வைத்தியர் சாபியின் கைதும் தடுத்துவைப்பும் சட்டத்தின் பார்வையில்


வைத்தியர் சாபி விடயத்தில் அவருடைய குடும்பம் மட்டுமல்ல, இந்த நாட்டை நேசிக்கும் நல்லுல்லங்கள் அனைவரும் சட்டத்தின் உச்சபட்ச நியாயத்தினை அவருக்கும் மருத்துவ துறையின் நன்மதிப்புக்கும் பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும். முகத்தோற்றமளவில் வைத்தியர் சாபியின் கைது சட்டமுரண் என்பதை அறிய முடிகின்றது. எனவே வைத்தியர் சாபியின் குடும்பம் சட்டத்தின் மீது உள்ள நம்பிக்கையை கைவிடக்கூடாது என்பதோடு அவரின் விடுதலை மட்டுமல்ல இந்ந நாட்டையும் இந்ந நாட்டின் தாய்மார்களையும் உலுக்கிய தேசியப் பொய்யர்களுக்கும் அவர்களின் ஊதுகுழல் பத்திரிகைகளுக்கு எதிராகவும் தனிநபர் முறைப்பாட்டாளர்களுக்கு எதிராகவும் சிவில் மற்றும் அடிப்படை உரிமை வழக்குகள் தாக்கல் செய்வதில் வைத்தியர் சாபியின் நலன்களுக்காக மட்டுமல்ல இந்ந நாட்களில் நடைபெற்ற அநியாயமான கைதுகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் அனைவரும் முன்வரவேண்டும்.

சாதாரணமாக ஒரு நபரை பிடியாணை இன்றி கைது செய்யும் விதம் பற்றி இலங்கையின் குற்றவியல் நடைபடிக்கோவையின் பிரிவு 32(1)(அ)(ஆ) என்பன குறிப்பிடுவதோடு குறித்த கைதுகள் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்று 1978ம் ஆண்டின் இலங்கை அரசியல் அமைப்பின் உறுப்புரை-13(1) யிற்கு இணங்க சட்டத்தினால் தாபிக்கப்பட்ட நடவடிக்கைமுறைகிணங்கவன்றி, ஆளெவரும் கைதுசெய்யப்படலாகாது.கைது செய்யப்படுவதற்கான காரணம் கைது செய்யப்படும் ஆளுக்கு கைது செய்யும் நேரத்தில் கூறப்படல் வேண்டும்.

மேலும் உறுப்புரை-13(2) யின் படி அவ்வாறு கைதுசெய்து கட்டுக்காவலில் வைத்திருக்கப்படும், தடுத்துவைத்திருக்கப்படும் நபர் சட்டத்தினால் தாபிக்கப்பட்ட நடவடிமுறைக்கு இணங்க மிக அண்மையில் உள்ள தகுதிவாய்ந்த நீதிமன்றின் நீதிபதி முன்னர் கொணரப்படுதல் வேண்டும்.

வைத்தியர் சாபியின் கைது பற்றி பார்ப்போமாயின் குறித்த கைது பிடியாணையின்றி கைது செய்யப்பட்டுள்ளமை யாவரும் அறிந்த உண்மை. மேற்படி குற்றவியல் நடைபடிச் சட்டத்தின் படி பிணைவழங்க முடியாத குற்றங்களுக்கு சந்தேகிக்கப்படும் நபர், அல்லது யாருடைய பிரசன்னத்தில் சமாதானக்குலைவு ஏற்படுகின்றதோ அத்தகைய நபரை அல்லது யாருக்கு எதிராக நம்பகமான தகவல் குற்றம் ஒன்று புரிந்தமைக்கு எதிராக வழங்கப்படுகின்றதோ அவ்வாறான நபர்களை பிடியாணை இன்றி கைது செய்யமுடியும்.அவ்வாறு கைது செய்யப்படும் நபர் பயண நேரங்கள் கழிதலாக 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள நீதிமன்றின் முன் முன்னிலைப்படுத்தப்படுதல் வேண்டும்.
வைத்தியர் சாபி அவர்கள் கைது செய்யப்படும் போது அவசரகால ஒழுங்குவிதி நடைமுறையில் இருந்தது. எனவே அவசரகால ஒழுங்குவிதிகள் நடைமுறையில் உள்ளபோது அல்லது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் போது கைது தொடர்பில் எத்தகைய பாதுகாப்பும் இல்லை என்று நினைத்துவிடமுடியாது. எமது அரசியல் அமைப்பின் கீழ் கைதுகள் மற்றும் தடுத்துவைப்புக்கள் பற்றி உறுப்புரை-13(1) மற்றும் 13(2) என்பவற்றிற்கு அவசரகால ஒழுங்குவிதியாயினும், பயங்கரவாத தடுப்புச்சட்டமாயினும் எவ்வித மட்டுப்பாடும் ஏற்படுத்த முடியாது ஆனால் நீதிமன்றுக்கு முன்னிலைப்படுத்தும் காலப்பகுதி வித்தியாசப்படலாம்.

