முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் அல்லர் எனவும் ஐஎஸ் .ஐஎஸ், மேற்கத்தேய நாடுகளின் தேவைக்காக உருவாக்கப்பட்ட பயங்கரவாத இயக்கமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஃறூப் இன்று (25) செவ்வாய்க் கிழமை தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஊடகங்கள் மூலம் தான் பிரசித்தம் அடைவதற்காகவும் ஊடகத்தின் பார்வையை தன்மீது செலுத்துவதற்காகவும், எமது கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் மீது தொடர்ந்தேர்ச்சியான பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திவருகின்றார். அவர் கடந்த கிழமை சபையிலே ரிஷாட் பதியுதீனின் தாயாரையும் சகோதரரையும் சம்பந்தப்படுத்தி மிக கேவலமாக உரையாற்றினார் . அதனை நான் தடுக்க முயற்சித்தத்தை அந்த சபை தெளிவாக உணர்ந்திருக்குமென நினைக்கின்றேன்.
இஸ்லாம் என்பது குர்ஆனை மையமாக கொண்ட மார்க்கம். இறைவனின் கோட்பாட்டையே முஸ்லிம்கள் பின்பற்றுகின்றனர். இந்த நாட்டு முஸ்லிம்கள் எந்தக்காலத்திலும் கிறிஸ்தவர்களையோ பௌத்தர்களையோ வேறு எந்த சமயத்தினரையோ தாக்கியவர்களோ தாக்க முனைந்தவர்களோ அல்லர்.
எமது தலைவர் ரிஷாட் பதியுதீன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு சரியான தீர்வை காணவேண்டும் என்பதற்காகவே குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கடந்த 12 ஆம் திகதி வரை பொலிஸில் முறையிடுமாறு காலக்கேடு விதிக்கப்பட்டது. ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இந்த சபையிலே ரிஷாட் பதியுதீன் தொடர்பில் உளறுகின்ற அல்லது ஆதாரமில்லாது கதைக்கின்ற விடயங்கள் எதையும் பொலிஸில் ஏன் முறையிடவில்லையென கேற்கின்றேன். எனவே அவரது நோக்கம் விளங்குகின்றது.
பொதுபலசேனாவின் ஞானாசார தேரருக்கு 5 ஆயிரம் வாக்குகளை கூட கொடுக்காதவர்கள் , விமல் வீரவன்ச போன்ற பச்சை இனவாத வங்குரோத்து அரசியல்வாதிகளுக்கு வாக்குகளை எவ்வாறு வழங்கப்போகிறார்கள்? எனவே தான் இவர் தனியாக போட்டியிட்டால் வாக்குகளை பெறமுடியாது என்ற காரணத்தினால் மஹிந்தவுடன் தொங்கிக்கொண்டிருக்கின்றார். பௌத்த சிங்கள மக்கள் இனவாதிகள் விடயத்தில் மிக தெளிவான தீர்மானத்தை கடந்த காலங்களில் வழங்கியுள்ளார்கள்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இந்த நாட்டிலுள்ள சிறுபான்மையினர் மாறி மாறி வாக்களித்திருக்கின்றார்கள். இந்த கட்சிகள் இனவாதிகளின் பின்னால் சென்றதனால்தான் சிறுபான்மை மக்கள் ஆட்சியை மாற்றியமைத்தார்கள்.இப்போது விமல் போன்ற இந்த இனவாதிகள் எதிர்க்கட்சியுடன் இணைந்து கொண்டு சமூகத்தின் மத்தியிலே குழப்பத்தையும் இனக்கலவரத்தையும் உருவாக்க முயற்சித்துக்கொண்டிருக்கின்றார்கள். இதற்கு எவருமே இடமளிக்கக்கூடாது.
முஸ்லிம் அமைச்சர்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ராஜினாமா செய்ய கூறவில்லை எனினும் கடந்த 3 ஆம் திகதி நாடாளாவியரீதியில் ஒர் இனக்கலவரத்தை உருவாக்கும் வகையில் இனவாதிகள் தேரர் ஒருவரின் உண்ணாவிரதத்தை காரணமாக வைத்து வன்முறைகளில் ஈடுபட முயற்சித்த போதே நாங்கள் ராஜினாமா செய்து நிலைமையை சுமூகமாக்கினோம். முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு ரிஷாட் பதியுதீன் மீதான குற்றச்சாட்டுகளையும் விசாரித்து வெளிப்படுத்துமாறு நாங்கள் கோரியிருக்கின்றோம் என்றார்.