன்று 3 ஆம் திகதி மூடுவதென கண்டி சிங்கள வர்த்தகர்கள் தீர்மானித்துள்ளனர்.
அத்துடன், 9.00 மணிக்கு அனைத்து வர்த்தகர்களையும் சிங்கள வர்த்தகர் சங்க அலுவலகத்துக்கு முன்பாக ஒன்று கூடுமாறு கோரிக்கை விடுத்துள்ளதுடன் அங்கிருந்து பேரணியாக, அத்துரலியே ரத்ன தேரர் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் இடத்துக்குச் செல்லவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் துண்டுப் பிரசுரங்களையும் ஒரு தரப்பினர் விநியோகித்துள்ளனர். குறித்த துண்டுப் பிரசுரத்தின் பிரதி ஒன்றும் எனக்குக் கிடைத்துள்ளது.
இவ்வாறனதொரு நிலையில், கண்டிப் பிரதேசத்தில் அசாதாரண நிலைமைகள் தோற்றுவிக்கப்படலாம். எனவே, இவற்றைத் தவிர்த்துக் கொள்ளும் வகையில் முன்னேற்பாடுகளைச் செய்யுமாறும் பதில் பொலிஸ் மா அதிபர் சீ. டி. விக்கிரமரத்னவை கேட்டுக் கொண்டுடேன்.
குறித்த பிரதேசத்தில் பதற்றமான சூழ்நிலைகளை ஏற்படுத்தி, அசாதாரண நிலைமைகளைத் தோற்றுவிக்கக் கூடிய முயற்சிகள் சிலரால் மேற்கொள்ளப்படலாம். எனவே இந்தப் பிரதேச முஸ்லிம்களினதும், முஸ்லிம் வர்த்தக நிலையங்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் பதில் பொலிஸ் மா அதிபர் சீ. டி. விக்கிரமரத்னவை கேட்டுக் கொண்டுடேன் என்றும் தெரிவித்தார்.