இங்கு வைத்தியர் சாபி மீது புனையப்பட்ட முறைப்பாடு அவசரகாலவிதியின் கீழா அல்லது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழா அல்லது சாதாரண சட்டத்தின் கீழா விசாரிக்கப்பட்டுள்ளது என்ற விடயம் அவதானிக்கப்பட வேண்டும். அவ்வாறு அவர் அவசரகால ஒழுங்குவிதியின் கீழ் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பில் கைது செய்யப்பட்டாலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 72 மணித்தியாலங்களுக்குள் அண்மையில் உள்ள நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருக்கு வேண்டும்.

'பத்மநாதன் எதிர் எஸ்.ஐ.பரனகம (என்.ஐ.பி) மற்றும் ஏனையோர்(1999), 2 எஸ்.எல்.ஆர் பக்கம் 225' என்ற வழக்கில், முக்கியமாக ஆராயப்பட்ட விடயம் பயங்கரவாதச் சட்டத்தின் பிரிவு-5 உபபிரிவு-1 யின் கீழ் கைது செய்யப்படும் நபர் குறித்த சட்டத்தின் பிரிவு-7 உபபிரிவு-1யின் படி 72 மணிநேரம் மட்டுமே தடுத்து வைக்க முடியும்.குறித்த கால இடவெளிக்குள் அருகில் உள்ள நீதாவன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவேண்டும். அத்தோடு குறித்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் பிரிவு-6 உபபிரிவு-1யில் கூறப்பட்ட முறைப்படி கைது செய்யப்படும் நபர் அவரது கைதுக்கான காரணத்தை கூறப்பட்டே கைது செய்யப்படல் வேண்டும்.
தற்போது அமுலில் உள்ள அவசரகால ஒழுங்குவிதி-19(1) மற்றும் அதன் உபவிதிகளின் கீழ் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அறிவுரைப்படி தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான விதிகளை மீறுவதாகவும், அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கு தடையாக இருப்பதாகவும் கருதும் நபரை ஒரு வருடம் வரை தடுத்து வைக்கலாம். எனவே வைத்தியர் சாபி மேற்படி ஏதாவது வகையில் குற்றம் புரிந்துள்ளாரா என்ற கேள்வி எழுகின்றது. மேலும் கருத்தடை விவகாரம் உண்மையெனில் அது அவசரகால வர்த்தமானி வெளியிட முன்பே நடந்துள்ளது. எனவே இது அவசரகால விதியை அல்லது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வரைவிலக்கனப்படுத்தப்படும் குற்றங்களுடன் தொடர்பான குற்றமா என்ற கேள்வியும் எழுகின்றது.

