ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-
ஹெட ஓயா குடிநீர் வழங்கல் திட்டத்தை துரிதப்படுத்த கோரியும், அதன் தற்போதைய நிலை தொடர்பிலும் அறிந்துகொள்ளும் நோக்கில் பொத்துவில் ஹெட ஓயா அபிவிருத்தி குழுவின் அங்கத்தவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
நீண்டகாலமாக பேசப்பட்டுவரும் ஹெட ஓயா குடிநீர் வழங்கல் திட்டத்துக்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், குறித்த திட்டத்தை துரிதப்படுத்துவதன் மூலம் மொனராகல மாவட்டத்திலுள்ள சியம்பலாண்டுவ, மடுல்ல மற்றும் அம்பாரை மாவட்டத்திலுள்ள லஹுகல, பாணம, பொத்துவில் போன்ற பிரதேசங்களுக்கு விரைவில் குடிநீரை பெற்றுக்கொள்ள முடியும்.
அத்தோடு இந்த பிரதேசத்தில் நிலையான நீர் மூலவளங்களை உருவாக்குவதன் மூலம், விவசாய நடவடிக்கைகளுக்கும் உல்லாச பிரயாணத்துறை உள்ளிட்ட ஏனைய அபிவிருத்தி திட்டங்களுக்கும் அவற்றை பயன்படுத்த முடியும். நீர்ப்பாசன திணைக்களம், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஆகியவற்றின் இணைந்த செயற்பாட்டின் மூலம் ஹெட ஓயா திட்டம் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஹெட ஓயா திட்டத்தை துரிதப்படுத்தும் நோக்கோடு அமைச்சரவை குழுவொன்றும், அதனோடு சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் உத்தியோகபூர்வ குழுவொன்றும் இதற்காக நியமிக்கப்படவுள்ளதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்ததோடு, இதுதொடர்பில் ஆராயும் பொருட்டு சீன பொறியியலாளர்கள் குழு குறித்த பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இக்கலந்துரையாடலில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் உள்ளிட்ட பொத்துவில் பிரதேச பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.