தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற சம்பளத்திற்கு மேலதிகமாக நாளொன்றுக்கு 50 ரூபா அதிகரிப்பை வழங்கப்போவதாக வழங்கிய வாக்குறுதியை அமைச்சர் திகாம்பரம் தரப்பினர் நிறைவேற்ற வேண்டும். இதை அமைச்சர்களிடையே மோதலாக காட்டி தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்ற வேண்டாம் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்விற்கான கூட்டு ஒப்பந்த மீளாய்வு செய்யப்டும் எல்லா சந்தர்ப்ங்களிலும் அரசியல் தொழிற்சங்க இலாபத்திற்காக அமைச்சர் திகாம்பரத்தின் தரப்பினர் குட்டையை குழப்பி வருவதை வழக்கமாக செய்து வருகின்றனர். தோட்டத் தொழிலாளர்களுக்கு நன்மையை செய்வது போல காட்டிக்கொண்டு தொழிலாளர்களின் ஒற்றுமையை குழைத்து,அவர்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி பேச்சுவார்ததையின் வழுவை குறைத்து பெருந்தோட்ட கம்பனிகளின் கை ஓங்கச்செய்துவிட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரசை குற்றம் சாட்டுவதே இவர்களின் வழமையான வேலையாகிவிட்டது. இம்முறை அரசாங்கம் வழங்குவதாக ஒத்துக்கொண்ட சம்பள நிலுவை கொடுப்பனவை இல்லாமல் செய்தார்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிலாளர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக குற்றம் சுமத்தினர். 140 ரூபாவை சேர்க்காவிட்டால் பதவி விலகப்போவதாக அறிவித்துவிட்டு பின்னர் அப்படி சொல்லவில்லை என மறுதலித்தார்கள். நாளொன்றுக்க 50 ரூபா படி ஒரு வருடத்திற்கு அரசாங்க நிதியை பெற்றுத்தரப்போவதாக வாக்குறுதி வழங்கி ஆறு மாதங்கள் கடந்துவிட்டது. முதலில் கூட்டு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த திகதியிலிருந்து 50 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுமென அமைச்சர் மணோ கணேசன் தெரிவித்தார். பின்னர் ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து வழங்கப்படுமென அமைச்சர் திகாம்பரம் தெரிவித்தார், அதற்கு பின்பு மே முதலாம் திகதியிலிருந்து வழங்கப்படுமென இரண்டு அமைச்சர்களுமே தெரிவித்தனர். தற்போது கூட்டு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்து ஆறு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் முதலில் மூன்று வாரங்களில் 50 ரூபா வழங்கப்படுமென தெரிவித்த அமைச்சர் திகாம்பரம் மூன்று தினங்களுக்கு முன்னர் 10 அல்லது 20 நாட்களில் கிடைக்குமென்றார். ஆனால் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் இன்னும் ஒரு மாதத்தில் 50 ரூபா கிடைக்குமென்கின்றார். தற்போது இது கிடைக்காமலிருப்பதற்கு அமைச்சர் நவீன் திசாநாயக்க தான் காரணம் என்கின்றார். இந்த நாட்டில் நிலவுகின்ற இன வாத மேலாதிக்கத்தை பேரம் பேசும் சக்தியினூடாகவே முறியடிக்க வேண்டும். அந்த சக்தியை வைத்துக்கொண்டு மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவது குற்றம்சாட்டுபவரின் தலைமைத்துவ தகுதி தொடர்பான விடயமாகும். இதே போலத்தான் அமைச்சர் திகாம்பரம் கடந்தமுறை கூட்டு ஒப்பந்த காலத்தில் பிரதமர் ஜப்பான் சென்று வந்தவுடன் 1000 ரூபா கிடைக்குமென்றார்,பின்னர் பிரதமர் சீனா சென்று வந்தவுடன் கிடைக்குமென்றார்,அதற்கு பின்பு பிரதமர் இந்தியா சென்று வந்தவுடன் கிடைக்குமென்றார்.இப்போது தோட்டத் தொழிலாளர்களின் துரோகிகள் யார் என்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் யார் வேண்டுமானாலும் வீராப்பும், வீர வசனமும் பேசலாம். ஆனால் தோட்ட தொழிலாளர்களுக்காக பெருந்தோட்ட கம்பனிகளுடன் பேரம் பேசுவதற்கு ஆறுமுகன் தொண்டமானினாலேயே முடியும் என்பதை மலையக மக்கள் கடந்த நான்கு வருட காலத்தில் நன்றாக புரிந்துகொண்டுள்ளனர். மலையக மக்களை வழிநடத்துவதற்கு உறுதியான தலைமைத்துவம் இருப்பதை ஆட்சியாளர்கள் விரும்புவதில்லை. தலையாட்டி பொம்மைகளை தலைவர்களாக வைத்துக்கொண்டு அரசாங்கத்தின் மூலம் மலையக மக்களுக்காக பெரிதாக சாதித்துவிட்டதாக அவர்களை வைத்தே சொல்ல வைக்கப்படுகிறது. மலையக மக்கள் வாழுகின்ற பிரதேசங்களுக்கு பிரதேச செயலகம், பிரதேச சபை, கோரிக்கைகள் யாரால் எப்போது முன்வைக்கப்பட்டது என்பதற்கு நீண்ட வரலாறு உண்டு. அதற்கான வரைபடத்தை கூட இலங்கை தொழிலாளர் காங்கிரசே தயாரித்து கொடுத்தது.மலையக அதிகாரசபைக்கு அழகான பெயர்பலகையை போட்டுவிட்டு; சாதனை படைத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. மலையக அதிகார சபையின் மூலம் எந்தவொரு வேலைத்திட்டமும் இதுவரை முன்னெடுக்கவில்லை. வீடமைப்பு திட்டங்கள் மலையக மக்களின் இருப்பையும் கௌரவத்தையும் வெளிகாட்டுவதாக இருக்கிறதா? வீடு வழங்குவதில் வெளிப்படையாகவே பாரிய ஊழல் செய்யப்படுகிறது. வீடு தேவையானவர்கள் புறக்கணிக்கப்பட்டு கட்சிக்கு வந்தால் வீடு என்ற பலாத்காரம் திணிக்கப்படுகிறது. இவ்வாறு கட்டப்படும் வீடுகள் எவ்வளவு காலத்திற்கு தாக்குபிடிக்கும் என்ற சந்தேகம் எல்லோராலும் கேள்வி எழுப்பப்படுகிறது. இது தொடர்பாக இந்திய அரசாங்கம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என பல முறை கோரியிருக்கிறோம். அத்துடன் காணி உறுதி வழங்கப்படுவதாக சொல்லப்பட்டாலும் அந்த உறுதிகடிதங்கள் நாட்டில் ஏனைய பிரதேசங்களில் வழங்கப்படுகின்ற காணி உறுதிகளுக்கு ஒப்பானதா? அந்த உறுதிகளில் ஒன்றையாவது இலங்கையிலுள்ள வங்கி ஒன்று ஏற்றுக்கொண்டு கடன் வழங்கியுள்ளதா? இலங்கை தொழிலாளர் காங்கிரசை பொருத்தவரையில் மலையக மக்களை இரண்டாந்தர பிரஜைகளாக நடத்துத்துவதற்கு இடந்தரமுடியாது. அதற்காக உறுதிமிக்க தலைமைத்துவத்தின் அவசியத்தை உணர்ந்து செயற்பட வேண்டியது தற்போதய தேவையாகும் எனவும் தெரிவித்துள்ளார்.