தற்போது அமுலில் உள்ள அவசரகால ஒழுங்குவிதி-21, உபவிதி -1யின் கீழ் கூறப்பட்ட காப்புவாசகத்தின் படி கைது செய்யப்படும் நபர் கைது செய்யப்பட்ட நாட்களில் இருந்து நியாயமான காலத்தினுள் அதாவது 30 நாட்களுக்குப்பிந்தாமல்; அருகில் உள்ள நீதவான் முந்நிலையில் ஆஜர்படுத்தப்பட வேண்டும். மேலும் விதி-20யின் கீழான உபவிதி-9 யின் படி கட்டுக்காவலில் எடுக்கப்படும் நபர் ஏன் கைது செய்யப்பட்டார் என்று விதந்துரைக்கப்பட்ட படிவத்தில் கைது செய்யப்பட்டவரின் வாழ்க்கைத்துணைக்கு, தந்தைக்கு, தாய் அல்லது வேறு யாராவது நெருங்கிய உறவினர்களுக்கு தெரிவித்தல் வேண்டும். மேற்படி நியாயமான காரணம் எதுவும் கூறாமல் தடுத்துவைக்கப்பட்டால் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும் வழக்கில் குறித்த கைது செய்த அதிகாரி குற்றம் இழைத்திருந்தால் இரண்டு வருடத்தால் தண்டிக்கப்படக்கூடிய சிறைத்தண்டனையை அத்தகைய அதிகாரிக்கு விதித்தல் முடியும். வைத்தியர் சாபியின் கைது 2019.05.24ம் திகதி நடந்ததாக அவரது மனைவி ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார் எனவே மேற்படி வைத்தியர் அவசரகால ஒழுங்குவிதியின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தாலும் 2019.06.24ம் திகதி அன்று அருகில் உள்ள நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு நீதிமன்றில் குறித்த வைத்தியர் முன்னிலைப்படுத்தப்படும் போது அவர் அவசரகால ஒழுங்குவிதியின் கீழ் கைதுசெய்யப்பட்டதாக குற்றச்சாட்டு வரையப்பட்டிருந்தால் சட்டமா அதிபரின் எழுத்துமூல அனுமதியின்றி நீதவான் அவர்கள் பினையில் விடுவிக்க முடியாது.

மேலும் வைத்தியர் சாபியின் மீது என்ன குற்றச்சாட்டுக்கள் என்ற தெளிவற்ற தன்மை நிலவும் இச்சந்தர்ப்பத்தில் அவர் எதிர்வரும் 27.06.2019ம் திகதி நீதிமன்றின் முன் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று ஊடகச் செய்திகள் சொல்கின்றது. எனவே வைத்தியர் சாபியின் தடுத்து வைப்பு 30 நாட்களை விஞ்சுமாயின் தடுத்துவைப்பின் சட்டத்தன்மையும் கேள்விக்கு உட்படுத்த முடியும். அத்தோடு வைத்தியர் சாபிக்கு எதிராக இதுவரைக்கும் குற்றச்சாட்டு வரையப்படாத நிலையில் எதிர்வரும் 21.06.2019ம் திகதி அவசரகால ஒழுங்குவிதிகள் தளர்த்தப்படுமாயின் வைத்தியர் சாபிக்கு எதிரான உறுதியற்ற குற்றச்சாட்டு பயங்கரவாதச் சட்டத்தால் குற்றமாக்கப்படுமா என்ற வினாவும் எழுகின்றது. அவ்வாறாயின் அவரை 30 நாட்கள் தடுத்து வைத்திருந்தது சரிதானா? என்ற வினாவும் எழுhமல் இல்லை. வைத்தியர் சாபி குற்றவாளியா அல்லது சுத்தவாளியா என்பதை நீதிமன்றங்களே தீர்மானிக்கும். அதுவரை அவர் நிரபராதி என்பதோடு அவரின் கைது சட்டமுறையாக செய்யப்பட்டிருத்தலும் வேண்டும்.

