கல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடத்தப்பட்ட தேரர் தலைமையிலான குழுவினரின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இடை வேளையுடன் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்வதற்கு மேற்கொள்ளப்பட்ட நகர்வுகளும் பொலிஸார் மற்றும் தேரர்களின் அமுத வாக்குறுதிகளை நம்பி நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
சாப்பாடு கொடுப்பது, விழா எடுப்பது என எந்த முக்கிய நிகழ்வுகளாக இருந்தாலும் ஐக்கிய சதுக்கம் தயாராக இருக்கிறது. அந்த சதுக்கத்தில் முஸ்லிம் தரப்பு சத்தியாகிரகம் எனும் தலைப்பில் ஒரு திருவிழாவே கொண்டாடி முடித்திருக்கிறது. விடிய விடிய போராட்டம், அரசியலில் சாதிக்கவிரும்புபவர்களின் பேட்டிகள், உண்மையான கல்முனை பற்றாளர்களின் சாத்வீக சத்தியாகிரகம் என்பன நான்கு நாட்களின் பின்னர் முடிந்தது.
இருந்தாலும் ஒரு வாரத்தில் கல்முனையில் தோற்றுவிக்கப்பட்ட பதற்றங்களும் பரபரப்புக்களும் இன்றும் கூர்மையாகவே இருக்கின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற விவகாரம் இன்று, நேற்று உருவானது அல்ல.
1993ஆம் ஆண்டு அமைச்சரவை தீர்மானம் ஒன்றின் அடிப்படையில் அப்போது இருந்த 29 உப-பிரதேச செயலகங்களில் 28 பிரதேச செயலகங்களாக தரமுயர்த்தப்பட்டுவிட்டன.
கல்முனை வடக்கு உப-பிரதேச செயலகத்தைப் பொறுத்தவரையில் அதனை தரமுயர்த்துவதற்கு சில முஸ்லிம் தலைமைகள் விரும்பவில்லை. என தமிழ் தரப்பு குற்றம் கூறிவந்தாலும் உண்மைகள் வேறுவிதமாக இருப்பதை எல்லோரும் அறிவர். மறுபுறத்தில் தமிழ் மக்களுடைய அப்போதைய அரசியல் சூழலும் பிரதேச செயலகத்தை வலியுறுத்தும் வகையில் இருக்கவில்லை என்கிறார்கள் தமிழ் போராட்ட விதைகள்.
இந்த செயலக விடயத்தில் விடுதலைப் புலிகளின் மனோ நிலையை அறிந்திருந்த கிழக்குத் தலைமைகளும் அதேபோன்று மக்களும் மௌனமாகவே இருந்து விட்டனர். இது முஸ்லிம் தலைமைகளுக்கு வாய்ப்பாக அமைந்திருந்தது. என தமிழர்கள் நம்பிக்கொண்டிருக்க காலம் காத்திருக்காமல் கடந்து போகிறது.
அரசாங்கங்களும் கிழக்கில் அதிக முஸ்லிங்கள் வாழ்வதால் முஸ்லிம்களின் ஆதிக்கத்தை வலுப்படுத்துவது தமக்கு சில நன்மைகளைக் கொடுக்கும் என்ற நோக்கில் முஸ்லிங்களின் விருப்பிற்கு பச்சைக் கொடி காட்டி வருவது வழமையே.
இந்தநிலையில்தான் பிற்பட்ட அரசியல் மாற்றங்களையடுத்து கல்முனை வடக்கு தமிழ் பிரதேசம் தொடர்பான விவகாரம் அதி உச்ச அளவில் சூடுபிடிக்க ஆரம்பித்திருந்தது.
ஆனாலும் மஹிந்த காலத்தில் இந்த விவகாரத்தை ஆணித்தரமாக முன்னகர்த்துவதற்குத் தேவையான தமிழ் அரசியல் தலைமைகள் யாரும் மஹிந்த ராஜபக்ஷ தரப்பில் இருக்கவில்லை. அதேவேளை, முஸ்லிம் தலைமைகள் மஹிந்த ராஜபக்ஷவோடு மிக நெருக்கமாக இருந்ததால் இந்த விடயம் கிடப்பில் கிடக்க ஆரம்பித்தது.
விடுதலை புலிகளை அழித்த மஹிந்த அணி அரசியல் இலாப நட்டக் கணக்கில் கண்டுகொள்ளாமல் இருப்பதே மஹிந்த அரசாங்கத்திற்கு அதிக இலாபமாக இருந்தமையினால் அப்போது இது அவசரமற்ற விவகாரமாக கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
இந்நிலையில், 2015 தேர்தல் காலத்தில் வாக்கு சேகரிப்பதற்காக தமிழ் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் ஐயா கல்முனை பிரதேசத்திற்கு சென்றபோது பிரதேச மக்களினால் தங்களுடைய பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஐ.தே.க, முஸ்லிம் காங்கிரஸ், ஜே.வி.பி,சிகல உறுமய, மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகளோடு சம்பந்தன் ஐயா இதயங்களினாலும், ஒப்பந்தங்களினாலும் இணைந்திருந்த காலப்பகுதி அது. அதனை சரியாக பயன்படுத்த கோரிநின்றனர் தமிழ் மக்கள்.
சம்பந்த ஐயாவும் அவரது படையும் கல்முனையில் வைத்து ஏற்கனவே, அமைச்சரவை தீர்மானம் ஒன்று இருக்கின்றமையினால் நல்லாட்சி அரசாங்கம் உருவாகினால், வர்த்தமானி அறிவித்தலோடு கோரிக்கையை நிறைவேற்றுவதில் சிக்கல் இருக்காது என்று தைரியமாக பேசி மக்களிடத்தில் அசட்டு நம்பிக்கையை விதைத்து, மக்களுக்கு இரும்பு வாக்குறுதி அளித்துவிட்டு சென்று விட்டார்.
தடையாக இருந்த மஹிந்த அரசாங்கம் வீழ்ந்து நல்லாட்சி அரசாங்கம் உருவாகியது – சம்பந்தன் ஐயாவிற்கு வரலாற்று கௌரவமாக எதிர்க் கட்சித் தலைவர் பதவி கிடைத்தது , அம்பாறையில் இருந்து தமிழ் கூட்டமைப்புக்கு ஒரு ஆசனமும் கிடைத்ததில் பிரபல தொழிலதிபர் கோடீஸ்வரன் நாடாளுமன்றம் சென்றார். மணித்தியாலயங்கள் கடந்து நாட்கள் மாதங்களாகி வருடங்கள் நான்கானது.. ஆனால் கல்முனை மக்களின் கோரிக்கை மட்டும் கிடப்பில் கிடந்ததே தவிர நிறைவேறவில்லை.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் நல்லாட்சி அரசாங்கம் உருவாகியதையடுத்து நடைபெற்ற முதலாவது முக்கிய அதிஷ்ட நகர்வாக கிழக்கு மாகாண சபை தமக்கு சார்பாக உருவானதை குறிப்பிடலாம்.கிழக்கு மாகாணத்தில் 11 ஆசனங்களைக் கொண்டுள்ள தமிழ் கூட்டமைப்பை ஆட்சி அமைக்கும் படியும் நிபந்தனையற்ற ஆதரவை தருவதாகவும் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் உள்ளிட்ட முக்கிய . தரப்பினர் சம்பந்தன் ஐயாவின் வீடு தேடிச் சென்று தெரிவித்தனர்.
அதனை ஏற்றுக்கொள்ளாத சம்பந்தன் ஐயா, தன்னுடைய நல்லெண்ணத்தை வெளிப்படுத்த எண்ணி 07 ஆசனங்களுடன் இருந்த அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸை ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்தார். முஸ்லிங்கள் தரப்பில் பாரிய கொந்தளிப்பை அது ஏற்படுத்தினாலும் தமிழ் தரப்பில் அது சிறிய சலசலப்பை மட்டுமே உருவாக்கியது.
அந்த சந்தர்ப்பத்தில் கல்முனை பிரதேச செயலகத்தை தர முயர்த்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சம்பந்தன் ஐயா ஒற்றை வார்த்தை சொல்லியிருப்பாரானால், திகில் அரசியல் அனுபவத்தை கொண்டவரும் ஒரு கோண யதார்த்தவாதியுமான முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரிக்கையின் யதார்த்தத்தினை புரிந்து சம்மதம் தெரிவித்திருப்பார்.என்பது அமைச்சர் ஹக்கீமையும் அவரது அரசியல் போக்கையும் நன்றாக அறிந்தவர்களின் கூற்று.
தற்போது, கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துகின்ற முஸ்லிம் காரங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ் போன்றோரும் மு.கா தலைமையின் முடிவை மறுக்க முடியாமல் மௌனமாக சம்மதம் தெரிவித்து விட்டு முஸ்லிம் மக்களிடம் தமது நியாயத்தை கூறி சமாளித்திருப்பார்கள், கல்முனை தமிழ் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறியிருக்கும். என நாம் நம்பினால் அது அதியுச்ச முட்டாள்தனம்.
கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கைகளுக்கு கல்முனை வடக்கு பிரதேச செயலகம் எனும் பழம் கனிந்து கைக்கு வந்தும் அதனை இறுக பிடிக்காமல் தவறவிட்டதன் விளைவுதான் தற்போதைய உண்ணாவிரத போராட்ட நிலை!
குறைந்த பட்சம் இறுதி வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பிலாவது அந்த பழத்தை இறுக்கமாக பிடித்து இருந்திருக்கலாம்.இதன்போது பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பாக பிரதமர் சம்மதம் தெரிவித்தபோதிலும் அம்பாறை முஸ்லிங்களின் வாக்குகளால் பாராளுமன்றம் சென்ற முஸ்லிம் காங்கிரஸின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க மாட்டார்க்ள என்ற அச்சத்தில் அவர் பின்வாங்கியதாக ஒரு தகவல் தெரிவிக்கின்றது.
இது உண்மைனால், இதன்போதாவது கூட்டமைப்பு சுதாகரித்திருக்க வேண்டாமா?
முஸ்லிம் காங்கிரஸின் 3 வாக்குகளினால் வரவு – செலவுத் திட்டம் தோற்றுவிடும் என்று பிரதமர் யோசிப்பாரானால், “எங்களிடம் 14 வாக்குகள் இருக்கின்றன. அதுதவிர வியாழேந்திரன், சிவசக்தி ஆனந்தன், அங்கஜன், டக்ளஸ் தேவானந்தா மற்றும் இ.தொ.கா போன்ற எதிர்த்தரப்பு வாக்குளில் மூன்றை பெற்றுத் தருகின்றோம்” என்று நிலைப்பாட்டில் உறுதியாக இருந்திருக்கலாம். அதிலும் கோட்டை விட்டனர் சிரேஷ்ட அரசியல்வாதி சம்பந்தனும், புத்திசாலி சுமந்திரனும்.
இலங்கை அரசியலில் பழுத்த அனுபசாலியாக சம்பந்தன் ஐயா இருக்கின்றார். இலங்கை சட்டத்துறையில் விரல்விட்டு எண்ணக் கூடிய திறமையாளர்களுள் ஒருவரான ஏம்.ஏ.சுமந்திரன் கூட்டமைப்பின் பிரதான தீர்மானிப்பாளராக இருக்கின்றார். இதற்குமேல் வேறு என்ன தேவை? இந்த நல்லாட்சி அரசின் மாலுமி சுமந்திரன் என்பது எல்லோரும் அறிந்த உண்மையாக இருக்கிறது.
அப்படியிருந்தும் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதில் கூட்டமைப்பு சறுக்குகிறது என்றால் வாக்கு எனும் சாமானை விட சக்தி மிக்க சாமான் பின்னால் ‘வேறு ஏதோ’ இருக்கின்றது என்ற புரிதலுக்குத் தான் நாம் வரவேண்டியுள்ளது.
தங்களுடைய பிரச்சினைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்க்கும் என்று இலவு காத்த கிளியாக எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு அது வெடித்து சிதறி ஒன்றுமில்லாமல் போனது ஏமாற்றமாக மாறியிருக்கின்றது.
அரசியல் அநாதைகாளாக தம்மை உணர்ந்துகொண்டிருந்த கிழக்கு தமிழ் மக்களுக்கு, ஸஹ்ரான் எனும் கொடியவனின் தலைமையில் நடந்த ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் சூழலையும் தாக்குதலுக்குப் பின்னராக முஸ்லிங்களின் தலைவர்களை இலக்காக கொண்டு அரசியலை கையிலெடுத்த பௌத்த மதகுருமார் சிலருடைய நிகழ்ச்சி நிரலையும் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கின்றது. அதுதான் கல்முனையில் நடந்திருக்கின்றது என்பதை மனோவின் அறிக்கையும், சுமந்திரன் மீது அந்த மக்கள் காட்டிய ஆத்திரமும் அப்படியே கண்ணாடியில் காட்டுவது போல காட்டுகிறது.
