சிலர் மீண்டும் அமைச்சுப் பதவியேற்க அவசரம் ஏன்- வை.எல்.எஸ்.ஹமீட்

வை எல் எஸ் ஹமீட்-

ரலாற்றிலேயே ஒரு இக்கட்டான காலகட்டத்தில் முஸ்லிம்கள் தற்போது வாழ்ந்துவருகின்றோம். குறிப்பாக சகல அமைச்சர்களும் பதவி துறந்த அந்த நிகழ்வு அன்று முஸ்லிம்களுக்கு எதிராக நிகழலாம் என அச்சப்பட்ட பாரிய ஒரு சூழ்நிலையை தலைகீழாக மாற்றிப்போட்டது மட்டுமல்லாமல், சர்வதேச ரீதியில் முஸ்லிம்களின் இன்றைய நிலை தொடர்பாக ஒரு பாரிய விழிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உள்நாட்டைப் பொறுத்தவரையிலும் அரசியலில் பல கோணங்களாக பிரிந்து நிற்கும் முஸ்லிம்களுக்கு இவ்வாறு ஒற்றுமைப்படவும் முடியுமா? என்று மூக்கில் விரல் வைக்குமளவுமட்டுமல்லாமல் இவ்வாறு நமது அரசியல்வாதிகளும் ஒற்றுமைப் பட்டிருந்ததால் நமது சமூகத்திற்காக நாமும் எவ்வளவோ சாதித்திருக்கலாமே! என்று அடுத்த சமூகத்தவர்களை வியக்க வைத்தது.

நோக்கம்

—————
ராஜினாமாவுக்கு கூறப்பட்ட நோக்கங்களில் பிரதானவையாக முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டுமெனவும்; ஒரு மாதத்திற்குள் உரிய விசாரணை ஒன்றைச்செய்து குற்றமிழைத்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்; இல்லையெனில் இராஜினாமா செய்த யாரும் பயங்கரவாதத்துடன் எவ்விதத்திலும் தொடர்புபடவில்லை; என்பதை அரசு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்; அவ்வாறான விசாரணையொன்றிற்கு நாம் பதவி வகிப்பது இடையூறாக இருக்கக்கூடாது; என்பதுமாகும்.


இராஜினாமாவின் தாக்கம்

————————————
யாரும் எதிர்பாராத இந்தக்கூட்டு ராஜினாமாவும் அது ஏற்படுத்திய சர்வதேசரீதியான தாக்கமும் பெரும்பான்மை அரசியல் மற்றும் மதத்துறையினரிடம் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


இந்நிலையில் பல கோணங்களிலிருந்தும் துறந்த பதவிகளை மீளப்பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்; என்ற கோரிக்கை வலுப்பெற்றது. இந்த நிலைமையை பதவி துறந்தவர்கள் சமயோசிதமாக கையாண்டார்கள். முக்கியமான தரப்பினர்களை சந்தித்து தமது நிலையை விளக்கும் முயற்சியை ஆரம்பித்தார்கள். அவ்வாறு சந்தித்தவர்கள் பதவியை மீளப்பெறவேண்டுமென்ற தமது கோரிக்கையை மீண்டும் முன்வைத்த அதேவேளை தமது தரப்பு நியாயங்களையும் புரிந்துகொண்டதாகவே நம்மவர்களின் கூற்றுக்கள் வெளிப்படுத்தின.

சிலர் மீண்டும் பதவியேற்க அவசரம்
———————————————-
முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று இப்பொழுதுதான் விசாரணை ஆரம்பாகியுள்ளது. இந்நிலையில் சிலரிடம் பதவியை மீளப்பெற்றுக்கொள்ள ஒரு அவசரம் தெரிகிறது. குறிப்பாக பெரும்பான்மை சமூகத்தின் வாக்குகளிலும் தங்கியிருப்பவர்கள் மதத்தலைவர்களின் கோரிக்கையின் பின்பும் தாம் பதவியை மீளப்பெறுவதைத் தாமதித்தால் அவ்வாக்குகளை இழக்க வேண்டிவருமோ என்கின்ற ஒரு அச்சம் அவர்களுக்கு இருக்கின்றது.

