கலைஞர் தனது இனத்துக்காக பதவி துறந்த அதே பாதையில் நாங்களும் இன்று பயணித்துக்கொண்டிருக்கிறோம்: சென்னையில் ரவூப் ஹக்கீம்



ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-

கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற “தமிழர் எழுச்சி நாள் - கலைஞர் உதயம்” நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை
ம்மைவிட்டு பிரிந்து சென்று இன்றுவரையில் மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் மாமனிதராக, உலகத் தமிழினத்தின் சாணக்கிய தளபதியாக அனைவரும் நித்தியம் கொண்டாடுகின்ற கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் இனத்தின் எழுச்சி நாளாக அடையாளப்படுத்தி கொண்டாடப்படுவது சாலச்சிறந்த நிழ்வாகும். இந்நிகழ்வில் இலங்கை தமிழ்பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி பேசவேண்டும் என்று தளபதி ஸ்டாலின் அன்போடு அழைப்பு விடுத்தபோது அதை தட்டிக்கழிக்க இயலாமல் இங்கு வருகை தந்திருக்கிறேன்.

ஈழநாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தின் கோரப்பற்கள் எங்கள் அனைவரையும் குதறித் தள்ளிவிடுமோ என்று அச்சப்படுகின்ற ஒரு காலகட்டத்திலிருந்து மெதுவாக மீண்டு வருவதற்கான ஒரு சுமூகமான சூழலை உருவாக்குவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறோம். இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில் நான் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளேன்.

மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான தொடர்பாடலில் அரசியல் இலக்கணத்தை கற்பித்தவர் தலைவர் கலைஞர் கருணாநிதி என்றால் அது மிகையாகாது. இந்திரா காந்தியின் அவசரகாலச் சட்டம் நடைமுறையிலிருந்த காலகட்டத்தில், அதற்கெதிராக கிளர்ந்தெழுந்து நாட்டிலே சட்டத்தின் ஆட்சியை குழிதோண்டிப் புதைப்பதற்கு தன்னோடு கூட்டுச் சேர்த்திருந்த இந்திரா காந்திக்கு எதிராக குரல்கொடுத்த, அரசியல் நேர்மை பிரளாத ஒரு மாபெரும் தலைவரைத்தான் நாம் இன்று கொண்டாடுகிறோம்.
அறிஞர் அண்ணா மறைந்தபோது, திராவிட முன்னேற்றக் கழகம் அடியோடு அழிந்துபோகும் என்று பெரியார் உட்பட பலரும் அச்சப்பட்டார்கள். அத்தகைய சந்தர்ப்பத்திலேயே தலைமைப் பொறுப்பை தாங்கியது மாத்திரமல்லாது, இந்த இயக்கத்துக்கான தானைத் தளபதியாக கிட்டத்தட்ட ஐந்து தசாப்பதங்கள் வழிநடத்தியுள்ளார். தமிழகத்தின் தமிழருக்கு மாத்திரமல்லாது சர்வதேசமெங்கும் சிதறிவாழும் அனைத்து தமிழினத்துக்கும் தனிப்பெரும் தலைவனாக இருந்தவர் இன்று எங்கள் மத்தியில் இல்லை.
ஆனாலும், அவரின் அரசியல் பயணத்தில் கற்ற பாடங்கள் ஏராளம். தோல்வியை கண்டு துவளாத ஒரு தலைவன். எம்.ஜி. ராமசந்திரன் ஆட்சியைக் கைப்பற்றி பதின்மூன்று வருடங்கள் அரச கதிரையை எட்டமுடியாமல் இருந்த நிலையிலும் “முரசொலி” என்ற பத்திரிகையை கையில் வைத்துக்கொண்டே தமிழினத்தின் வீரத்தை வீரியத்தை விழவிடாமல் பாதுகாத்தவர் கலைஞர் என்றால் மிகையாகாது.