எது எவ்வாறாயினும் அவசரகால ஒழுங்குவிதி என்றாலும், சாதாரண நிலைமைகள் என்றாலும் கைது செய்யப்படும் நபர் ஒருவர் மேற்படி அரசியல் அமைப்பின் 13 வது உறுப்புரையின் உபபகுதி (1) மற்றும் (2) யின் முறைக்கு ஏற்ப தான் சட்டத்தின் முறைப்படி கைது செய்யப்படுவதற்கும் தடுத்துவைக்கப்படுவதற்கும் உரித்துடையவர். எனவே மேற்படி வழக்கில் முறைப்பாட்டாளர் அவசரகால நிலைமை நடைமுறையில் இருக்கும் போது கைது செய்யப்பட்ட நிலையிலும் அது குறித்த உறுப்புரை-13(1) மற்றும் 13(2) என்பவற்றை மீறுவதாக தீர்ப்பளிக்கப்பட்டது. மேற்படி வழக்கில் உறுப்புரை-11 உம் ஆராயப்பட்டது அதாவது ஆளெவரும் சித்திரவதைக்கு, கொடூரமான மனிதாபிமானம் அற்ற அல்லது இழிவான நடத்தைக்கு அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு குறித்த உறுப்புரையும் மீறப்பட்டதாக தீர்ப்பளிக்கப்பட்டது.
எனவே மேற்படி உறுப்புரை-11 யின் படி சித்திரைவதை என்பது பௌதீக ரீதியான தீங்கு மட்டுமல்ல உளரீதியான பாதிப்பையும் உள்ளடக்கும் என சுபசிங்க எதிர் பொலிஸ் கன்ஸ்டபிள் சந்துன் மற்றும் ஏனையோர் என்ற வழக்கில் பண்டாரநாயக்க நீதிபதி அவர்கள் என்ற தீர்க்கப்பட்ட வழக்கில் மனுதாரரை கைவிலங்கிட்டு தனியார் வாகனம் ஒன்றில் கொண்டு சென்றது அவரின் கௌரவத்தை பாதிப்பதாக அமைந்துள்ளதால் அது உறுப்புரை-11யின் படி தரக்குறைவாக அல்லது இழிவாக நடாத்தப்பட்டதாகவே கருதப்படும் எனவே இம்மனதாரரின் உறுப்புரை-11யில் கூறப்பட்ட உரிமை மீறப்பட்டுள்ளது எனத்தீர்ப்பளிக்கப்பட்டது.
மேலும் அத்திகாரி எதிர் அமரசிங்க(2003), 1 எஸ்.எல.ஆர், பக்கம் 270 என்ற வழக்கில் நீதிபதிகளான சிரானி பண்டாரநாயக்க, வித்துசுரியா மற்றும் யாப்பா ஆகியோர் உறுப்புரை-11யின் கீழான இழிவான நடத்தை என்பது ஒருவர் உளவியல் ரீதியாக அடைந்த பாதிப்பையும் உள்ளடக்கும் என்று குறித்த வழக்கில் உடன்பட்டுள்ளார்கள். எனவே வைத்தியர் சாபி விடயத்தில் உண்மையில் அவரின் சுயகௌரவம், தொழில் கௌரவம் மற்றும் குடும்பகௌரவம் என்பன இழிவாகக்கப்பட்டுள்ளதை உணர முடிகின்றது. எனவே குறித்த கைதும் அதனைத்தொடர்ந்து ஊடகங்களின் நிலை, பொலிசார் அவருக்கு எதிராக முறையீடு செய்யுமாறு பணித்த விதம், மருத்துவ சங்கம் நடந்துகொண்ட விதம் என்பன உளவியல் ரீதியில் பாரிய தாக்கத்தை உண்டுபண்னியிருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

வைத்தியர் சாபியின் கைது தொடர்பான நம்பகத்தன்மை அல்லது உண்மைத்தன்மை என்ன?
இலங்கையில் விசாரித்து தீர்ப்பளிக்கப்பட்ட பல அடிப்படை உரிமைகள் வழக்குகள் ஒருவரின் iது தொடர்பான யோக்கியத்தன்மையினை ஆராய்துள்ளது. இதன்படி
முத்துசாமி எதிர் கன்னங்கரா, 52,என்.எல்.ஆர்.பக்கம் 324, கிரேசியன்(நீதிபதி) அவர்கள் 'பொலிஸ் அதிகாரி பிடியாணை இன்றி சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்யும் போது அவர் சந்தேக நபருக்கு ஏன் கைது செய்யப்படுகின்றார் என்ற உண்மையான அடிப்படையை கூற வேண்டும்' குறித்த வழக்கில் ஒரு பிரiஐ தான் என்ன குற்றத்திற்காக அல்லது என்ன குற்றம் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தான் கைது செய்யப்படுகின்றேன் என்ற விடயத்தை அறிய உரித்துடையவர் என்று கூறப்பட்டுள்ளது.
மற்றுமொரு தீர்க்கப்பட்ட வழக்கான டீ.எச்.ஆர்.ஏ.குரே எதிர் ராணி, 52,என்.எல்.ஆர்.பக்கம் 457, கிரேசியன்(நீதிபதி) அவர்கள் உயர் அதிகாரியின் கட்டளையின் பெயரில் தீய நோக்குடன் ஒரு பொலிஸ் அதிகாரி பிடியாணை இன்றி சந்தேகத்தின் பெயரில் ஒருவரை குற்றவியல் சட்டத்தின் பிரிவு-32 உபிரிவு-1(அ) இன் படி நியாயமான சந்தேகத்தின் பெயரில் அன்றி சாதாரண காரணங்களுக்காக கைது செய்ய உரித்துடையவர் அல்லது இயலுமாக்கப்பட்டவர் அல்லர்.