இந்த அச்சத்தில் சில நியாயங்கள் இருந்தபோதிலும் இங்கு தீர்மானம் எடுப்பதில் மையப்புள்ளி அடுத்த தேர்தலா? அல்லது சமூகம் மற்றும் சமூகத்தின் பாதுகாப்பு அதன் தன்மானம் போன்றவைகளா? என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.

சுதந்திரமடைந்ததிலிருந்து இன்றுவரை இந்நாடு இந்நிலையில் இருப்பதற்கு காரணம் காலாகலமாக வந்த தேசியத் தலைமைகளெல்லாம் நாட்டைவிட அடுத்த தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்ததேயாகும். முஸ்லிம் சமூகத்திலும் அவ்வாறுதான் நிலைமை இருந்து வந்தது; மறைந்த தலைவரின் காலப்பகுதியைத்தவிர.

முதல் தடவையாக அந்நிலையில் இருந்து மாறி அடுத்த தேர்தலைவிட சமூகம் முக்கியம் என்கின்ற ஒரு தோற்றப்பாட்டை குறித்த கூட்டு ராஜினாமா ஏற்படுத்தியது. இந்நிலையில் எந்த நோக்கத்தைக்கூறி இராஜினாமா செய்யப்பட்டதோ அந்த நோக்கத்தின் எந்தவொரு கட்டமும் அடையப்படாத நிலையில் அன்றைய பதட்டத்தை மட்டும் தணிக்க உதவிய நிலையில் இந்த இராஜினாமா பகுதியாகவோ, முழுதாகவோ முடிவுக்குக் கொண்டுவரப்படுமானால் இந்த சமுதாயம் எள்ளிநகையாடப்பட்டுவிடும்.

அப்பாவியாக கைதுசெய்யப்பட்ட பலர் இன்னும் விடுவிக்கப்படவில்லை.
பாதுகாப்புக்கு முழுமையான உத்தரவாதம் தரப்படவில்லை.
விசாரணை முடியவில்லை.

இந்நிலையில் மீண்டும் பதவியேற்பது முஸ்லிம்களை செல்லாக்காசான சமூகமாக ஆக்கிவிடும்.

இன்னுமொரு தடவை இவ்வாறான கூட்டு ராஜினாமா இதே தாக்கத்தை ஏற்படுத்தாது. இது ஒரு தரம் மாத்திரம்தான். எனவே, தீர்மானங்கள் நிதானமாக எடுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக இதுவரை செய்யப்பட்ட முறைப்பாடுகளில் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட முறைப்பாடுகள் எதுவும் இருக்கின்றனவா? எனத் தெரியவில்லை. ஊடகங்கள் அவ்வாறு எதனையும் தெரிவிக்கவில்லை. ஊடகத் தகவல்களின்படி வேறுவகையான முறைப்பாடுகளாகவே அவை தெரிகின்றன.

எனவே, ஆகக்குறைந்தது நீங்கள் வழங்கிய அந்த ஒரு மாதகாலப்பகுதிக்குள் யாருக்கும் எதிராக பயங்கரவாதவாதம் தொடர்பாக ஏதாவது முறைப்பாடு இருக்கின்றனவா? அவ்வாறு இருந்தால் ஆரம்ப விசாரணைகளில் ஏதாவது தடயங்கள் இருக்கின்றவா? என்பதை அரசு கூறவேண்டும்.

அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவ்வாறு யாருக்கும் எதிராக பயங்கரவாதம் தொடர்பாக எந்த முறைப்பாடும் இல்லையெனில் அதனை அரசு அறிவிக்க வேண்டும். இந்த இடைவெளிக்குள் கைதுசெய்யப்பட்ட சகல அப்பாவிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். அதன்பின் உங்கள் பதவிகளை நீங்கள் மீளப்பொறுப்பேற்கலாம். இது ஒரு மாதத்திற்குள் செய்ய முடியாததல்ல.

பயங்கரவாதத்துடன் தொடர்பற்ற ஏனைய முறைப்பாடுகள் இருப்பின் அவற்றை உங்கள் ராஜினாமாவுடன் தொடர்புபடுத்த முடியாது. எனவே, நீங்கள் பதவிகளைப் பாரமெடுக்கலாம்.
அதைவிடுத்து அவசரமாக பதவிகளைப் பாரமெடுத்து சமூகத்தை சிரிப்புக்கிடமாக்கிவிடாதீர்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -