இவர்களின் போராட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் நேற்றைய தினம் முன்னாள் பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன், பாராளுமன்ற உறுப்பினர்களான க. கோடிஸ்வரன், எஸ்.வியாழேந்திரன் மற்றும் பல முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டு தமது ஆதரவை தெரிவித்திருந்தனர்.
அவர்கள் முஸ்லிம் விரோத கருத்துக்களை தெரிவித்திருந்த குற்றசாட்டை முன்னிறுத்தி இன்று கல்முனையில் முஸ்லிம் மக்களால் முன்னெடுக்கப்படும் சத்தியாகிரக போராட்டத்தில் பல கண்டனங்களை முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் தெரிவித்தனர். காலையில் ஆரம்பித்த இந்த சத்தியாகிரக போராட்டம் ஐக்கிய சதுக்கத்தில் ஆரம்பமாகி சில மணித்தியாலயங்களில் கல்முனை தரவை கோவில் திசையிலிருந்து தமிழ் மக்களால் அடையாள ஆர்ப்பாட்டம் ஒன்று உண்ணாவிரத பந்தலை நோக்கி வந்தது. அப்போது ஐக்கிய சதுக்கத்தை நெருங்கியபோது சத்தியாகிரக போராட்டத்தில் இருந்தவர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல்நிலை தோன்றியது.
உடனடியாக செயல்பட்ட கல்முனை பொலிஸாரும் நல்லிணக்கத்தை விரும்பும் சிலரும் ஆர்ப்பாட்டக்காரர்களை வேறுதிசைக்கு திருப்பி சுமூகமான நிலையை உருவாக்கினர். சத்தியாகிரக பந்தலிலும், உண்ணாவிரத பந்தலிலும் ஆதரவு அதிகரித்து வருவதால் பாதுகாப்பு படை குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.