மேலும் மேற்படி வழக்கில் கைது செய்யும் நேரத்தில் தான் என்ன குற்றத்திற்காக அல்லது என்ன குற்றமிழைத்ததற்கான சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளேன் என்ற காரணம் கூறுதல் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்படி வழக்கில் நீதிபதி அவர்கள் Nஐhன் லூயிஸ் எதிர் டிம்ஸ் வழக்கினை எடுகோள்காட்டி பின்வருமாறு விளக்குகின்றார்கள், பொலிஸ் அதிகாரிகள் பிடியாணை இன்றி கைது செய்யும் போது குற்றம் சாட்டப்பட்டவரின் மீதான உண்மையான குற்றத்தினை வரையறை செய்யவேண்டும். அவர்கள் தடுத்துவைத்திருப்பவர்கள் தொடர்பில் மேலும் சான்றினைப் பெறும் நோக்குடன் ஏனையவர்களை ஊக்குவிக்க முடியாது.
எனவே வைத்தியர் சாபி விடயத்தில் என்ன நடந்துதது என்பதை தெளிவாக அறிய முடியும்.கைது செய்துவிட்டு முறைப்பாடு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டு ஊக்குவிப்புச் செய்யப்பட்டது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதோடு சாபியின் கைது சட்டமுரணானது என்பதை அறிய முடியும். இதனை உறுதிப்படுத்த இன்னும் பல தீர்க்கப்பட்ட வழக்குகளை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

வெறும் தகவலைக் கொண்டு கைது செய்ய முடியுமா?

தீர்க்கப்பட்ட வழக்கான பியசிறி மற்றும் ஏனையோர் எதிர் நிமால் பெர்ணான்டோ, ஏ.எஸ்.பி மற்றும் ஏனையோர்-1988, 1 எஸ்.எல்.ஆர்.173, எச்.ஏ.டீ.சில்வா(நீதிபதி) தெளிவற்ற அல்லது வரையறுக்கப்படாத குற்றத்திற்காக மற்றும் பொதுவான சந்தேகத்தின் பெயரில் சந்தேகப்படும் குற்றம் தொடர்பில் சரியான வரையறை இல்லாமல் எவர் மீதும் குற்றம் காணும் நோக்கில் கைது செய்ததன் பிறகு முறைப்பாட்டாளர்களை தேடி குற்றத்திற்கான ஏதுக்களை தேட எந்த ஒரு பொலிஸ் அதிகாரிக்கும் உரிமை இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் மேற்படி வழக்கில் சில்வா நீதிபதி அவர்கள் கூறும் போது' ஒருவரை கைது செய்யும் போது உள்ள நிபந்தனை என்னவெனில் கைது செய்யும் போது எந்த குற்றச்சாட்டுக்காக அல்லது என்ன குற்றத்திற்காக சந்தேகிக்கப்படுகின்றார் என்ற விடயத்தினை அறிவது அக்கைதாகும் நபருக்கு சட்டபூர்வமான உரிமையாகும்.இதனை மறுத்து செய்யும் கைது சட்டமுரணானது என்பது அரசியல் அமைப்பின் உறுப்புரையை மீறுவதாகும்.அது அவசரகால நிலைமை என்றாலும் சரியே.எனவே வைத்தியர் சாபியின் கைது முதலில் வருமானத்திற்கு அதிகமாக பணம் சேர்த்ததாக கைது செய்யப்பட்டு மீண்டும் சத்திரசிகிச்சை முறைகேடு என்று முறைப்பாட்டாளர்கள் ஊக்குவிக்கப்பட்டு குறித்த பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாட்டாளர்கள் அழைக்கப்பட்டனர். எனவே குறித்த கைது அப்பட்டமான உரிமை மீறல் என்பதாகவே தீர்க்கப்பட்ட வழக்குகளில் இருந்து அறிய முடிகின்றது.

வைத்தியர் சாபியின் கைது நம்பகத்தன்மையான தகவலை அடிப்படையாகக் கொண்டதா?

தீர்க்கப்பட்ட பல வழக்குகளின் படி ஒருவரது கைதும் அதனைத் தொடர்ந்தான தடுத்து வைப்பும் எந்த அடிப்படையில் அதாவது நம்பகத்தன்மையான தகவலைக் கொண்டதா என்று அறிய வேண்டிய பொறுப்பு கைது செய்யும் நபருக்கு உரியது. வைத்தியர் சாபி வருமானத்திற்கு அதிகமான பணம் வைத்துள்ளார் என்றே மே 24ம் திகதி பொலிசார் கைது செய்து அழைத்துச் சென்றதாக கூறப்பட்டது.வைத்தியர் சாபியை கைது செய்ய முன்பு திவயின பத்திரிகை மருத்துவ கருத்தடை தொடர்பில் தகவல் வெளியிட்டது.அதனை ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீட பேராசிரியர் ஒருவர் விபரத்துடன் வைத்தியர் சாபிதான் குறித்த கருத்தடையை செய்தவர் என தனது முகநூலில் பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்தே இக்கைது நடைபெற்றதாக வைத்தியர் சாபியின் மனைவியை ஆதாரம் காட்டி ஊடகச் செய்தி ஒன்று காணப்பட்டது. இங்கு வைத்தியர் சாபியின் மீதான குற்றம் எதுவன்று திட்டவட்டமான எந்த வரையறையும் இல்லாமல் குறித்த கைது மற்றும் தடுத்து வைப்பு காரணம் சொல்லாமலும் நம்பகமான தகவலை அடிப்படையாகக் கொள்ளமாலும் நடத்தப்பட்டுள்ளதோடு சந்தேகிக்கப்படும் குற்றம் நடைபெற்றது அவசரகால ஒழுங்குவிதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிட முன்னர் என்பதால் அதனை அதாவது சத்திர சிகிச்சை முறைகேடு சமூக பீதியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறி அவசரகாலச் சட்டத்தின் படியே கைது செய்துள்ளோம் என்று கூறினாலும் 72 மணித்தியாலாத்திற்கு மேல் தடுத்து வைக்க முடியாது. நீதவான் முன் முன்னிலைப்படுத்திய பின்பே மேலதிக காலம் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கலாம். வைத்தியர் சாபி விடயத்தில் அப்பட்டமான முறையில் ஊதப்பட்ட பொய்களை வைத்தே அனைத்தும் நடந்துள்ளது. வைத்தியர் சாபி அவர்கள் குற்றவாளியா இல்லையா என்பதை நீதிமுறை விசாரணை ஊடாகவே தீர்மானிக்க முடியும். எனினும் அவரின் கைதும் தடுத்து வைப்பும் சட்டமுரணானது என்பதை மேலும் தீர்க்ப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் ஊகிக்க முடியும்.வைத்திய பேராசிரியர் முகப்பக்கத்தில் பதிவிட்ட விடயத்தை பொலிஸில் முறைப்பாடாக சமர்ப்பிக்காமல் இருந்த நிலையிலும் திவயின பத்திரிகை தீய நோக்குடன் பரப்பிய செய்தியின் நம்பகத்தை ஆராயமலும் வைத்தியர் சாபி கைது செய்து தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
கம்லெத் எதிர் நெவில் சில்வா மற்றும் ஏனையோர், 1991, 2எஸ்.எல்.ஆர், பக்கம் 267 என்ற வழக்கில் குலதுங்க நீதிபதி அவர்கள் கூறும் போது குறித்த நபர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் மனைவியின் பொருள் ஒன்று காணாமல் போனது தொடர்பில் அச்சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி தனது கீழ் நிலை அதிகாரிக்கு பிறப்பித்த உத்தரவின் பேரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டது தொடர்பானது. குறித்த குற்றச்சாட்டு சந்தேக நபருக்கு பொருந்தவில்லை எனவே குறித்த கைது முறையற்றதும் கெடூரமானதுமான செயலாகும் என தீர்ப்பளிக்கப்பட்டது.


