உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அயைிறுதி ஆட்டம் ஆர்ரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணிக்கும், இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கிடையிலும் இன்று மாலை 3.00 மணிக்கு பேர்மிங்கமில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 49 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர்.
224 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணியின் ஆரம்ப வீரர்களான ஜோசன் ரோய் - ஜோனி பெயர்ஸ்டோ நல்லதொரு இணைப்பாட்டத்தை பகிர்ந்து கொண்டனர்.
இதனால் இங்கிலாந்து அணி 5 ஓவரில் 19 ஓட்டத்தையும், 10 ஓவரில் 50 ஓட்டத்தையும் பெற்றது. 14.5 ஆவது ஓவரில் ரோய் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசித் தள்ளி அரைசதம் கடக்க இங்கிலந்து அணி 15 ஓவர் நிறைவில் 95 ஓட்டங்களை பெற்றது.
16 ஆவது ஓவருக்கா ஸ்டீவ் ஸ்மித் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள அந்த ஓவரை எதிர்கொண்ட ரோய் தொடர்ச்சியாக மூன்று ஆறு ஓட்டங்களை விளாசித் தள்ளினார். அதனால் அந்த ஓவரில் மாத்திரம் இங்கிலாந்து அணி 21 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இந் நிலையில் 17.2 ஆவது ஓவரில் இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட் 124 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டது. அதன்படி பெயர்ஸ்டோ மொத்தமாக 43 பந்துகளை எதிர்கொண்டு 5 நான்கு ஓட்டம் அடங்கலாக 34 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, அதிரடிகாட்டி வந்த ரோய் 19.4 ஆவது ஓவரில் பேட் கம்மின்ஸின் பந்து வீச்சில் மொத்தமாக 65 பந்துகளை எதிர்கொண்டு 9 நான்கு ஓட்டம், 5 ஆறு ஓட்டம் அடங்கலாக 85 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (147-2).
தொடர்ந்து 3 ஆவது விக்கெட்டுக்காக ஜோ ரூட் - இயன் மோர்கன் ஜோடி சேர்ந்து சிறப்பாக அவுஸ்திரேலிய அணியின் பந்துகளை நான்கு திசைகளிலும் அடித்தாட இங்கிலாந்து அணி 29.2 ஆவது ஓவரில் 2 விக்கெட்டுக்களை இழந்து 200 ஓட்டங்களை கடந்தது.
இறுதியாக இங்கிலாந்து அணி ஓவரில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 226 ஓட்டங்களை பெற்று அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.
ஆடுகளத்தில் ரூட் 45 ஓட்டத்துடனும், மோர்கன் 49 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி நான்காவது முறையாகவும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளதுடன், 1992 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒருநாள் உலகக் கிண்ண அரங்கில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி 27 வருடகால தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அத்துடன் 1992 ஆம் ஆண்டுக்கு பின்னர் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளதும் விசேட அம்சமாகும்.
இந் நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நடப்பு உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியுடன் இங்கிலாந்து பலப்பரீட்சை நடத்தவுள்ளமையும் குறிப்பித்தக்கது.வீரகேசரி