நகர திட்டமிடல், நீர் வழங்கல், உயர் கல்வி அமைச்சின் 510 மில்லியன் ரூபா செலவில் கல்முனை மாநகர சபைக்கு நவீன வசதிகளுடன் புதிய கட்டிடத்தொகுதி அமைப்பதற்காக கட்டிடங்கள் திணைக்களம் மற்றும் கல்முனை மாநகர சபை என்பவற்றுக்கிடையிலான ஒப்பந்தம் இன்று புதன்கிழமை (19) கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த ஒப்பந்தத்தில் கட்டிடங்கள் திணைக்களத்தின் சார்பில் அதன் பணிப்பாளர் நாயகம் முஹம்மட் இஸ்மாயில் அவர்களும் கல்முனை மாநகர சபையின் சார்பில் முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களும் கைச்சாத்திட்டனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் இணைப்புச் செயலாளரும் கல்முனை மாநாகர சபை உறுப்பினருமான ரஹ்மத் மன்சூர் ஆகியோர் முன்னிலையில் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.நபீல் உள்ளிட்ட அமைச்சின் உயரதிகாரிகளும் கல்முனை மாகர சபையின் திட்டமிடல் பிரிவு அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள், மேற்படி அமைச்சின் அமைச்சராக பதவி வகித்தபோது, இதற்காக 510 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.