வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நோர்வூட் பிரதான பொறியியலாளர் பிரிவுக்கு உட்பட்ட தோட்டப்பகுதிகளின் உள்ளகப்பாதைகள் சிலவற்றைச் செப்பனிடுவதற்காக அமைச்சர் பழனி திகாம்பரம் , பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் ஆகியோரின் ஆலோசனைக்கேற்ப ரன் மாவத் பாதை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒன்பது கோடி 75 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச்செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது
தோட்டப் பகுதிகளிலுள்ள பாதைகளின் சீர்கேடு தொடர்பாக அமைச்சர் பழனி திகாம்பரம், பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் ஆகியோர் நெடுஞ்சாலைகள்,வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வந்ததைத் தொடர்ந்து பொகவந்தலாவை,அட்டன் ,நோர்வூட்,டிக்கோயா,கினிகத்தேனை ஆகிய பகுதிகளிலுள்ள தோட்டங்களின் உள்ளகப் பாதைகள் சில காபட் மற்றும் கொங்ரிட் மூலமாக செப்பனிடப்படவுள்ளன.அமைச்சர் திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப பன்மூர் தோட்டம் முதல் எபோட்ஸிலி தோட்டம் வரையிலான பிரதான பாதைக்குக் காபட் இடுவதற்காக 3 கோடி ரூபாயும் கெம்பியன் முதல் நோர்த்கோ தோட்டம் வரையிலான பாதைக்குக் காபட் இடுவதற்கு 2 கோடி ரூபாவும் மேபீல்ட் சந்தியிலிருந்து மேபீல்ட் தோட்டம் வரையிலான பாதைக்குக் காபட் இடுவதற்கு 1 கோடி 20 இலட்சம் ரூபாவும் இன்ஜெஸ்ட்ரி தோட்ட நுழைவாயில் முதல் இன்ஜெஸ்ட்ரி பாடசாலை வரையிலான பாதையை கொங்ரிட் இடுவதற்கு 1 கோடி ரூபாவும் கினிகத்தேனை கெனில்வேர்த் நாலாம் பிரிவு தோட்டப்பாதைக்குக் கொங்ரீட் இடுவதற்கு 15 இலட்சம் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜியின் ஆலோசனைக்கேற்ப கொட்டகலை கேஜிகே தோட்டப்பாதைக்குக் காபட் இடுவதற்கு 1 கோடி ரூபாவும் மேபீல்ட் தோட்ட பிட்டர்வின் பிரிவு பாதை,டிக்கோயா என்பீல்ட் ரொஸ்கிரியா தோட்டப்பாதை ஆகியனவற்றுக்குக் காபட் இடுவதற்கு தலா 40 இலட்சம் ரூபாவும் நோர்வூட் சென்ஜோன் டிலரி தோட்டம் முதலம் கிவ் தோட்டத்துக்குச் செல்லும் பாதையின் ஒரு பகுதி பாதையைக் கொங்ரிட் இடுவதற்கு 50 இலட்சம் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப்பாதைகளின் செப்பனிடும் நடவடிக்கைகள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் இடம் பெறவுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.