இம்முறை குறித்த ஒரு சில பிரதேசங்களில் வாக்காளர் படிவத்துடன் சேர்த்து குடியிருப்பாளர்களின் சொத்து விபரங்களைக் கோரும் மேலதிக படிவங்களும் கிராம சேவகர்களால் விநியோகிக்கப்பட்டுள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றன.
இதனைத் தொடர்ந்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் நஜா மொஹமத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய அவர்களை சந்தித்து இந்த விடயம் குறித்து கலந்துரையாடினார். இதன் போது எமது வழமையான வாக்காளர்களை பதிவு செய்யும் ஆவணங்களைத் தவிர குடியிருப்பாளர்களின் சொத்து விபரங்களைக் கோரும் எந்தவொரு படிவமோ,ஆவணங்களோ தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கோரப்படவில்லை என்பதை மஹிந்த தேஷப்பிரிய அவர்கள் உறுதிப்படுத்தினார்.
மேலும் இன்று மாலை கட்சிகளின் செயலாளர்களுடனான தேர்தல்கள் ஆணைக்குழுவின் விஷேட சந்திப்பொன்று தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்றது. இதன் போதும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய அவர்கள் குடியிருப்பாளர்களின் சொத்து விபரங்களைக் கோரும் மேலதிக ஆவணங்கள் குறித்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு தெளிவுபடுத்தியதுடன் அவ்வாறான எந்தவொரு ஆவணமும் விபரமும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கோரப்படவில்லை என்பதையும் எடுத்துக் கூறினார்