ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 40 ஆவது போட்டி மோர்த்ரசா தலைமையிலான பங்களாதேஷ் மற்றும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு பேர்மிங்கமில் ஆரம்பமானது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 314 ஓட்டங்களை குவித்தது.
315 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணி 48 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 286 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 28 ஓட்டத்தனால் தோல்வியை சந்தித்துள்ளது.
பங்களாதேஷ் அணி சார்பில் தமீம் இக்பால் 22 (31) ஓட்டத்துடனும், சவுமி சர்கார் 33 (38) ஓட்டத்துடனும், சஹப் அல்ஹசன் 66 (74) ஓட்டத்துடனும், முஷ்பிகுர் ரஹும் 24 (23) ஓட்டத்துடனும், ஹசேன் 3 (7) ஓட்டத்துடனும் சபீர் ரஹ்மான் 36 (36) ஓட்டத்துடனும், மோர்த்ரசா 8 (5) ஓட்டத்துடனும், ரூபல் ஹுசேன் 9 (11) ஓட்டத்துடனும், முஸ்தாபிசுர் ரஹ்மான் டக்கவுட்டுடனும் ஆட்டமிழந்ததுடன், சைபுதீன் மொத்தமாக 38 பந்துகளை எதிர்கொண்டு 9 நான்கு ஓட்டம் அடங்கலாக 51 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
இப் போட்டியில் பும்ரான ரூபல் ஹுசேன் மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மானை அடுத்தடுத்து ஆட்டமிழக்க செய்து இந்திய அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் பும்ரா 4 விக்கெட்டுக்களையும், பாண்டியா 3 விக்கெட்டுக்களையும் மொஹமட் ஷமி, சஹால் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
இப் போட்டியின் முடிவினால் நடப்பு தொடரில் இந்திய அணி இரண்டாவது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளதுடன், பங்களாதேஷ் அணி ஐந்தாவது அணியாக அரையிறுதிக்கான வாய்ப்பினை இழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.