வைத்தியர் சாபி விடயத்திலும் அவருடன் தொழில்புரியும் சக உத்தியோகத்தரின் கணவர் குறித்த பிரதேசத்தின் உயர் பொலிஸ் அதிகாரி என்று ஊடகவாயிலாக அறியமுடிந்தது.அத்தோடு அங்கே தொழில் ரீதியான முரண்பாடு ஒன்று உள்ளதை பல ஊடகங்கள் சுட்டிக்காட்டியது.எனவே அதன் அடிப்படையில் வைத்தியர் சாபி குறித்த சிரேஷ்ட அதிகாரியின் உத்தரவில் அவரின் மனைவிக்கு சாதகமாக கைது செய்யப்பட்டிருப்பின் அது சட்டமுரணான கைது என்பதாக கருதப்படும்.

ரட்டவசி பெரமுன வழக்கு, குறித்த வழக்கில் முறைப்பாட்டாளர்கள் அத்துரழிய ரத்ன என்பவரின் தலைமையில் இயங்கிவந்த ரட்டவசி பெரமுன( சுயவயறநளi Pநசயஅரயெ) என்ற இயக்கத்தின் கூட்டம் ஒன்றில் பங்குபற்றியவர்களை கைது செய்தமை தொடர்பான இவ்வழக்கில் 'கைது செய்யும் அதிகாரிக்கு வழங்கப்படும் நம்பகமான தகவலை அடிப்படையாகக் கொண்டே கைது நடைபெறவேண்டும் என்றும் எனவே குறித்த கூட்டத்தில் பங்குபற்றியவர்களின் கைது உறுப்புரை 13-1 யினை மீறும் செயல் எனத் தீர்க்கப்பட்டது.

மேலும் விநாயகமூர்த்தி எதிர் இராணுவ கட்டளை அதிகாரி மற்றும் ஏனையோர், 1997, 1 எஸ்.எல்.ஆர், பக்கம் 113 என்ற வழக்கில் அமரசிங்க நீதிபதிகள் அவர்கள்,

(ஆ) தெளிவற்ற அல்லது பொதுவான அல்லது இவரை கைது செய்வது எதிர்காலத்தில் பெறப்படும் ஆதாரங்களை வைத்து நியாயப்படுத்த முடியும் என்ற காரணத்தில் அமைந்திருந்ததால் குறித்த கைது நடைபடிமுறையற்றது எனக்கூறி அரசியல் அமைப்பின் உறுப்புரை 13(1) ஐ மீறும் வகையில் அமைந்துள்ளது எனத்தீர்ப்பளிக்கப்பட்டது.

ரொமேஸ் குரே எதிர் ஜெயலத், எஸ்.ஐ. பொலிஸ் மற்றும் ஏனையோர், 2008, 2எஸ்.எல்.ஆர்.43 என்ற வழக்கில் பின்வருமாறு கூறப்பட்டது ' கைது செய்யப்பட்ட நபருக்கு( இவ்வழக்கில் மனுதாரர்) க்கு எதிராக எதாவது முறைப்பாடு இருந்தது என்று இம்மன்றின் முன் யதார்த்தமான விடயங்களை முன்னிலைப்படுத்தவோ அல்லது அவருக்கு எதிராக நம்பகத்தன்மையான தகவல் அல்லது நியாயமான சந்தேகம் இருந்தது என்ற விடயமும் மன்றின் முன் வைக்கப்படவில்லை. எனவே இது தெட்டத்தெளிவானது குறித்த மனுதாரரை கைது செய்தது சட்டமுரணானது மற்றும் சட்டத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட முறைப்படி நடக்கவில்லை என்ற அடிப்படையில் மனுதாரின் அடிப்படை உரிமைகளான உறுப்புரை-11 மற்றும் உறுப்புரை-13(1) என்பன மீறப்பட்டுள்ளது என்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அஞ்சலி வழக்கு, 2019.06.12ம் திகதி தீர்க்கப்பட்ட புதிய வழக்கு, அலுவிகார(நீதிபதி அவர்களால்) தீர்க்கப்பட்ட வழக்கில் சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் அலுவலர்கள் கைது நடவடிக்கைகளின் போது எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்ற வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளது.. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூபா.50,000.00 உம் மாத்தறை பொலிஸ் பிரிவின் கொண்ஸ்டபில்(1ம் எதிர்மனுதாரர்) ரூபா.100,000.00 உம் நஸ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது) மேலும் 3ம் பிரதிவாதியான பொலிஸ் தலைமை அதிபதி அவர்கள் இவ்வழக்கில் வழங்கப்பட்டுள்ள கைது செய்வதற்கான சட்டநடைமுறைகளை ஏற்கனவே இல்லாத பட்சத்தில் நடைமுறைப்படுத்த வழிகாட்ட வேண்டும் எனவும் கட்டளை இட்டுள்ளது.

