இந்திய பிரதமருடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு சுமார் 15 நிமிடங்கள் மாத்திரமே வழங்கப்பட்ட நிலையில், தமது உரிய கலந்துரையாடல்களை நடத்துவதற்கு இது போதுமான காலமாக அமையவில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் பிரச்சினை குறித்து விரிவாக கலந்துரையாட வேண்டிய நிலைமை காணப்படுவதாகவும், தமக்கு அதற்கான சந்தர்ப்பத்தை புதுடெல்லியில் ஏற்படுத்தி தருமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தான் விரைவில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு உறுதியளித்ததாகஅக்கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இந்த நிலையில், தனது இலங்கை விஜயத்தை நிறைவு செய்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையிலிருந்து மாலை 4 மணியளவில் இந்தியா நோக்கி புறப்பட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.