மந்திரிப்பதவி யாருக்கு ? மக்களுக்கா ? அமைச்சர்களின் எடுபிடிகளுக்கா ?

முகம்மத் இக்பால் சாய்ந்தமருது-

ந்திரிப்பதவி யாருக்கு ? மக்களுக்கா ? அமைச்சர்களின் எடுபிடிகளுக்கா ? ஒப்பந்தங்களை மீறிய பேரினவாத அரசு.

பேரினவாத தேசிய கட்சியின் முகவரான பௌசி தலைமையில் நடைபெற்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் அமைச்சர் பதவிகளை மீண்டும் பாரமெடுக்கத் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதனை மக்கள் மத்தியில் நியாயப்படுத்தும் முகமாக தங்களது கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு உறுதிமொழி வழங்கியதாகவும், ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்தபோது மக்கள் மனதில் இருந்த மகிழ்ச்சியும், ஆரவாரமும் மீண்டும் பதவிகளை ஏற்கப்போவதாக அறிவித்தபின்பு எழவில்லை. மாறாக ராஜினமா செய்தது ஒரு நாடகமா என்று பேசிக்கொள்வதனை காணக்கூடியதாக உள்ளது.

சுதந்திரத்துக்கு பின்பு இந்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்துவந்த இரண்டு பிரதான கட்சிகளும் பதவி என்னும் சலுகைகளை வழங்கியதை தவிர, சிறுபான்மை சமூகத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களில் எதனை நடைமுறை படுத்தியுள்ளது ?

பண்டா – செல்வா ஒப்பந்தம் தொடக்கம் இன்று வரைக்கும் தமிழ், முஸ்லிம் தலைவர்களுக்கும், அரசாங்கங்களுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களும் கிழித்தெறியப்பட்டது.

அத்துடன் சர்வதேசத்தின் முன்னிலையில் பெருமெடுப்பில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு துறை அதிகாரம் இல்லாத இன்றைய அரசாங்கம் இந்த ஒப்பந்தம் மூலம் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பினை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும் ?

அத்துடன் ஒப்பந்தம் என்றதும் பௌத்த பிக்குகள் அதனை நடைமுறைப்படுத்த ஒருபோதும் விடமாட்டார்கள் என்பதும் கடந்தகால வரலாறாகும்.

தீவிரவாதி சஹ்ரான் குழுவினரின் தாக்குதலுக்கு பின்பு ஆயிரக்ககணக்கில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள எமது சகோதரர்கள் விடுதலை செய்யப்பட்டும், இனவாதிகளின் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு பெற்றுக் கொடுக்கப்பட்டும்,

மற்றும் வடகிழக்கில் மீட்கப்படாத காணிகளில் சிலதையாவது மீட்கப்பட்ட பின்பும் அமைச்சர் பதவிகளை மீண்டும் பொறுப்பெடுப்பதாக தீர்மானித்திருந்தால் அந்த தீர்மானத்தினை மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் எமது மக்களின் எந்தவித பிரச்சினைகளும் தீர்க்கப்படாத நிலையில், அரசாங்கத்துடன் ஒப்பந்தம் மட்டும் செய்துகொண்டதாக அறிவித்துவிட்டு எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் திடீரென இவ்வாறு தீர்மானிப்பதற்கான காரணமென்ன ?

இது மேற்கு நாடுகளின் அழுத்தமா ? அல்லது தங்களது அல்லக்கைகளின் அழுத்தமா ? என்ற வலுவான சந்தேகம் எழுகின்றது.

எனினும் கடந்த காலங்களில் அமைச்சு அதிகாரங்களை நன்றாக அனுபவித்து பழக்கப்பட்ட அமைச்சர்களின் எடுபிடிகளும், அல்லக்கைகளும் இப்போது அதிகாரமின்றி மன உளைச்சலுக்கு உள்ளானதால் தினமும் அமைச்சர் பதவிகளை பொறுப்பேற்கும்படி அழுத்தம் வழங்கிவருவதாக அறியமுடிகின்றது.

எனவே எமது மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் வழமைபோன்று வெறும் ஒப்பந்தம் செய்ததாக கூறிக்கொண்டு மீண்டும் அமைச்சர் பதவிகளை பொறுப்பெடுப்பதனை சமூக உணர்வுடன் மனச்சாட்சி உள்ள எந்தவொரு மனிதனாலும் ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -