ஓட்டுமொத்த அமைச்சர்களும் ராஜினாமா செய்தநாள் எந்தவொரு சமூகத்திலும் கரிநாளாக, கவலைதோய்ந்த நாளாக, இருண்ட எதிர்காலத்தை அடையாளப்படுத்தும் நாளாக இருந்திருக்க வேண்டும்; ஆனால் அந்த நாளை ஆனந்தநாளாக, முஸ்லிம்களின் விடிவுக்கு வித்திட்ட நாளாக முஸ்லிம்கள் பார்க்கின்றார்களே! இதுதான் ஈமானிய பலம் என்பதாகும்.
இன்று இந்த ராஜினாமா எமக்கு ஏற்படுத்திக்கொண்டிருக்கின்ற திருப்புமுனைகள் முஸ்லிம்களின் இந்தத்தூய்மையான எண்ணத்திற்கு படைத்தவன் தருகின்ற வெகுமதிகளாகக்கூட இருக்கலாம். நமக்குத் தெரியாது. அவனே எல்லாம் அறிந்தவன்.
இப்படிப்பட்ட ஒரு சமூகத்திற்காக எவ்வளவோ நாம் சாதித்திருக்க வேண்டும். எதிர்காலத்திலாவது இழந்தவற்றை சாதிக்க முற்படுவோம் இன்ஷாஅல்லாஹ். இந்த சமூகம் சமாதானமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கு தேவையான சாத்தியமான அனைத்தையும் செய்வோம்.
தன்னலனைவிட, கட்சிகளின் நலனைவிட சமூகத்தின் நலனை முன்னிறுத்துவோம். எடுக்கின்ற ஒவ்வொரு தீர்மானமும் முதலில் படைத்தவன் பொருந்திக்கொள்ளக்கூடியதாக இருக்கப் பிரார்த்திப்போம்.
அந்தப் பிரார்த்தனையினூடே உருவாகின்ற தூய்மையான உள்ளத்தோடு நாம் எடுக்கப்போகும் தீர்மானம் சமூகத்திற்கு சாதகமா? பாதகமா? என்பதை ஆழ, அகலமாக ஆரோய்வோம். அதன்பின் அம்முடிவை எடுப்போம்.
இவ்வாறு ஒவ்வொரு முடிவையும் தூய்மையான உள்ளத்தோடு படைத்தவனை முதலாவதாகவும் சமூகத்தை அடுத்ததாகவும் முன்னிறுத்தி எடுக்கும்போது நிச்சயமாக இறைவனின் வெற்றி நம்மை நோக்கிவரும்.
கடந்தகால தவறுகளை நமக்குள்ளே அசைபோட்டு தூய்மையான புதிய பாதையை நாடுவோம். இதுவரை நமக்கு நடந்ததெல்லாம் இறைவனின் சோதனையாக இருக்கலாம். ரமளானில் நிறையவே நாம் பாவமன்னிப்பு தேடியிருக்கிறோம். தொடர்ந்தும் பாவமன்னிப்பு தேடுவோம்.
“அரசியல் சமூகத்திற்காகவே தவிர, அரசியலுக்காக சமூகம் இல்லை” என்பதே இனி நமது Motto வாக இருக்கவேண்டும். எனவே, நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்துவைப்போம். அடுத்த சமூகங்கள் நம்மை மதிக்கும் அளவு நமது அரசியல் மற்றும் வாழ்க்கைமுறை அமையட்டும். அதேநேரம் நமது உரிமைகளிலும் தெளிவாக இருப்போம்.
குறிப்பு: முஸ்லிம் அமைச்சர்களின் ராஜினாமாக் கடிதங்கள் இன்னும் ஜனாதிபதியைச் சென்றடையவில்லை; அரசவாகனங்கள் இன்னும் கையளிக்கப்படவில்லை; என்ற குற்றச்சாட்டுக்கள் ஊடகங்களில் முன்வைக்கப்படுகின்றன.
இவை உண்மையற்றதாயின் அவற்றை ஊடகங்களில் தெளிவுபடுத்துங்கள். உண்மையாயின் உரிய நடவடிக்கைகளை எடுங்கள்.
ராஜினாமாக் கடிதம் அரசியலமைப்பின் படி ஜனாதிபதிக்கே அனுப்பப்பட வேண்டும். பிரதமருக்கு அறிவிப்பதில் தவறில்லை. கடிதங்கள் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் அதை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் வைத்திருப்பதாகவும் ஒரு செய்தி அடிபடுகிறது.
அது உண்மையாயின் உங்களது இந்த வரலாற்று ராஜினாமாவைக் அது கேலிக்கூத்தாக்கிவிடும். எனவே, இவைதொடர்பாக, உரிய நடவடிக்கைகளை எடுங்கள். சமூகத்தினதும் உங்களதும் கண்ணியம் எப்போதும் முக்கியம், குறிப்பாக இந்தக்காலகட்டத்தில் அதிமுக்கியம் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.