"அரசியல் தலைமைகள் விடயத்தில் காட்டப்படும் அக்கறைக்கு சமமாக அப்பாவி மக்கள் விடயத்திலும் அக்கறை காட்டப்படுதல் வேண்டும்” -NFGG வேண்டுகோள்.-




சிறிய சிறிய காரணங்களுக்காகவும் வெறும் சந்தேகங்களின் அடிப்படையிலும் கைது செய்யப்பட்டு நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தி, குற்றமற்றவர்கள் அனைவரையும் மிக அவசரமாக விடுதலை செய்வதற்கான விஷேட பொறிமுறை ஒன்று அமைக்கப்படவேண்டும்.இதனை முக்கிய வேண்டுகோளாக அரசியல் தலைமைகள் வலியுறுத்தி, அழுத்தம் கொடுக்க வேண்டும்.அரசியல்
தலைமைகள் மீதான குற்றச்சாட்டுக்களை தெளிவுபடுத்துவதற்காக காட்டப்படும் அக்கறை போலவே அப்பாவி முஸ்லிம்கள் விடயத்திலும் உடனடி அவதானமும், அக்கறையும் காட்டப்படுதல் வேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவசர வேண்டுகோள் ஒன்றினை விடுத்திருக்கிறது.இன்று வெளியிடப்பட்டுள்ள NFGGயின் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஏப்ரல் 21ம் திகதிய பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலானது, ஒட்டு மொத்த நாட்டு மக்களையும்,குறிப்பாக முஸ்லிம் மக்களை கடுமையாக பாதித்திருக்கிறது.அதுமட்டுமன்றி தேசிய அரசியலிலும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலமை இந்நாட்டு முஸ்லிம் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பலவாறான நெருக்குவாரங்களையும், அச்சுறுத்தல்களையும் உருவாக்கியிருக்கிறது. பயங்கரவாதிகள் விட்டுச்சென்றிருந்த இடத்திலிருந்து இனவாதிகள் மற்றுமொரு அடக்குமுறை கலாச்சாரத்தினை இந்நாட்களில் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர். இதனால் சாதாராண அப்பாவி முஸ்லிம்கள் பிரதானமாக இரண்டு அபாயங்களுக்கு ஏக காலத்தில் முகம் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதிலொன்றுதான் ஏப்ரல் 21ம் திகதிக்குப் பின்னர் திட்டமிடப்பட்ட வகையில் முஸ்லிம் மக்களின் மீதும், அவர்களின் பொருளாதாரத்தின் மீதும் நடத்தப்பட்டுவருகின்ற இனவாத அச்சுறுத்தல்களும் வன்முறைகளுமாகும். இன்னுமொன்று, ஆதாரங்களேதுமின்றி வெறும் சந்தேகத்தின் பேரில் நடைபெறும் கைதுகளாகும். இவை இரண்டுமே சமாந்தரமான ஒரு உளவியல் யுத்தத்தினை முஸ்லிம்கள் மீது கடுமையாக தொடுத்து வருகின்றன.

குருணாகல், குளியாபிட்டிய, மினுவாங்கொட பிரதேசங்களில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளைத்
தொடர்ந்து ,ஆளுனர் அசாத்சாலி, ஹிஸ்புள்ளாஹ் உட்பட அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் ஆகியோர் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கையுடன் ரத்ன தேரரின் தொடர் உண்ணா விரதப்போராட்டம் தலதா மாளிகைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. குறித்த நாட்களில் அடுத்து என்ன நடக்குமோ என்ற ஒரு பயங்கரமான ஒரு பதட்ட நிலமையினை நாட்டில் தோற்றுவித்து, அதன் மூலமாக கண்டி உட்பட நாட்டின் பல பாகங்களிலும் கலவரங்களை தோற்றுவிப்பதற்கான சகல முயற்சிகளையும் இனவாத சக்திகள் மேற்கொண்டன. இந்த இடத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து தங்களது பதவிகளை ராஜினாமாச் செய்தது உண்மையில் பாராட்டத்தக்கது. அது இந்நாட்டில் திட்டமிட்டு அரங்கேற்றப்படவிருந்த இனவாத அழிவுகளை தோல்வியடையச்செய்தது.
அதன் பின்னரான தேசிய அரசியல் களம் முற்றிலும் மாறுபட்டதாக இப்பொழுது மாறியிருக்கிறது. அமைச்சர்களின் ஒட்டு மொத்த இராஜினாமா முழு உலகின் கவனத்தினையும் ஈர்த்துள்ளது. இதனால் இலங்கை அரசு நாளுக்கு நாள் பல கண்டனங்களுக்கும், அழுத்தங்களுக்கும் ஆட்பட்டு வருகின்றது. இந்த நிலமையினை தவிர்க்கும் முகமாக இப்பொழுது அமைச்சர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் மீள தமது பதவிகளில் இணைந்து கொள்ளுமாறு,மஹாநாயக்க தேரர்கள் உட்பட பலரும் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
அதே சமயம் அரசாங்கத்தின் பணிப்புரைக்கு அமைவாக உடனடியாக விசாரனைகளை மேற்கொண்டு, குற்றம் சாட்டப்பட்டுள்ள அரசியல் தலைமைகளின் விவகாரங்களை கையாள, விசேட குழுக்களும் நியமிக்கப்பட்டு விசாரணைகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. 'ஒரு மாத காலத்திற்குள் அனைத்தும் தெளிவு படுத்தப்பட்டு, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படல் வேண்டும்' என முஸ்லிம் அரசியல் தலைவர்களால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுவும் உண்மையில் வரவேற்கத்தக்க ஒரு விடமேயாகும்.
எனினும் இங்கு அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டிய மற்றுமொரு பாரிய விடயம் உள்ளது. அதுதான் 21ம் திகதிக்குப் பின்னர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான சாதாரண மக்களின் விடுதலை விவகாரமாகும். தற்கொலைக்
குண்டுத்தாக்குதல் இடம்பெற்று சுமார் ஒன்றரை மாதம் கடந்துள்ள நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்ட பலரும் இதுவரை எதுவித முறையான விசாரணைகளுமின்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் பலர் சாதாரணமாக குர்ஆன் பிரதிகளை வைத்திருந்ததற்காகவும், சமையலுக்கு பயன்படுத்தும் கத்திகளை வைத்திருந்ததற்காகவும் , கல்வி நடவடிக்கைகளுக்காக உலகவரைபடம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டிலும் , பௌத்த மதத்தை அவமதிக்கும் சின்னங்களையுடைய ஆடை அணிந்திருந்தார் என்பன போன்ற சிறிய சிறிய காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அது மாத்திரமன்றி இவ்வாறு கைது செய்யப்படுகின்றவர்களை உடனடி பிணையில் விடுவிக்க முடியாதவாறும், அவர்கள் தொடர்பான விடயங்களில் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றங்களில் பிணை பெற முடியாதவாறும் பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் ICCPR சட்டங்களுக்கு கீழால் அவர்களுக்கான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இதனால் இவ்வாறான கைதுகளை எப்படிக் கையாள்வது? இது தொடர்பான முறைப்பாடுகளை யாரிடம் தெரிவிப்பது? இவர்கள் தரப்பு நியாயங்களை எப்படி நிரூபிப்பது? இவர்களை எப்படி விடுவிப்பது? என திக்குத்தெரியாத நிலையில் இன்று கைது செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் நாள்தோறும் நீதி மன்ற வளாகங்களுக்கும் பொலீஸ் நிலையங்களுக்குமாக அலைந்து திரிவதை அவதானிக்க முடிகின்றது. புனித ரமழான் மாதத்திலும் கூட பல ஏழைத்தாய்மார்கள் இவ்வாறு தங்களது குழந்தைகளுடன் கண்ணீரும் கம்பலையுமாக அலைந்த காட்சி அனைவரையும் கண்கலங்கச்செய்திருந்தது. எனினும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சனைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் இதுவரை எவ்வித காத்திரமான முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொண்டதாக தெரியவில்லை.
இன்று முஸ்லிம் அரசியல் தலைமைகளுடைய விடயங்களை விரைவாக முடிவிற்கு கொண்டுவரும் வகையில் இவ்வாறு விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவது போலவே, அரசாங்கம் மக்களுடைய விடயங்களையும் விரைவாக கையாளவும் விஷேட குழுக்களை அமைக்க வேண்டும்.இதனை மிக முக்கிய நிபந்தனையாக எமது அரசியல் பிரதிநிதிகள் முன்வைப்பதோடு ,இது தொடர்பான தொடர் அழுத்தங்களையும் சாத்தியமான அனைத்து வழிகளிலும் கொடுக்க வேண்டும்.
அரசும், அரசியல் தலைமைகளும் மக்களுக்காகவே பணியாற்றுகின்றன. மக்களுக்காகவே நிர்மானிக்கப்படுகின்றன. மக்களுடைய பிரச்சனைகளை தீர்க்காது அரசியல் தலைமைகளுடைய பிரச்சனைகளை மாத்திரம் தீர்ப்பதனால் எதிர்பார்க்கின்ற அமைதியை நாட்டில் ஏற்படுத்த முடியாது.

இன்று இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கானவர்களினதும் அவர்களது குடும்பங்களினதும் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலமை தொடர்ந்தும் நீடிக்கும் பட்சத்தில் இக்குடும்பங்கள் பல வழிகளிலும் விரக்தியான மனோ நிலைக்கு தள்ளப்படுவர். .பயங்கரவாதத்திற்குள் நாட்டை மீண்டும் தள்ள நினைக்கும் சக்திகளுக்கு இது சாதகமாக அமைந்துவிடும் என்ற அபாயமும் இங்கு ககவனிக்கப்படல் வேண்டும்.எனவே இது தனிப்பட்ட குடும்பங்களுக்கன்றி ஒட்டு மொத்த நாட்டிற்குமே அச்சுறுத்தலான விடயமாகும் .
எனவே, விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கான விஷேட குழுக்களை அமைத்து , விஷேட பொறிமுறைகளை வகுத்து கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி மக்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்த அவசர வேண்டுகோள் ஒன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அனுப்பி வைப்பதோடு சர்வதேச இராஜ தந்திரிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளிடமும் இது பற்றி வலியுறுத்தி அவர்களின் ஒத்துழைப்புகளையும் பெறுவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -