ஐ.எல்.எம்.ரிஸான்-
அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) இருமொழிக் கற்கைப் பிரிவு மாணவர்களின் பெற்றார் சங்கம் ஏற்பாடு செய்த க.பொ.த. சாதாரண தரம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றாருக்கான கூட்டத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ் என்.எம்.அப்துல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
சங்கத்தின் தலைவரும் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக உத்தியொகத்தருமான எம்.ஏ.எம்.இஷ்ஹாக் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சங்கத்தின் செயலாளர், ஆசிரியர் எம்.ஐ.ஹாபில், பொருளாளர், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ.கே.றஹ்மத்துல்லாஹ், முகாமையாளர், அதிபர் எம்.எப்.நழீம்;, அட்டாளைச்சேனை பிரதேச செயலக உளவளத்துணையாளர் மனூஸ் அபூபக்கர் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேல் நீதிமன்ற நீதிபதி அப்துல்லாஹ் மேலும் கூறுகையில், பாடசாலைகளில் கல்வி பெறும் மாணவர்கள் பரீட்சைகளில் சித்தியடைவதை இலக்காகக் கொண்டு கல்வி கற்க வேண்டும். அதிபர், ஆசிரியர், பெற்றாரின் எதிர்பார்ப்பு வீண் போகாதவாறு தங்களது எதிர்கால கல்விச் செயற்பாடுகளை சிறந்த முறையில் திட்டமிட்டு முன்னெடுக்க வேண்டும்.
பாடசாலையில் கல்வி பெறும் காலம் மிகவும் பெறுமதியானது. பிற்காலத்தில் பெற்றுக் கொள்ள முடியாத இக்காலத்தை மாணவர்கள் நிறைவாகப் பயன்படுத்தி, தங்களது எதிர்காலத்தை ஒளிமயமாக்க வேண்டும். அவ்வாறில்லாது, தங்களது மனம் போன போக்கில் காலத்தை வீணே கழித்து, பின்னாட்களில் மனம் வருந்தக் கூடாது.
பாடசாலை மாணவர்கள் கல்வியிலயே அதிகம் கவனம் செலுத்துதல் வேண்டும். அதனைவிடுத்து, இன்று இளந்தலைமுறையினருக்கு பெரும் சவாலாக மாறியுள்ள கைத் தொலைபேசி அல்லது மோட்டார் சைக்கிளில் காலம் கடத்தினால் எதிர்காலம் சூன்யமாகிப் போகும்.
தங்களது பிள்ளைகளின் கல்வி மற்றும் அன்றாட செயற்பாடுகளில் பெற்றார்கள் அதீத கவனம் செலுத்த வேண்டும். பாடசாலை மற்றும் மாலைநேர வகுப்புக்களுக்குச் ஒழங்கு முறையாகச் செல்கின்றனரா?, நண்பர்கள் யார்?, சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்கின்றனரா?, தூங்குகின்றனரா?, நேரத்திற்கு தூக்கம் விழித்து எழும்புகின்றனரா? என்பது தொடர்பில் முறையாகக் கண்காணிக்க வேண்டும். பெற்றார்கள் தங்களது பிள்ளைகளுடன் அன்பு பாராட்டி, நெருக்கமான உறவு கொள்ள வேண்டும்.