அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்-
முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் எஸ் பி திசாநாயக்க ஆகியோருக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் முறைப்பாடு ஒன்றை பொலிஸ் தலைமையகத்தில் இன்று (07) பதிவு செய்துள்ளார்
பயங்கரவாத இயக்கத்துடனும் சஹ்ரானுடனும் தன்னை தொடர்புபடுத்தி மீண்டும் மீண்டும் பொய்ப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து வரும் இவ்விரு அரசியல்வாதிகளும் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் அப்பட்டமான பொய் என ரிஷாத் எம் பி தெரிவித்தார்
பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர் ஊடகவியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், தனது அமைச்சுக்கு கீழான சதொச நிறுவனத்தின் வாகனங்கள் சஹ்ரானின் நாசகார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப் பட்டதாகவும் அவரது பயங்கர செயற்பாடுகளுக்கு தான் உதவியதாகவும் விமல் வீரவன்ச முழுப்பொய்யை கூறியதுடன் கிளிப்பிள்ளை போன்று திரும்ப திரும்ப அதே பொய்யை பரப்புகின்றார். விமலுக்கு முதுகெலும்பு இருந்தால் இதனை சாட்சியங்களுடன் நிரூபிக்குமாறு சவால் விடுக்கின்றேன் என்றார்.
அதே போன்று 52 நாட்கள் அரசாங்கத்துக்கு எனது உதவியை கேட்டு, அது சாத்தியப்படாததால் விரக்தி அடைந்த எஸ் பி திசநாயக்கவும் ஊடகங்களில் வந்து தினம் தினம் பொய்களை கக்குகின்றார். இவ்விருவரும் மீண்டும் அதிகாரத்துக்கு வரும் நப்பாசையிலலேயே இந்த பொய்யான கருத்துகளை கூறி வருகின்றனர்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளுடன் சம்பந்தப்பட்ட கடும்போக்கு தீவிரவாதிகளை உசுப்பேற்றியவர்கள் இவர்களே.
நாட்டில் மீண்டும் ஒரு கலவரம் ஏற்படக்கூடாது என்ற உண்மையான எண்ணத்துடன் முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை தூக்கி எறிந்து, போலி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட ஒரு சில முஸ்லிம் அரசியல் வாதிகள் மீதான சுயாதீன விசாரணைக்கு வழி வகுத்துள்ளனர் எனவும் ரிஷாத் எம் பி மேலும் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான அமீர் அலி, அப்துல்லா மஹ்ருப், இஷாக் ரகுமான், இஸ்மாயில், மேல் மாகண சபை உறுப்பினர் பாயிஸ் ஆகியோரும் மக்கள் காங்கிரஸ் தலைவருடன் வந்திருந்தனர்.