அபுஹின்சா-
அண்மைக்காலமாக பேசுபொருளாக மாறியுள்ள கல்முனை வடக்கு உப பிரதேச செயலக உருவாக்கத்தின் போது கல்முனை முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் கல்முனை பிரதேச செயலக பிரச்சினைகள் குறித்து அட்டாளைச்சேனை பொது மக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் இன்று (07) அட்டாளைசேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் தலைவர் எம்.எஸ். ஜுனைதீனின் தலைமையில் இடம்பெற்றது.
இவ்விளக்க கூட்டத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம். எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், கல்முனை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ், பிரதேச சபை உறுப்பினர்கள், பள்ளிவாசல் தலைவர்கள், கல்விமான்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அட்டாளைசேனை மக்களுக்கு கல்முனை பிரதேச விவகாரம் சம்மந்தமாகவும், கடந்த கால வரலாறுகளையும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் எச்.எம் நிசாம் அவர்களினால் விளக்கம் அளிக்கப்பட்டது.
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரமுயர்த்தலினால் கல்முனை முஸ்லிம்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புக்கள், தமிழ் மக்களின் மனதில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் விதைக்கும் இனவாதத்தில் நாட்டின் நிலைமைகள் குறித்து முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் மக்களுக்கு தெளிவூட்டினார்.
இதனை அடுத்து அட்டாளைசேனை மக்கள் கல்முனை வடக்கு உப பிரதேச செயலக தரமுயர்த்தல் விவகாரத்திற்கு எதிராக கல்முனை முஸ்லிம் மக்களுக்கு தங்களது பேராதரவினை வழங்குவதாக இதன்போது உறுத்தியளித்தனர்.