ஆனால் இந்த இடத்தில் கல்முனை வாழ் தமிழ் மக்கள் நிதானமாக சில விடயங்களை சிந்திக்க வேண்டும். தமிழ் கூட்டமைப்பின் அரசியல் நகர்வுகள் தமிழ் மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதில் நியாயமும் இருக்கலாம். ஆனால் முக்கிய பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் மீது நடந்துகொண்ட கீழத்தரமான செயற்பாடுகள் ரசிக்கக்கூடியவை அல்ல.எங்களின் பிரதிநிதிகளாய் நாங்களே தெரிவு செய்தவர்களை அவமானப்படுத்துவதும், அவர்களின் கருத்துக்களை எள்ளிநகைப்பதும் எம்மைப் பற்றிய தவறான பிம்பத்தை வெளியிலே காண்பிக்கும்.
சொந்த தலைவர்களையே மதிக்கத் தெரியாத இங்கிதம் தெரியாத கிழக்குத்தமிழர்கள் என்று உங்கள் மீது தெற்கு மற்றும் வடக்கு தமிழர்கள் முத்திரை குத்தி, அனைத்துக்குமான முழுப்பழியை உங்கள் தலையில் போட்டு விட்டு தப்பித்து விடுவார்கள்.என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
ஆக, கூட்டமைப்பின் மீது ஆத்திரம் இருக்குமாயின், தமிழ் மக்கள் அதனை தேர்தல்களில் காண்பிக்கலாம். அது அவர்களின் ஜனநாயக உரிமை மாத்திரமல்லாது அரசியல் தலைமைகளுக்கு பதவிக் காலத்தில் எச்சரிகை உணர்வையும் ஏற்படுத்தும்.அதற்க்கு பதிலாக கூச்சலிடுவதும்,கதிரை மற்றும் பாதணிகளை தூக்கி வீசுவதும் கல்முனை மக்களின் நாகரிகமாக இருக்க கூடாது.
என்ன நடந்தாலும் மக்கள் எங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்ற தலைக்கான போக்கும் தேர்தல் நேரத்தில் வார்த்தைகளை வீசி பாட்டுப்போட்டால் வாக்குகளை அள்ளிவிடலாம் என்ற நினைப்புமே இன்றைய நிலைக்கு காரணமாக இருக்கின்றது என்பதை எப்போதாவது இருசாராரும் நினைத்துப்பார்த்தது உண்டா?
இந்த நாட்டில் இருக்கக் கூடிய சிறுபான்மை இனமொன்றை அடக்குவதற்காக இன்னொரு சிறுபான்மை இனத்தை பயன்படுத்துவது பேரினவாதத்திற்கு ஒன்றும் புதிய விடயமல்ல.இது காலா காலம் நடக்கும் அரசியல் மற்றும் காசி நகர்தலே
இது பற்றி அண்மையில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் தமிழ் மக்களை பார்த்து “நேற்று நாங்கள்… இன்று முஸ்லிம் மக்கள்… நாளை மீண்டும் நாங்களாகக் கூட இருக்கலாம்..” என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.அதில் எவ்வளவு உண்மைகள் புதைந்துள்ளது என்பதை தமிழ் மக்கள் உணரவேண்டும். மட்டுமில்லாமல் முஸ்லிம் மக்களும் உணர்ந்துகொள்ள வேண்டும். சரியோ பிழையோ முள்ளிவாய்க்காலில் ஆயிரக்காணக்கான உயிரிழப்புக்களுடன் யுத்தம் நிறைவுக்கு வந்தபோது, மகிழ்ந்த முஸ்லிம் தலைமைகளாலும் மக்களினாலும் திகன – தெல்தெனியாவிலும், மினுவாங்கொடவிலும் நாசமாக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் பொருளாதாரத்தை காப்பாற்ற முடியவில்லை.
இதுதான் யதார்த்தம். பேரினவாதத்துடனான சிறுபான்மையினரின் கைகோர்ப்புக்கள் தற்காலிக மகிழ்ச்சியையும் குறுகிய நலன்களையும் வழங்குமே தவிர, நீண்ட காலத்திற்கு வலுச்சேர்த்து நிற்காது.என்பது காலம் எனும் வாத்தியார் கற்பித்த கல்வி
ஆனால், தேர்தல் காலம் என்பதனால் இந்த விவகாரத்தை தங்களுடைய அரசியல் இருப்பை வலுப்படுத்துவதற்கான வளமான வாய்ப்பாக பயன்படுத்துவதற்கு அதிக தமிழ் அரசியல்வாதிகள் முனைவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
அதுவும், பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதனால் முஸ்லிம் மக்களின் அரசியல் அதிகாரங்களுக்கோ அல்லது அன்றாட வாழ்வியலுக்கோ எந்தவிதமான சேதாரமும் இடம்பெறாது என தமிழ் தலைமைகள் தமிழ் மக்களை தவறாக வழிப்படுத்துகின்றனர்.