முரசொலியில் கலைஞர் என்ன எழுதப்போகிறார் என்பதை வைத்துத்தான் தமிழகத்தின் அரசியல் நெறியை வகைப்படுத்துகின்ற காலமாக அன்றைய காலம் இருந்தது. துவண்டுபோகாத திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியலை பதின்மூன்று வருடங்களுக்கு மேலாக, எதிர்கட்சி அரசியலை எப்படிச் செய்யவேண்டும் என்பதை கற்பித்தார்.
அது மாத்திரமல்ல, 1977 தொடக்கம் 1990 வரை பொறுமைகாத்து, அதற்கிடையில் இலங்கை மக்களுக்காக 1977ஆம் ஆண்டில் போராட்டத்தை கையிலெடுத்தார். 1983ஆம் ஆண்டு தன்னுடைய எதிர்க்கட்சி பதவியைத் துறந்து, தமிழினத்தின் மானம் காத்த தலைவனாக தன்னை நிலைநிறுத்தினார். அன்று இலங்கையில் தமிழினத்துக்கு எதிராக நடந்த கொடூரமான சம்பவங்களை சட்டசபையில் பிரேரணையாக கொண்டுவந்து, எதிர்த்துப்பேசி தன்னுடைய பதவியை துறந்து பாரிய தியாகத்தை வெளிக்காட்டிய தலைவரையே நாங்கள் இன்று நினைவுகூர்கின்றோம்.

இலங்கை தமிழ்பேசும் மக்களின் ஒரு கூறாகிய முஸ்லிம்கள், இன்று அதேவிதமான பேரின கெடுபிடிகளுக்குள் சிக்குண்டு தவிர்க்கிறார்கள். கலைஞர் கற்றுத்தந்த பாடம், கடந்த சில நாட்களுக்குள் முன்னர் ஆட்சியிலிருந்த ஒன்பது முஸ்லிம் அமைச்சர்கள் பதவி துறந்திருக்கிறோம். அஞ்சாச நெஞ்சமாக கலைஞர்கள் எவ்வாறு பதவி துறந்து, தனது இனத்துக்காக போராடினாரோ, அதேவழியில் நாங்களும் இன்று பயணித்துக்கொண்டிருக்கிறோம். எமது இனத்துக்காக தமிழ்பேசும் சமூகங்களையும் ஒன்றிணைத்து, சிறியதொரு கும்பல் செய்த மிலேச்சத்தனமான தாக்குதலுக்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் இலக்குவைத்து பழிவாங்கும் கூட்டத்திலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு நாங்கள் புறப்பட்டுள்ளோம்.
இத்தகைய சந்தர்ப்பத்தில் உங்கள் மத்தியிலிருந்த தமிழினத்தின் தானைத் தளபதி அனுபவித்த கஷ்டங்கள் கொஞ்சமல்ல. இந்திரா காந்தி அம்மையாரின் அவசரகாலச் சட்டம் நிலவிய காலப்பகுதியில், தலைவர் அதை எதிர்த்து நின்றதன் காரணமாக தலைவரும் ஸ்டாலினும் சிறை செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அது மட்டுமல்ல, மேயர் சிட்டி பாபு சிறையில் உயிரிழந்த சம்பவத்தையும் நாங்கள் பார்த்தோம்.

இவற்றையெல்லாம் கண்டு துவண்டுபோகாமல், தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்து கட்டம் கட்டமாக தமிழகத்தின் அரசியலை வடிவமைப்பதிலும் தேசிய மட்டத்திலே எப்படி அரசியல் பேரம்பேச வேண்டும் என்பதையும் பாடமாக புகட்டித் தந்ததில் கலைஞருக்கு நிகர் கலைஞரேதான். 1971ஆம் ஆண்டு இந்திரா காந்திக்கு ஒன்பது ஆசனங்கள் கொடுத்த நிலையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து மூப்பனார் விலகியபோது, 20 ஆசனங்களை தாரைவார்த்துக் கொடுத்து அரசியல் சாணக்கியம் என்னவென்பதை அழகாக வடிவமைத்து தந்தவர் கருணாநிதி.