1978ம் ஆண்டில் இருந்து தற்போதுவரைக்கும் சுமார் 41 வருடங்கள் சென்றும் சட்ட அமுலாக்கல் துறை அரசியல் அமைப்பில் சொல்லப்பட்ட கைது செய்யும் மற்றும் தடுத்துவைக்கும் முறைபற்றி அறியாமல் இருப்பது சட்டத்தினைப்பற்றி மக்கள் மத்தியில் நம்பிக்கையீனம் உருவாக்குவதை அதிகரித்துள்ளது. இதுபற்றி அபசின் பன்டா எதிர் எஸ்.ஐ. குனரத்தின என்ற தீர்க்கப்பட்ட அடிப்படை உரிமை வழக்கில் 18வருடங்கள் சென்றும் சட்ட அமுலாக்கல் துறையினர் கைது செய்யும் மற்றும் தடுத்து வைக்கும் முறைபற்றி அறியாமையில் உள்ளதாக கூறப்பட்டிருந்தது.

வைத்தியர் சாபி சார்பாக அடிப்படை உரிமை மீறல் செய்யப்பட்டுள்ளதா என்ற வழக்கினையும், தன்னை மானபங்கப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட முகநூல் பேராசிரியர் மற்றும் இதர நபர்களுக்கு எதிராக மானநஸ்ட வழக்கினையும் தாக்கல் செய்யும் தகைமை உள்ளதாகவே ஊகிக்க முடிகின்றது. எனவே வைத்தியர் சாபியின் மனைவி குறித்த கைது தடுத்து வைப்பு தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் ஒரு முறைப்பாட்டை செய்து கொள்வது ஓர் ஆரோக்கியமான விடயம் ஆகும்.

ஆகவே, வைத்தியர் சாபி விடயத்தில் நடைபெற்ற கைது அப்பட்டமாக சட்டத்தின் நடபடிமுறையினை மீறுவதாகவே முகற்தோற்றமளவில் தென்படுகின்றது. அத்தோடு குறித்த விவகாரத்தில் சுகாதார அமைச்சு வைத்தியர் சாபிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எண்பிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. மேலும் வைத்தியர் சாபி இவ்வாறான செயலில் ஈடுபடவில்லை என கனிசமான அளவு தாதிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.அத்தோடு வைத்தியர் சாபிக்கு எதிராக ஆசையூட்டி அழைக்கப்பட்ட முறைப்பாட்டாளர்கள் மருத்துவப்பரிசோதனைக்கு செல்வதில் இருந்து விலகி இருப்பதாகவும் ஊடகவாயிலாக அறியமுடிகின்றது. எனவே 27ம் திகதி நீதமன்றில் முன்னிலைப்படுத்தப்படும் வைத்தியர் சாபிவிடயத்தில் நீதிமுறையான கட்டுக்காவலா அல்லது பிணையில் விடுதலை செய்வதற்கான கட்டளையா அல்லது நம்பகத்தன்மையான (கிரடிப்பில் ன்போமேசன்) தகவல்கள் அல்லது போதிய சாட்சியங்கள் அற்ற நிலையில் விடுதலை செய்வதற்கான கட்டளையா ஆக்கப்படும் என்று பொருத்திருந்து பார்ப்போம்?

சட்டத்தரணி பைஸர்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -