சஹ்ரான் ஹாஷிம் குழுவினரால் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு, பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட டொல்பின் ரக வான் கடும் நிபந்தனையுடன் கல்முனை நீதவான் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியில் கடந்த ஏப்ரல்-26 ஆம் திகதி தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற முன்னர் அத்தாக்குதலில் மரணமடைந்த சஹ்ரான் குழுவினரால் வாடகைக்கு பெறப்பட்டு, அதன் மூலமே சாய்ந்தமருதை வந்தடைந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவ்வாகனம் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டிருந்தது.
இன்று புதன்கிழமை (03) நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் இது தொடரபான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது 50 இலட்சம் ரூபா பிணையில் குறித்த வான் விடுவித்த நீதிவான், வழக்கு தவணை நிறைவுறும் வரை வாகன ஆவணத்தில் பெயர் மாற்றம் செய்தல், விற்பனை செய்தல், கைமாற்றுதல், உருமாற்றுதல் போன்ற செயற்பாட்டில் ஈடுபட வேண்டாம் என அதன் உரிமையாளருக்கு உத்தரவிட்டார்.
அதேவேளை இவ்வாகனத்தை வாடகை அடிப்படையில் பெற்று, சஹ்ரான் குழுவினருக்கு பயன்படுத்திய சாரதி கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வாகனம் தொடர்பான வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.