காரைதீவு நிருபர் சகா-
வரலாற்றுப்பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகனாலய வருடாந்த ஆடிவேல்விழா உற்சவம் எதிர்வரும் யூலை 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி யூலை மாதம் 18ஆம் திகதி சமுத்திர தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.
கிழக்கின் தென்கோடியில் நாநிலங்களின் மத்தியில் மனோரம்மியமான சூழலில் அமைந்துள்ள இவ்வாலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் கிரியைகள் யாவும் நடைபெறும்.
கொடியேற்றத்திருவிழாவன்று மலைத்திருவிழா மயில்திருவிழா தேர்த்திருவிழா போன்ற சிறப்பு திருவிழாக்கள் நடைபெறும்.
அன்றைய தினம் காரைதீவு உகந்தை யாத்திரீகர் சங்கத்தினரின் அன்னதான நிகழ்வு காரைதீவு மடத்தில் இடம்பெறும்.
அத்துடன் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றம் அக்கரைப்பற்று க.கோடீஸ்வரன் தம்பிலுவில் அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுலம் ஆகியோரும் அன்னதானம் வழங்குவர் என ஆலய திருப்பணிச்சபைச் செயலாளர் கே.ஸ்ரீபஞ்சாட்சரம் தெரிவித்தார்.
தேசத்துக்கோவில் என்பதால் பல ஊர்களின் உபயகாரர்கள் 15நாள் திருவிழாக்களையும் பொறுப்பெடுத்துள்ளனர்.
பகல்திருவிழா காலை 7மணி தொடக்கமும் இரவுத்திருவிழா மாலை 5மணி தொடக்கமும் இடம்பெறும்.
விழாக்காலங்களில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆலய ஆடிவேல்விழா தொடாத்பில் இறுதிக்கட்டக் கூட்டமொன்று எதிர்வரும் 10ஆம் திகதி ஆலய வளாகத்தில் ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திசாநாயக்க தலைமையில் நடைபெறும். அரசஅதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவும் கலந்துகொள்ளவுள்ளார்.