இது பற்றி கிழக்கு முஸ்லிம் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது,
கிழக்கு தமிழர் அமைப்பு என்ற புதியதொரு பெயரில் அதன் தலைவர் த. கோபாலகிருஷ்னன் என்பவரால் கல்முனை உப பிரதேச செயலாளரிடம் முன் வைக்கப்பட்டுள்ள கல்முனை பிரச்சினைக்கான தீர்வு என்பது வெறும் நகைப்புக்கிடமாக உள்ளது.
கல்முனை உப பிரதேச செயலகம் என்பது நிலத்தொடர்பற்றது என்பதையும் அது ஒரு தற்காலிக தீர்வு என்பதையும் இவர்கள் பின் வருமாறு ஏற்றுக்கொள்கிறார்கள்.
கல்முனை வடபகுதியில் அமைந்த கிராம சேவகர்களில் தமிழ்ப் பெரும்பான்மைக் கிராம சேவகர் பிரிவுகளுக்குப் பொறுப்பாகக் கடமையாற்றிய கிராம சேவகர்கள் கல்முனை வடக்கு உப செயலகத்திற்குப் பொறுப்பான உதவி அரசாங்க அதிபரின் கீழும் முஸ்லிம் பெரும்பான்மைக் கிராமசேவகர் பிரிவுகளுக்குப் பொறுப்பாகக் கடமையாற்றிய கிராம சேவகர்கள் பிரதான அலுவலகத்திற்குப் பொறுப்பான (கல்முனை) உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரம் படைத்த அரசாங்க அதிபரின் கீழும் கடமையாற்றப் பணிக்கப்பட்டனர். இந்த ஏற்பாடு அன்றிருந்த களநிலையில் ஒரு தற்காலிக ஏற்பாடே தவிர இது வழமையான அல்லது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிருவாக ரீதியான நடைமுறை அல்ல.
அதே போல் கிழக்கு தமிழ் கூட்டமைப்பு தனது அறிக்கையில் பின்வருமாறும் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை கல்முனை வடக்கு எனக் குறிக்கப்படும் உப பிரதேச செயலகப் பிரிவு எல்லைக்குள் தற்போது 15 முஸ்லிம் பெரும்பான்மைக் கிராமசேவகர் பிரிவுகள் மேலே குறிப்பிடப்பட்ட 29 தமிழ்ப் பெரும்பான்மைக் கிராமசேவைகள் பிரிவுகளுக்கும் மேலதிகமாக உள்ளன. இவற்றிற்குப் பொறுப்பான கிராம சேவகர்கள் முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதான பிரதேச செயலகப் பிரிவுக்குப் (கரவாகுப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவு அல்லது கல்முனைப் பிரதேச செயலகப் பிரிவு) பொறுப்பான அதிகாரம் படைத்த பிரதேச செயலாளரின் கீழ் கடமையாற்றுகின்றனர்.
இந்த 15 முஸ்லிம் பெரும்பான்மை கிராம சேகர் பிரிவுகளும் தற்போது பெரியநீலாவணை முஸ்லிம் பிரிவு, மருதமுனை, நற்பிட்டிமுனை முஸ்லிம்பிரிவு மற்றும் இஸ்லாமாபாத் ஆகியவற்றில் பூகோளரீதியாக நிலத்தொடர்பற்ற வகையிலே அடங்கியுள்ளவை.
இவ்வாறு கல்முனையை தமிழ் பயங்கரவாதிகள் கிழக்கின் அதிகாரத்தில் இருந்த போது நிலத்தொடர்பற்ற முறையில் அமைக்கப்பட்டதே தற்போதைய கல்முனை உப பிரதேச செயலகம் என்பது இந்த அறிக்கை மூலம் தெரிகிறது. ஆனாலும் இதற்கு தீர்வு என வரும் போது தீர்வை கிழக்கு தமிழ் கூட்டமைப்பு முன் வைத்திருப்பது சிரிப்பை தருகிறது.
இதன் படி சுருக்கமாக சொல்லப்போனால் கல்முனைக்குடிக்கு மட்டும் தனியான செயலகத்தை கொடுத்து விட்டு 99 வீதம் முஸ்லிம்களின் நிலங்களும் வர்த்தக நிலையங்களும் உள்ள கல்முனை நகரை கள்ளத்தனமாக அபகரிக்க முயலும் கபடத்தனமான தீர்வையே கிழக்கு தமிழ் கூட்டமைப்பு முன் வைத்துள்ளது. இத்தீர்வை கிழக்கு முஸ்லிம் கூட்டமைப்பு முற்றாக நிராகரிப்பதுடன் கல்முனையை மூன்றாக பிரிப்பதாயின் பின் வரும் தீர்வை முன் வைக்கிறது.
1. கல்முனை ஸாஹிரா முதல் தாளவெட்டுவான் வரை கல்முனை பிரதேச செயலஜமாக இருக்கும். இது நிலத்தொடர்புள்ளதாகவும் தமிழ், முஸ்லிம் என்ற இனரீதியற்ற முறையிலும் இருக்கும். இதற்குள் நற்பிட்டிமுனையும் வயல் வெளியூடான நிலத்தொடர்புடன் வரும்.
2. தாளவெட்டுவான் ஆரம்பிக்கும் பாண்டிருப்பு முதல் சேனைக்குடியிருப்பு, மணச்சேனை ஆகிய நிலத்தொடர்புள்ள இடங்களை உள்ளடக்கிய பாண்டிருப்பு பிரதேச செயலகம் அல்லது கல்முனை வடக்கு செயலகம்.
3. மருதமுனை நீலாவணையை இணைத்து மருதமுனை செயலகம்.
இத்தீர்வையே உலமா கட்சியும் 2010ம் ஆண்டு கல்முனையில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்து ஊடகங்களிலும் வெளிவந்தது. கல்முனையில் நிலத்தொடர்புள்ள செயலகங்களும் இன ரிதீயற்ற முறையில் ஏற்படுத்தக்கூடிய செயலகங்களும் உருவாக மேற்படி தீர்வையே கிழக்கு முஸ்லிம் கூட்டமைப்பு முன் வைக்கிறது.