அதே வழிநின்று தளபதி ஸ்டாலின் இன்று சகல கட்சிகளையும் அரவணைத்து மிகப்பெரிய வெற்றியை பாராளுமன்ற தேர்தலிலே காங்கிரஸ் தி.மு.க. கூட்டணிக்கு பெற்றுக் கொடுத்திருக்கிறார். அது மாத்திரமல்ல, உலகெங்கிலும் பரந்தும் விரிந்தும் வாழும் தமிழர்களுக்கு தங்களுக்காக போராடுகின்ற ஒரு கூட்டம், இன்று மதவாத அரசியலுக்கு சிம்மசொப்பனமாக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதற்காக பெரியதொரு அணியை உருவாக்குகின்ற படிப்பினையை கலைஞருடைய பாசறையிலே கற்றார் என்பதுதான் நாங்கள் இன்று கொண்டாட வேண்டிய விடயமாகவுள்ளது.
இந்தப் பின்புலத்தில்தான் இன்று தமிழினம் பெருமையோடு திரும்பத் திரும்ப கலைஞரை கொண்டாடுகிறது. அவர் திரையுலகத்தில் சாதித்த சாதனைகளும் சாதாரணமானவையல்ல. நடிகர் சத்யராஜ் பெரியாரை தத்துரூபமாக திரையில் கொண்டுவந்து எங்களுக்கு காட்டித்தந்த ஆளுமைமிக்க நடிகராவார். பெரியார் கற்றுத்தந்த படிப்பினைகளில் மிக பிரதானமான விடயம் சாதிக் கொடுமையை அகற்றுவதாகும். திராவிடக் கொள்கையின் அடிப்படை மதச் சார்பின்மை என்பதே. அதுதான் இந்திய நாட்டின் அரசியல் அடையாளத்தின் அங்கம்.
அதற்கு அச்சாணியாக திகழ்ந்தது திராவிட முன்னேற்ற கழகத்தின் கொள்கைகள். இன்று இலங்கையில் காண்பதைப்போல தமிழ்பேசும் மக்கள் வெவ்வேறாக அரசியல் செய்யாது, எல்லோரும் ஓர் அணியிலே நிற்கின்றார்கள். நாங்கள் எல்லோரும் தமிழர்கள் என்று பெருமையுடன் பேசுகிறார்கள். அதற்கான பின்புலத்தை அமைப்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கிய தாக்கம் சாதாரணமானதல்ல. அதன் விளைவை இன்று மிகத் தெளிவாக காண்கின்றோம்.

இந்திய துணைக் கண்டத்தில் மதவாத அரசியல் மூலம் எதைச் செய்தாலும் அதை எதிர்த்து நிற்கக்கூடிய திராணி, இன்று தமிழகத்திலும் கேரளத்திலும் தலைநிமிர்ந்து நிற்கின்றது என்பதையிட்டு நாம் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறோம். ஆனால், மத்திய அரசு கடந்த காலங்களைப்போல் ஆளுநர் ஆட்சியை கொண்டுவந்து, தமிழகத்தில் அடுத்த தேர்தல் வரும்போது சட்ட சபையின் ஆட்சி உங்கள் கைகளுக்கு வருகின்றபோது அதை எப்படியாவது தட்டிப் பறிப்பதற்கு தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

கூட்டாக இருக்கின்ற இந்தக் குடும்பத்துக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு எடுத்த முயற்சிகள் பழிக்கவில்லை. இனியும் பழிக்கமாட்டாது என்பதற்கு தளபதி ஸ்டாலினின் சாணக்கியமான அரசியல் அனைவருக்கும் ஆறுதலை தந்திருக்கிறது. இதன்மூலம் உலகளாவிய தமிழ்பேசும் சமூகம் தந்தை வழிநின்று தமையனாக வழிநடத்துகின்ற ஸ்டாலினுடைய அரசியல் பலம் மத்திய அரசுக்கு பேரம்பேசும் சக்தியை கொடுத்துள்ளது.

தி.மு.க. கடந்தகால அரசியலிருந்து நிறைய பாடங்களை கற்றுக்கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அவற்றை அடிப்படையாக வைத்து அடுத்துவரும் அரசியல் கட்டங்களை சாதுரியமாக கையாள்வதற்கு தாராளமான மனத்திடத்தோடு அவர்களுடைய போராட்டம் தொடர்கிறது. மெரீனா கடற்கரையில் துயில்கொள்ளும் இல்லத்தை பெற்றுக்கொள்வதற்குகூட ஸ்டாலின் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். அதில் உருவான அனுதாப அலை உலகளாவிய ரீதியில் உளுக்கிவிட்டது.

அற்பத்தனமாக அரசியல் மூலம், அடுத்த இரண்டு வருடங்களில் மத்திய அரசின் அணுக்கிரகத்தில் கழித்துவிடலாம் என்று கனவுகாணும் கூட்டம் மிக விரைவில் தங்களுடைய ஆட்சியிலிருந்து அகன்றுவிடுார்கள். இதன்மூலம் மத்தியிலும் மாநிலத்திலும் திராவிட ஆட்சி மீண்டும் மலரவேண்டும். அதனுடாக தமிழினத்தின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ்பேசும் சகல மக்களும் கௌரவத்தோடு வாழ்வதற்கான சூழல் அமையவேண்டும். 







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -