ஏப்ரல் 21ம் திகதி நடைபெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலின் பின்னர் நடைபெறச்சாத்தியமாயிருந்த முஸ்லிம்களுக்கு எதிரான அசம்பாவிதங்களை தடுத்து நிறுத்துவதில் சங்கைக்குரிய கர்த்தினல் அவர்களின் பங்களிப்பு மகத்தானது.
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முஸ்லீம் சமூகம் முழுமையான ஒத்துளைப்பை வழங்கிக்கொண்டிருக்கும் அதேவேளையில் மறுபுறம் முஸ்லிம்களின் அரசியல் தலைமைத்துவங்களின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து பதவி விலக வேண்டுமென்ற அநியாயமான கோரிக்கையை முன்வைத்து நாட்டில் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தி அதிகார வெறி பிடித்தோரின் அஜந்தாவுக்கு அறிந்தோ அறியாமலோ பலியாகிக்கொண்டு உண்ணாவிரதம் என்ற அகிம்சைப்போராட்டத்தினூடாக இனவாதத்தீயை தூண்டிக்கொண்டிருந்த ரத்னா தேரரை சந்திக்க சென்றது மிகுந்த வேதனை தருகிறது.
குற்றம் சாட்டப்பட்டுள்ளோரை விசாரித்து உண்மையை கண்டறியக்கூடிய தரமான புலன் விசாரனை பிரிவைக்கொண்ட பாதுகாப்பு இலாகாவும்,
ஆதாரங்கள், சாட்சியங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கக்கூடிய நீதித்துறை இருக்கும் ஜனநாயக பாரம்பரியத்தை உடைய இந்நாட்டில் ஒரு பௌத்த மத குருவின் உண்ணாவிரதம் எத்தகைய உணர்ச்சிபூர்வமான் பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சங்கைக்குரிய கர்த்தினல் மல்கம் ரஞ்ஜித் அவர்கள் அறியாமலிருக்க நியாயமில்லை.
இனக்குரோதத்தை மேலும் ஊக்கிவித்து இந்த நாட்டை இரத்தக்காடாக்க சாத்தியமான உண்ணாவிரதத்தை கைவிட்டு அமைதியை உத்தரவாதப்படுத்துங்கள் என்று தேரருக்கு பகிரங்கமாய் வேண்டுகோள் விடுத்து தனது உயர் ஆண்மீக அந்தஸ்த்தை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்க வேண்டிய சங்கைக்குரிய கர்த்தினல் அவர்கள் தேரரின் நலம் விசாரிக்கும் போர்வையில் அவரின் காலடிக்கு சென்றது பேரினத்துவேசிகளுக்கு அங்கீகாரம் அளித்தததாகவே எம்மால் நோக்க முடிகின்றது என்பதை மிகுந்த கவலையுடன் பதிந்து கொள்கின்றோம்.