உப பிரதேச செயலகத்தினை தரமுயர்துவதால் முஸ்லிம்களுக்கு எந்தவித பிரச்சனைகளும் ஏற்பட போவதில்லை என கூறுபவர்களுக்கும் ஏன் முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள் என கேட்பவர்களுக்கும் தெளிவாக விளக்கம் கொடுக்க வேண்டிய தேவை முஸ்லிங்களுக்கு இருக்கிறது.
தமிழ் மக்கள் கோரும் பிரதேச செயலக எல்லைக்குள் அதாவது (கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லை) 3000 ற்கு மேற்பட்ட முஸ்லிம்களின் வாழ்விடங்கள் உள்வாக்கப்பட்டுள்ளன.என்பதை நன்றாக அறிய வேண்டும். சகல அரச காரியாலயங்கள், ஐந்துக்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் இரண்டு முக்கிய மதரஸாக்கள் மூன்று ஜனாஸா மையவாடிகள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடற்கரைப் பள்ளிவாசல்,பொதுச் சந்தை, பஸ் தரிப்பு நிலையம், பொலி்ஸ் நிலையம்,பொது நூலகம். கல்முனை பஸார், கல்முனை பிரதேச செயலகம் ,கல்முனை மாநகர சபை,கடைத் தொகுதிகளும் வர்த்தக நிலையங்களும், சகல வங்கிகளும் அந்த எல்லைக்குள் தான் வருகிறது.
அது மட்டுமில்லாமல் கல்முனை பிரதேசத்தில் காணப்படும் கல்முனைக் கண்டம் ,இறைவெளிக்கண்டம், நற்பிட்டிமுனை மேல்,கீழ் கண்டங்கள் மேட்டுவட்டை வயல் காணிகள் , கரவாகு வட்டைக் காணிகள் என அனைத்து வயல் காணிகளும் தமிழ் மக்கள் கோரும் கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குள்ளே வருகின்றன.
நீர் நிலைகளான பட்டிப்பளை ஆற்றுப் படுக்கை,கல்லடிக்குளம், பாண்டிருப்பு பெரிய குளம், சிறிய குளம், நவியான் குளம், கரச்சைக் குளம் என அனைத்து நீர் நிலைகளும் அந்தப் பிரதேசத்திற்குள் உள்வாக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு முஸ்லிம்களின் பல்வேறுபட்ட நிலம் தொடர்பான பிணக்குகள் மற்றும் பூர்வீகமாக ஆண்டுவந்த பிரதேசங்கள் அத்தனையும் உள்வாங்கிய பிரதேச செயலக உருவாக்கத்தினையே முஸ்லிம்கள் எதிர்க்கின்றனர். மாறாக தமிழ் மக்களை அடிமைகளாக வைத்திருக்க ஒருபோதும் அவர்கள் விரும்பவில்லை. அதனால் சரியான எல்லை நிர்ணயத்துடன் எல்லைகளை வகுத்து எதிர்காலத்தில் பிணக்குகள் ஏற்படாத வண்ணம் ஒரு நிரந்தர தீர்வினை தரும்படி அரசினை முஸ்லிம்கள் கோரி நிற்கின்றனர். அதற்கான போராட்டமே இது என்பதனை மட்டக்களப்பு மாவட்ட, மலையக,கொழும்பு மாவட்ட, வட மாகாண எம்.பிக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
தேர்தலில் வாக்குகளை குறியாக கொண்ட தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இந்த பிரதேச செயலக புண் ஆறாமல் இருக்கவேண்டிய தேவை இருக்கிறது ஆனால் மக்களுக்கு அந்த புண் அவசரமாக ஆத்தவேண்டிய தேவையும் இல்லாமல் இல்லை. தேரர்களில் பொல்லாதவர்கள் எனும் பெயர்வாங்கிய சகல தேரர்களும் களமுனைக்கு படையெடுத்த வரலாறும் முக்கிய எம்.பி துரத்தப்பட்ட வரலாறும் அழியாத தடயங்களாக பதியப்பட்டுள்ளது.
நானும் சொல்கிறேன் நாகம் விஷம் நிரம்பியது. படம் எடுப்பதால் அதை நான் நம்பமுடியாது. அரசியல் (வாதிகளின்) மாற்றத்தால் இலக்குகளை அடைவோம். பிட்டும் தேங்காய்ப்பூவுமாக வாழ்வோம். மதத்தால் வேறானாலும் மொழியால் தமிழர்கள் என்பதை அறிவோம்.